உள்ளடக்கத்துக்குச் செல்

ஜார்ஜ் தாம்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜார்ஜ் தாம்சன் (George Derwent Thomson, 1903-பெப்ரவரி 3, 1987) ஒரு பிரித்தானிய மார்க்சியப் புலமையாளர், மானிடவியலாளர், பண்டைய கிரேக்கவியல் மற்றும் கிரேக்க மொழி வல்லுநர். தமிழ்ப் புலமையாளர்களான க. கைலாசபதி, கார்த்திகேசு சிவத்தம்பி ஆகியோரின் கலாநிதிப் பட்ட நெறியாளர். மார்க்சியத்தைப் பயில்வதற்கான அடிப்படை நூல்களை எழுதியுள்ளர்.

ஜார்ஜ் டெர்வென்ட் தாம்சன் ஒரு மார்க்சிய தத்துவவியலாளர். ஐரீஷ் மொழி அறிஞர். ஆங்கிலத்தில் குறிப்பிடத்தக்க செவ்வியல் அறிஞர். அவர் 1903ல் பிறந்தார். 1987ல் இங்கிலாந்தின் பிர்மிங்காம் மாகானத்தில் இறந்தார்.

ஐரீஷில் உள்ள டப்ளினிலும், இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜிலும் தன்னுடைய கல்வியை முடித்திருந்த அவர். கிரேக்க நாடகங்கள், இலக்கியங்களில் ஆய்வுகளை மேற்கொண்டவர். 1936 முதல் பிர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்தார். அதே ஆண்டிலிருந்து அவர் பிரிட்டன் பொதுவுடைமைக் கட்சியின் உறுப்பினராகவும் தன்னை இணைத்துக் கொண்டார். ஜார்ஜ் தாம்சன் கிரேக்க நாடகங்களை மார்க்சிய அணுகுமுறைகளில் வாசிக்கும் வழிமுறையின் முன்னோடியாகத் திகழ்ந்தார். 1941ல் எழுதப்பட்ட அவருடைய “அசீலியசும் ஏதென்சும்” என்ற புத்தகமும், 1945ல் எழுதப்பட்ட “மார்க்சியமும் கவிதையும்” என்ற புத்தகமும் சர்வதேச கவனத்தைப் பெற்ற புத்தகங்களாகும். அவருடைய மற்றொரு முக்கிய நுால் “முதல் தத்துவவாதிகள்” ஆகும்.

1951ல் பிரிட்டன் பொதுவுடைமைக் கட்சி “சோசலிசத்திற்கான பிரித்தானிய பாதை” என்கிற தனது திட்டத்தை வெளியிட்ட பொழுது, ஜார்ஜ் தாம்சன் தான் அதன் செயற்குழுவில் இருந்து அத்திட்டத்தை எதிர்த்து வாக்களித்த ஒரே உறுப்பினர். அவர் கட்சியின் பண்பாட்டு குழுவிலும் வேலை செய்துள்ளார்.

1949ல் வெற்றிபெற்ற சீனப் புரட்சி அவர் மீது அபரிமிதமான தாக்கத்தை ஏற்படுத்தியது, அதிலிருந்து துவங்குகிறது அவருக்கும் பிரித்தானிய பொதுவுடைமைக் கட்சிக்கும் இடையிலான முரண்பாடுகள், அது அவர் அதிலிருந்து வெளியேறியதில் வந்து முடிந்தது. இவை அவரை அவரது அரசியல் நம்பிக்கைகளிலிருந்து விலக்கிவிடவில்லை. அவர் தொழிலாளர்களுக்கு அரசியல் வகுப்புகள் எடுப்பதையும், பிர்மிங்ஹாம் தொழிற்சாலை தொழிலாளர்கள் மத்தியில் விரிவுரை ஆற்றுவதையும் தொடர்ந்து மேற்கொண்டார்.

மார்க்சியம் குறித்து அவர் எழுதிய மூன்று முக்கிய நுால்கள் 1970ல் சீன கொள்கை ஆய்வு குழுவால் வெளியிடப்பட்டது. அவை, மார்க்ஸ் முதல் மாசேதுங் வரை: புரட்சிகர இயங்கியல் பற்றிய ஒரு ஆய்வு (1971); முதலாளியமும் அதன் பிறகும்: சரக்கு உற்பத்தியின் தோற்றமும் வீழ்ச்சியும் (1973); மனித சமூக சாரம்: கலை அறிவியலின் மூலாதாரங்கள் (1974) ஆகும்.

