உள்ளடக்கத்துக்குச் செல்

சூடானின் வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சூடானின் வரலாறு சூடான் குடியரசை உருவாக்கும் ஆட்சிப்பகுதியையும், சூடான் என அழைக்கப்படும் பெரிய பகுதியையும் உள்ளடக்குகிறது. சூடான் என்னும் பெயர் "கறுப்பு மக்களின் நிலம்"[1][2] எனப் பொருள் தரும் அரபுச் சொல்லில் இருந்து உருவானது, இது இறுக்கமாகப் பயன்படுத்தப்படாதபோது, மேற்கு ஆப்பிரிக்காவையும், மத்திய ஆப்பிரிக்காவையும், சிறப்பாக சாகெலையும் கூடக் குறிக்கக்கூடும்.

தற்கால சூடான் குடியரசு 1956 ஆம் ஆண்டு உருவானது. இதன் எல்லைகள் 1899 இல் நிறுவப்பட்ட ஆங்கில-எகிப்திய சூடானின் எல்லைகளில் இருந்து பெறப்பட்டது. 1899க்கு முந்திய காலத்தைப் பொறுத்தவரை, தற்போதைய சூடான் குடியரசின் ஆட்சிப் பகுதிக்கு "சூடான்" என்னும் சொல்லைப் பயன்படுத்துவது, காலத் தொடர்புக்கு முரணானது. நைல் ஆற்றுப் பகுதியில் அமைந்த, இன்று வடக்கு சூடான் எனப்படும், குஷ் இராச்சியத்தின் தொடக்க வரலாறு பண்டைய எகிப்தின் வரலாற்றுடன் பின்னிப் பிணைந்தது. பல்வேறு ஆட்சிக் காலங்களில் இப்பகுதி எகிப்துடன் தொடர்பாக இருந்துள்ளது. எகிப்துக்கு மிக அண்மையில் அமைந்துள்ளதால், அண்மைக் கிழக்கின் பரந்த வரலாற்றில் சூடானின் பங்களிப்பு உண்டு. இதில் மிகவும் பிரபலமான நிகழ்வுகள் 25 ஆம் வம்ச ஆட்சியும், ஆறாம் நூற்றாண்டின், நோபாட்டியா, மாக்கூரியா, அலோடியா ஆகிய மூன்று நூபிய இராச்சியங்களின் கிறித்தவமயமாக்கமும் ஆகும். கிறித்தவமயமாக்கத்தின் ஒரு விளைவாகப் பழைய நூபிய மொழி, கொப்டிய எழுத்து முறையை ஏற்றுக்கொண்டு, பதிவு செய்யப்பட்ட மிகப்பழைய நிலோ-சகார மொழியாக உள்ளது. சூடானின் செங்கடல் கரையோரப் பகுதிகளிலும், அயல் ஆட்சிப் பகுதிகளிலும் இசுலாம் ஏழாம் நூற்றாண்டில் இருந்தே இருந்தபோதும், நைல் பள்ளத்தாக்கில் 14-15 ஆம் நூற்றாண்டுகளின் கிறித்தவ இராச்சியங்களின் பலம் குன்றும் வரை முறையான இசுலாம்மயமாக்கம் இடம்பெறவில்லை. மேற்படி இராச்சியங்களுக்குப் பின்னர் 16 ஆம் நூற்றாண்டில் சென்னார் சுல்தானகம் உருவானது. இது நைல் பள்ளத்தாக்கின் பெரும் பகுதியையும், கிழக்குப் பாலைவனப் பகுதிகளையும் கட்டுப்படுத்தியது. அதேவேளை தார்புர் இராச்சியங்கள் சூடானின் மேற்குப் பகுதியைக் கட்டுப்படுத்தின. இன்றைய தென் சூடானுக்கு அண்மையில், 1940 இல் சிலுக் இராச்சியம், 1750 இல் தக்காலி இராச்சியம் ஆகிய இரண்டு சிறிய இராச்சியங்கள் தெற்குப் பகுதியில் உருவாகியிருந்தன. ஆனால், 1820 இல் எகிப்தின் முகமது அலி, சூடானின் வடக்கு, தெற்கு ஆகிய இரண்டு பகுதிகளையும் கைப்பற்றினார். முகம்மது அலியினதும், அவரது வாரிசு அரசர்களினதும் அடக்குமுறை ஆட்சியால், எதிர்ப்புக் கிளம்பியது. இதன் தொடர்ச்சியாக 1881 இல் முகமத் அகமத்தின் தலைமையில் சூடானில் விடுதலைக்கான போராட்டம் வெடித்தது.

