ஜோர்ஜியா ஓ'கீஃப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜோர்ஜியா ஓ'கீஃப்
ஜோர்ஜியா ஓ'கீஃப்
தேசியம்ஐக்கிய அமெரிக்கா
அறியப்படுவதுஓவியம்
அரசியல் இயக்கம்அமெரிக்க நவீனத்துவம்

ஜோர்ஜியா டோட்டோ ஓ'கீஃப் (Georgia O'Keeffe, நவம்பர் 15, 1887 – மார்ச் 6, 1986) ஓர் அமெரிக்க ஓவியக் கலைஞர். குறிப்பிடத்தக்க நவீன அமெரிக்க ஓவியர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

விசுகொன்சின் மாநிலத்தின் சன் பிரைய்ரி நகரில் பிறந்த ஓ'க்கீஃப் 1916களில் தான் நியூயார்க் நகரின் கலைச் சமூகத்தின் கவனத்தைக் கவர்ந்தார். அந்தக் காலகட்டத்தில் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் பெண்கள் கலைத்துறையில் பயிற்சிபெறுவதும் பெண் கலைஞர்கள் புகழ்பெறுவதும் பாராட்டப்படுவதும் அரிதாக இருந்தது. பத்தாண்டுகளுக்குள்ளேயே அமெரிக்காவின் மிக முக்கிய நவீனத்துவ ஓவியர்களில் ஒருவராக தம்மை நிலைநிறுத்திக்கொண்டார். எனவே முற்றிலும் ஆண்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த அமெரிக்க ஓவியத்துறையில் பெண்களின் இடத்திற்கு வழிவகுத்தார். 1986ஆம் ஆண்டில் தமது 98வது அகவையில் காலமானபோது அமெரிக்காவின் மிகவும் பாராட்டப்பட்ட பண்பாட்டுச் சின்னமாக விளங்கினார்.

அவரது 1910, துவக்க 1920களின் பண்பியல் ஓவியங்கள் அமெரிக்கக் கலைஞர் ஒருவரால் ஆக்கப்பட்ட சிறந்த படைப்புக்களாகக் கருதப்படுகின்றன. 1920களில் மலர்களின் மலரும் பொழுதை ஒரு உருப்பெருக்கி மூலம் காட்டுவதைப் போல அண்மைக் காட்சிகளாக பெரும் வடிவில் ஆக்கியது வழமையான மலர் ஓவியங்களிலிருந்து வேறுபட்டு புதுமையாக இருந்தது. ஓ;கீஃப் வரைந்த நியூயார் நகரத்தின் பல ஓவியக்காட்சிகள் இன்றளவும் இந்த நகரத்தைக் குறித்த சிறந்த ஓவியங்களாக விளங்குகின்றன. 1929ஆம் ஆண்டு முதல் ஆண்டின் சில காலங்களில் வடக்கு நியூ மெக்சிகோவில் கழித்தார்; 1949ஆம் ஆண்டு முதல் இங்கேயே வசிக்கத் துவங்கினார். இந்தக் காலங்களில் அப்பகுதியைக் குறித்த பல ஓவியங்கள் மூலம் - கடினமண் கட்டமைப்பிலான தேவாலயங்கள், பண்பாட்டு சின்னங்கள், பாலவனத் தரையில் அவர் கண்டெடுத்த எலும்புகளும் கற்களும் - அமெரிக்க தன்மேற்கு கலாச்சாரத்தின் பிரதிநிதியாக விளங்கினார். ஓ'கீஃப் வாழந்து பணிபுரிந்த இந்தப் பகுதி “ஓ'கீஃப் நாடு" என அழைக்கப்படலாயிற்று.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோர்ஜியா_ஓ%27கீஃப்&oldid=3246861" இலிருந்து மீள்விக்கப்பட்டது