சையிது முகமது அண்ணாவியார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சையிது முகமது அண்ணாவியார் என்பவர் 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவராவார். அண்ணாவியார் மதுரையில் செய்கு மீரான் லெப்பை என்வருக்கு மகனாக பிறந்தவர்.

வரலாறு[தொகு]

சையிது முகமது தன் இளம் வயதிலேயே பெற்றோரை இழந்தார். இதனால் மதுரையை விட்டு மதுக்கூர் என்னும் ஊருக்கு வந்து சேர்ந்தார். அ்வ்வூரில் இருந்த முசுலீம்களின் ஆதரவில் திருக்குர்ஆனையும், பல சமய நூல்களையும் கற்றார். தமிழை நன்கு கற்கவேண்டி மதுக்கூரையடுத்த மூத்தக் குறிச்சி என்னும் சிற்றூரில் திண்ணைப் பள்ளிக்கூடம் வைத்திருந்த வாணிய செட்டியார் ஒருவரிடம் கல்வி கற்றார். பின்னர் நாகூர் சென்ற சையிது முகமது, அங்கு இருந்த வழுத்தூர் ஷெய்க் வகாபுத்த்தீன் சாகிபு என்பவரின் நன்பரானார். அவர் சொல்லைக் கேட்டு தனது சடாமுடியை களைந்து அவரிடம் தீட்சைப் பெற்று அவரை ஆண்ம குருவாக ஏற்றுக் கொண்டார். பின்னர ஐயம்பேட்டை வந்த சையிது முகமது அங்கு பள்ளிக்கூடம் வைத்து பல மாணவர்களுக்கு கற்பித்து அதனால் அண்ணாவியார் எனப் பெயர் பெற்றார்.[1] அதாராம்பட்டினம் முசுலீம்களின் அழைப்பை ஏற்று அங்கு சென்று வாழ்ந்தார்.

இலக்கியப் பணிகள்[தொகு]

சையிது முகமது அண்ணாவியார் கி.பி. 1717இல் அலிநாமா என்ற காவியத்தை இயற்றி, அரங்கேற்றம் செய்தார். மேலும் இவர் பத்து புராணங்களை பாடியுள்ளார். இவர் பாடிய நூல்களில் குறிப்பிடத்தக்கது சாந்தாதியசவமகம் என்பதாகும். இது மகாபாரதத்து அசுவமேத பர்வதத்தைப் பொருளாகக் கொண்டது. இத நாலாயிரம் செய்யுட்களைக் கொண்டது. இவரின் இந்த நூல் உள்ள 1370 செய்யுளைக் கொண்ட முழுமையற்ற பிரதி ஒன்று உ. வே. சாமிநாதையர் நூலகத்தில் உள்ளது. அது கிடைத்த அளவிலேயே பதிப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர் சுப்பிரமணியர் பிரசன்னப் பதிகம் என்று பதினான்கு செய்யுள்களையும் இயற்றியுள்ளார். இவர் தம் 65ஆம் வயதில் இறந்தார். இவரது உடல் அதிராம்பட்டினத்துப் பள்ளிவாசலின் வடக்குப் பக்கத்தில் அடக்கம் செய்யப்பட்டது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. இரா. வெங்கடேசன் (18 ஏப்ரல் 2018). "இந்துமத நூல்கள் பாடிய இசுலாமியப் புலவர்கள்". கட்டுரை (கீற்று). https://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-apr18/34974-2018-04-18-07-45-31. பார்த்த நாள்: 5 மார்ச் 2019. 
  2. மதமும் மனிதமும் (2001). மகாமகோபாத்தியாய டாக்டர் உ. வே. சாமிநாதையர் நூல் நிலைய 58-வது ஆண்டு மலர். சென்னை: மகாமகோபாத்தியாய டாக்டர் உ. வே. சாமிநாதையர் நூல் நிலையம். பக். 63 - 64.