தமிழி்ல் இம்மூன்று நுால்களையும் முறையே தோழர்கள் இன்குலாப், எஸ்.வீ.ஆர்., கோ. கேசவன் ஆகியோர் மொழிபெயர்த்துள்ளனர். இந்நுால்கள் மார்க்சிய-லெனினிய கட்சி வட்டாரங்களில் 70கள் முதல் முக்கிய பாட நுால்களாக குறிப்பிடப்பட்டன. இந்நுால்கள் மிகுந்த முக்கியத்துவம் உடையவையாக பல இடங்களிலும் மேற்கோள் காட்டப்பட்டன.

மார்க்ஸ் முதல் மாசேதுங் வரை நுாலின் முன்னுரையில் இந்நுால் குறித்து மூன்று விசயங்களை அவர் குறிப்பிடுகிறார்.

  • இரஷ்யப் புரட்சி பற்றியும் சீனப் புரட்சி பற்றியும் ஆராயும் மார்க்சிய ஆய்வு இது என்கிறார்.
  • புரட்சிகர போராட்டங்களின் வெளிச்சத்தில்தான் தத்துவத்தை புரிந்து கொள்ள முடியும் என்கிறார்.
  • பிரித்தானிய பொதுவுடைமைக் கட்சியின் திருத்தல்வாதத்திற்கு எதிரான போராட்டத்தில் அவரும் அவரது ஆசிரியரான டக்ளஸ் கார்மனும் நடத்திய போராட்டத்தின் பகுதியாக இவ் எழுத்துக்களை சுட்டுகிறார்.

முதலாளியமும் அதன் பிறகும் நுாலின் முன்னுரையில் ஜார்ஜ் தாம்சன் இந்நுால் குறித்து மூன்று அம்சங்களை

  1. முதல் நுாலுக்கான துணை நுாலாக, வரலாற்று பொருள்முதல்வாதம் பற்றி தொடக்க கல்வி கற்பவருக்கான சுருக்கமான அறிமுகத்தை வழங்குவது.
  2. மனித நாகரிகத்தின் வளர்ச்சியில் சரக்கு உற்பத்தி ஆற்றிய பங்கிற்கு தனிக் கவனம் செலுத்துவது.
  3. சோசாலிசப் பொருளாதாரத்தில் எவ்வாறு சரக்கு உற்பத்தி கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது என்பனவற்றை குறிப்பிடுகிறார்.

இந்த வரிசையின் மூன்றாவது புத்தகமாகிய “மனித சமூக சாரம்” என்ற நுாலில்

  1. இந்நுால் மார்க்சிய அறிமுகத்தின் முடிவுரையாக எழுதப்படுகிறது.
  2. மூன்றையும் ஒரு சேரப் பார்க்கையில் இவை மார்க்சியத்தின் அரசியல், வரலாற்று, தத்துவார்த்தப் பகுதிகளை உள்ளடக்கியவையாக உள்ளன
  3. ஏனைய இரு நுால்களுக்கும் இதற்கும் உள்ள வித்தியாசம் இந்நுாலில் நான் வைத்துள்ள பெரும்பாலானவை - குறிப்பாக கலையும் அறிவியலும் சமூக உழைப்பினின்று தோன்றியவை என்றும், அவை . இரண்டும் ஒன்றுக்கொன்று ஆதாரமாக உள்ள இருவகைப்பட்ட வடிவங்கள் போன்றவை - என் சொந்த ஆய்வுகளின் முடிவுகளையே ஆதாரமாகக் கொண்டவை

எனவும் குறிப்பிடுகிறார்.

தமிழில் வெளிவந்துள்ள இவருடைய நூல்கள்

[தொகு]
  1. மார்க்ஸ் முதல் மாசேதுங் வரை
  2. முதலாளியமும் அதன் பிறகும்
  3. மனித சாரம்
  4. சமயம் பற்றி
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜார்ஜ்_தாம்சன்&oldid=3925102" இலிருந்து மீள்விக்கப்பட்டது