உள்ளடக்கத்துக்குச் செல்

சைக்ளோப்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாலிஃபியூமசு-லேன்ட்சுமியூசியம் ஓல்டன்பர்கில் உள்ள ஓவியம். 1802ல் சோகன் எயின்ரிச்சு வில்யெல்ம் டிசுச்சுபெயின் என்பவரால் வரையப்பட்டது.

கிரேக்கத் தொன்மவியல் மற்றும் உரோமைத் தொன்மவியலில், சைக்கிளோப்சு (Cyclops) அல்லது சைக்கிளோப்சுகள் என்பவர்கள் ஒற்றைக் கண்களை உடைய அரக்கர்களாவர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் நெற்றியின் மத்தியில் ஒற்றைக் கண் இருக்கும். இவர்களின் பெயருக்கு வட்ட கண் உடைய என்று பொருள்.[1][2] இவர்களில் ஒற்றைக்கண் மூவர் புரோன்டசு, ஸ்தெரோப்பசு, ஆர்கசு ஆகியோர் யுரேனசு மற்றும் கையாவின் பிள்ளைகளாகவும், டைட்டன்சுவின் உடன்பிறந்தவர்களாகவும் எசியோடு குறிப்பிடுகிறார்.[3] மற்றொரு வகையான சைக்ளோப்சுகளை போசிடானின் பிள்ளைகள் எனக் கவிஞர் ஓமர் குறிப்பிடுகிறார்.

இலக்கியங்களில் சைக்ளோப்சுகள்

[தொகு]

எசியோடு

[தொகு]

கவிஞர் எசியோட் தாம் எழுதிய இலக்கியமான தியோகோனியில் ப்ரோன்டெசு(இடி), இசுடீரோப்சு(மின்னல்) மற்றும் ஆர்கெசு(பிரகாசம்) என மூன்று வகையான சைக்ளோப்சுகள்- யுரேனசு மற்றும் கையாவின் பிள்ளைகளாகவும் எகாடோன்சிர்கள் மற்றும் டைட்டன்களின் சகோதர்களாகவும் இருந்தனர். அதன்படி இவர்கள் டைட்டன்கள் மற்றும் ஒலிம்பிய தேவர்களுக்கு சொந்தம் உடைவர்களாவர். இவர்கள் நெற்றியின் மத்தியில் ஒற்றைக்கண் கொண்ட அரக்கர்களாக இருந்தனர். இவர்களை பலம் மற்றும் பிடிவாதம் கொண்ட அரக்கர்களாக ஈசியோட் கூறியுள்ளார். இவர்கள் அனைவரும் ஒன்றாக மிருக பலம் மற்றும் சக்தி ஆகியவற்றிற்கு இலக்கணமாயினர்.

இவர்களின் மாபெரும் பலத்தைக் கண்டு அஞ்சிய யுரேனசு இவர்களை பாதாள உலகமான டார்டரசில் அடைத்து வைத்தார். யுரேனசை வீழ்த்திய பிறகு குரோனசு இவர்களை விடுதலை செய்தார். பிறகு மீண்டும் இவர்களை குரோனசு டார்டரசில் அடைத்து வைத்தார். இவர்களுக்கு பாதுகாவலராக பெண் அரக்கியான கேம்பேயை குரோனசு உருவாக்கினார். பிறகு சியுசு கேம்பேயைக் கொன்று சைக்ளோப்சுகளை விடுவித்தார். அதற்கு பரிசாக சைக்ளோப்சுகள் சியுசிற்கு இடி ஆயுதத்தை பரிசாக வழங்கினர். அந்த ஆயுதத்தில் புரோன்டசு இடியையும் இசுதீரோப்சு மின்னலையும் ஆர்கசு ஒளிர்வையும் சேர்த்தனர். மேலும் இந்த சைக்கிளோப்சுகள் பொசைடனின் சூலாயுதம், ஏட்சின் இருள் தலைக்கவசம், ஆர்டமீசின் திங்கள் ஒளி பொருந்திய வில்-அம்பு மற்றும் அப்பல்லோவின் ஞாயிறு ஒளி பொருந்திய வில்-அம்பு ஆகியவற்றையும் வழங்கியவர் ஆவர்.

ஓமர்

[தொகு]

ஓமர் எழுதிய ஒடிசியில் வரும் மற்றொரு வகை சைக்ளோப்சுகள் பொசைடன் மற்றும் தூசாவின் பிள்ளைகளாக இருந்தனர். இவர்களை ஒற்றைக்கண் உடையவர்களாக ஓமர் குறிப்பிடவில்லை. இவர்களில் ஒருவனான பாலிஃபியூமசை மாவீரன் ஒடிசியசு எதிர்த்தான். அப்போது அவர் பாலிஃபியூமசின் கண்களை கூர்மையான ஆயுதத்தால் குத்தி அவரை பார்வையிழக்கச் செய்ததாகக் கூறப்படுகிறது.

கால்லிமாச்சசு

[தொகு]
லண்டனின் இயற்கை வரலாறு அருங்காட்சியகத்தில் உள்ள சைக்ளோப்சின் சிலை

கால்லிமாச்சசின் ஒரு பாடலில் வரும் சைக்கிளோப்சுகள், [4] எப்பெசுடசுவிற்குப் போலி உருவங்கள் செய்யும் உதவியாளர்களாக இருந்தனர். இவர்கள் டைரின் மற்றும் மைசினேவில் உள்ள சைக்ளோப்பியன் வலுவூட்டல்களை கட்டியதாகக் கூறப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Κύκλωψ at LSJ
  2. Paul Thieme, "Etymologische Vexierbilder", Zeitschrift für vergleichende Sprachforschung 69 (1951): 177-78; Burkert (1982), p. 157; J.P.S. Beekes, Indo-European Etymological Project, s.v. Cyclops.[1] பரணிடப்பட்டது 2011-07-24 at the வந்தவழி இயந்திரம்
  3. Hesiod, Theogony, 140
  4. To Artemis, 46f. See also Virgil's Georgics 4.173 and Aeneid 8.416ff.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சைக்ளோப்சு&oldid=3357887" இலிருந்து மீள்விக்கப்பட்டது