சோதகம் அம்மன்ன ராஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


சோ. அம்மன்ன ராஜா அல்லது சோதகம் அம்மன்னா ராஜா (Chodagam Ammanna Raja)(6 சூன் 1909 - 22 பிப்ரவரி 1999) என்பவர் இந்தியச் சுதந்திர இயக்க ஆர்வலர் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ஆவார்.[1]

இளமை[தொகு]

1909ஆம் ஆண்டு சூன் 6ஆம் தேதி பண்டாரில் ஸ்ரீ கந்தம் வீரய்யா நாயுடு மற்றும் ஸ்ரீமதி நாகரத்தினம்மா ஆகியோருக்குப் மகளாகப் பிறந்தார் அம்மன்னா. இவர் பதினொரு குழந்தைகளில் ஒருவர். இவர் ராஜமன்றியில் கல்வி பயின்றார். 1932-ல் சென்னையில் இளங்கலை பட்டம் மற்றும் எல். டி. முடித்தார். இவரது தந்தை ஓய்வு பெற்ற பிறகு, இவர் சிறிது காலம் செகந்திராபாத் மற்றும் பாபட்லாவில் ஆசிரியராக பணியாற்றினார்.

அரசியல்[தொகு]

சரோஜினி நாயுடு மற்றும் துர்காபாய் தேஷ்முக் ஆகியோரின் ஆதரவுடன் இந்தியத் தேசிய காங்கிரசின் உறுப்பினராக ஏலூரு தொகுதியிலிருந்து 1937-ல் சென்னை சட்டமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1939 செப்டம்பரில் இரண்டாம் உலகப் போர் தொடங்கியவுடன், காங்கிரசு கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் சட்டமன்றத்திலிருந்து பதவி விலகினார்.


சோதகம் அம்மன்ன ராஜா 1940ஆம் ஆண்டு மகாத்மா காந்தியுடன் சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்றார்.

1946-ல் ஏலூரு தொகுதியிலிருந்து சென்னை சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1946 மற்றும் 1952க்கு இடையில் சென்னை சட்டமன்றத்தின் துணைச் சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1947-ல் தேவதாசி முறையை ஒழிக்கும் மசோதாவை நிறைவேற்ற முத்துலட்சுமி ரெட்டியுடன் இணைந்து போராடினார்.

அம்மன்ன ராஜா 1955ஆம் ஆண்டு மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள அத்திலியிலிருந்து ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அம்மன்ன ராஜா 3 ஏப்ரல் 1962 முதல் ஏப்ரல் 2, 1968 வரை காங்கிரசு கட்சியின் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். 1968ல் அரசியலிலிருந்து விலகி, பெண்கள் நலனுக்காக அயராது பாடுபட்டார். 1977 ஆந்திரப் பிரதேச சூறாவளியின் போது பேரழிவிற்குள்ளான பலருக்கு அம்மன்ன ராஜா உதவினார்.

அம்மன்ன ராஜாபல குழந்தைகளுக்குக் கல்வி கற்பித்தார். இல்லையெனில் இவர்கள் சிறு வயதிலிருந்தே வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கும். இந்தப் பிள்ளைகள் இப்போது கல்வியின் காரணமாகச் சிறந்த தொழில் வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். இவர்களில் ஒருவர் இன்று இந்திய ராணுவத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

குடும்பம்[தொகு]

அம்மன்ன 27 ஆகத்து 1940 அன்று சிறீ சோதகம் ஜனார்த்தன ராவை மணந்தார். இவர்களுக்கு ஊர்மிளா என்ற மகளும் கிஷோர் என்ற மகனும் இருந்தனர். சோதகம் ஜனார்தன் ராவ் இந்தியாவின் பஞ்சாபில் உள்ள பக்ரா நங்கல் அணை திட்டத்தில் தலைமை குடிமைப் பொறியாளராக இருந்தார். அம்மன்ன ராஜா 22 பிப்ரவரி 1999 அன்று இந்தியாவின் செகந்திராபாத்தில் இறந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Ammanna Raja Chodagam, Luminaries of 20th Century, Part I, Potti Sriramulu Telugu University, Hyderabad, 2005, pp: 24-5.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோதகம்_அம்மன்ன_ராஜா&oldid=3686765" இலிருந்து மீள்விக்கப்பட்டது