1956 இல் சுதந்திரம் கிடைத்ததில் இருந்து, சூடானில் உள்நாட்டுக் குழப்பங்கள் தொடர்ந்தன. முதல் சூடானிய உள்நாட்டுப் போர் (1955-1972), 2011 யூலை 9 இல் தென் சூடானின் பிரிவினையில் முடிந்த இரண்டாவது சூடானிய உள்நாட்டுப் போர் (1983-2005), தார்ஃபூர் போர் (2003-2010) என்பன முக்கியமான உள்நாட்டுப் போர்கள்.

2019இல் சூடான் சர்வாதிகார அதிபரை சதி செய்து நீக்கி பிறகு, புதிய ஜனநாயக சூடான் அரசில் துணை-இராணுவப் படையினரை, சூடான் இராணுவத்தில் இணைத்துக் கொள்வது தொடர்பாக ஏற்பட்ட பிணக்கால், 15 ஏப்ரல் 2023 அன்று சூடான் இராணுவத்தினருக்கும், சூடான் துணை-இராணுவப் படைகளுக்கும் இடையே 2023 சூடான் மோதல்கள் ஏற்பட்டு, போர்கள் நடைபெற்று வருகிறது.

கால்நடைகளைக் காட்டும், சாபு ஜாடி என்னும் இடத்தில் உள்ள பாறை ஓவியம்

வரலாற்றுக்கு முந்திய காலம்[தொகு]

கிமு 7 ஆம் ஆயிரவாண்டுக் காலப்பகுதியில், புதிய கற்காலப் பண்பாட்டு மக்கள், அரண்செய்யப்பட்ட ஊர்களில் உடலுழைப்பு இல்லாத வாழ்க்கைமுறைக்கு மாறினர். வேட்டையாடுவதற்கும், மீன்பிடிப்பதற்கும் பதிலாக தானியங்கள் சேகரிப்பதிலும், மாடு வளர்ப்பிலும் ஈடுபட்டனர்.[3] 5 ஆம் ஆயிரவாண்டுகளில் வரண்டுகொண்டிருந்த சகாராவில் இருந்து புதிய கற்கால மக்கள் வேளாண்மையுடன் நைல் பள்ளத்தாக்குக்கு வந்தனர். இந்தப் பண்பாட்டு, மரபியல் கலப்பினால் உருவான மக்கள் அடுத்த சில நூற்றாண்டுகளில் சமூகப் படிநிலையமைப்பை உருவாக்கி, கிமு 1700 இல் குஷ் இராச்சியம் உருவாகக் காரணம் ஆயினர். வம்சங்களுக்கு முற்பட்ட காலத்தில், நூபியாவும், நாகடன் மேல் எகிப்தும் இன, பண்பாட்டு அடிப்படைகளில் ஏறத்தாழ ஒத்தவை என மானிடவியல் ஆய்வுகளும், தொல்லியல் ஆய்வுகளும் காட்டுகின்றன.

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Encyclopædia Britannica. "Sudan".
  2. Department of Arts of Africa, Oceania, and the Americas. Trade and the Spread of Islam in Africa. In Heilbrunn Timeline of Art History. New York: The Metropolitan Museum of Art, 2000 – (October 2001).
  3. "Early History", Helen Chapin Metz, ed. Sudan A Country Study. Washington: GPO for the Library of Congress, 1991.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூடானின்_வரலாறு&oldid=3699850" இலிருந்து மீள்விக்கப்பட்டது