பாபட்லா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பாபட்லா என்பது இந்திய மாநிலமான ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். இது நகராட்சியால் நிர்வகிக்கப்படுகின்றது. இந்த நகரம் தெனாலி வருவாய் பிரிவின் பாபட்லா மண்டலத்தின் மண்டல தலைமையகம் ஆகும்.[1]

சொற்பிறப்பியல்[தொகு]

இந்த நகரம் முன்பு பவப்பட்டனம் , பவபுரி ,  பவப்பட்டி  மற்றும் பவப்பட்டா என்று அழைக்கப்பட்டது.[2] நகரத்தில் அமைந்துள்ள பவானாராயண கோயிலிலிருந்து இந்த பெயர்கள் பெறப்பட்டன. பின்பு இந்த நகரம் பாபட்லா என்று அழைக்கப்பட்டது.[3]

புவியியல்[தொகு]

இந்த நகரம் 15 ° 54′16 ″ வடக்கு 80 ° 28′3 ″ கிழக்கு என்ற புவியியல் இருப்பிடத்திலும், வங்காள விரிகுடாவின் கடற்கரையிலிருந்து 8 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.[4]

காலநிலை[தொகு]

இந்த நகரம் வெப்பமண்டல காலநிலையை கொண்டுள்ளது. பாபட்லாவின் சராசரி ஆண்டு வெப்பநிலை 28.4 °C (83.1 °F) ஆகும். வங்காள விரிகுடா கடற்கரைக்கு அருகாமையில் இருப்பதால் வெப்பமான கோடை மற்றும் குளிர்ந்த குளிர்கால காலநிலையை அனுபவிக்கின்றது. மேலும் இந்த நகரம் தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை இரண்டையும் பெறுகிறது.[5] ஆண்டுக்கு சுமார் 854 மில்லிமீற்றர் (34 இன்) மழை வீழ்ச்சியைப் பெறுகின்றது. அக்டோபர் மாதத்தில் அதிக மழைவீழ்ச்சி பதிவு செய்யப்படுகின்றது. இம் மாதத்தில் அதிகபட்சமாக 197 மில்லிமீற்றர் (8 அங்குலம்) மழை பெய்யும். கிழக்கு கடற்கரையில் ஏற்படும் சூறாவளி புயல்களால் இந்த நகரம் மிகவும் பாதிக்கப்படுகிறது.[6]

புள்ளிவிபரங்கள்[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கட் தொகை கணக்கெடுப்பின்படி இந்த நகரத்தில் 70,777 மக்கள் 18,216 வீடுகளில் வசிக்கின்றனர். மொத்த மக்கட் தொகையில் ஆண்களின் எண்ணிக்கை , 34,385 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 36,392 ஆகவும் காணப்படுகின்றது. 1000 ஆண்களுக்கு 1058 பெண்கள் என்ற பாலின விகிதத்தைக் கொண்டுள்ளது. இது தேசிய சராசரியாக 1000 ஆண்களுக்கு 940 பெண்கள் என்பதை விட அதிகமாகும். மக்கட் தொகையில் ஆறு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 6,182 ஆகும். இதில் 3,156 சிறுவர்கள் மற்றும் 3,026 சிறுமிகளும் அடங்குவர். சராசரி கல்வியறிவு விகிதம் 80.67% ஆக உள்ளது. 52,106 கல்வியாளர்கள் காணப்படுகின்றனர். இது தேசிய சராசரியான 73.00% ஐ விட கணிசமான அளவு அதிகமாகும்.[1][7]

பொருளாதாரம்[தொகு]

மீன்வளர்ப்பு மற்றும் விவசாயம் ஆகியவை நகரத்தின் கடலோரப் பகுதிகளின் முக்கிய தொழில்கள் ஆகும். நீர் வேளாண்மையில் மீன்வளர்ப்பும், விவசாயத்தில் நெற்பயிர்ச் செய்கையும் ஆதிக்கம் செலுத்துகின்றன. கே.ஜி.என் வடிநில நீட்டிப்பின் ஒரு பகுதியாக இருக்கும் பாபட்லாவில் கெய்ர்ன் இந்தியா எண்ணெய் துளையிடல் நடத்தியது.[8] ஆந்திர மாநில சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தால் இயக்கப்படும் நகரத்திற்கு அருகில் சூர்யலங்கா கடற்கரை இருப்பதால் வருவாய் ஈட்டுவதில் சுற்றுலாவும் முக்கிய பங்கு வகிக்கிறது.[9]

கலாச்சாரம்[தொகு]

1948 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட கடிகாரக் கோபுரம் சாலை விரிவாக்கத்திற்காக இடிக்கப்பட்டு 2017 ஆம் ஆண்டு திசம்பரில் கட்டுமானப்பணி மீண்டும் தொடங்கியது.[10]  எட்வர்ட் முடிசூட்டு நினைவு நகர மன்றம் , 1905 ஆம் ஆண்டில் அப்போதைய இந்தியப் பேரரசர் எட்வர்ட் VII இன் முடிசூட்டு விழாவில் கட்டப்பட்டது.[11] இந்த நகரம் பல்வேறு மதக் கட்டமைப்புகளைக் கொண்டுள்ளது. இது பாவநாராயண கோயில் , நூற்றாண்டு பாப்டிஸ்ட் சீயோன் தேவாலயம் போன்ற பல்வேறு வழிபாட்டாளர்களின் இருப்பை சித்தரிக்கிறது.  நகரத்தின் கடற்கரை சாலையால் இணைக்கப்பட்ட சூர்யலங்கா கடற்கரை பவபுரி கடற்கரை விழாவை நடத்துகிறது.[9]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாபட்லா&oldid=2868572" இருந்து மீள்விக்கப்பட்டது