மூச்சுக் கட்டுப்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சுவாசக் கட்டுப்பாடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

மூளையின் முகுளத்தில் ஒரு மூச்சுக் கட்டுப்பாட்டு (Control of respiration) மையம் உள்ளது. இதில் தனித்தனியே உள்மூச்சு, வெளிமூச்சு மையங்கள் உள்ளன. இம்மையங்களின் நரம்பு உயிரணு (செல்) நரம்பணு இழைகள் (ஆக்ஃசான்கள், axons) பிரினிக் நரம்புகள் (Phrenic nerves) வழியாக உதரவிதானத்திற்குச் செல்கின்றன. இந்நரம்பிழைகள் உள், வெளி எலும்பிடைத் தசைகளுக்கு அடுத்தடுத்துத் தூண்டுதல்களைக் கடத்துகின்றன. மூச்சுச் சிற்றறைகளின் சுவற்றில் இவற்றிற்கு உணர்வுப் பகுதிகள் உண்டு. இவை மூச்சுச் சிற்றறைச் சுவரின் மீள் விசையை உணரக்கூடியவை. மூச்சுச் சிற்றறைகளின் சுவர்கள் உள்மூச்ச்சில் நன்கு விரிவடையும். அதனை உணர்ந்த உணர்பகுதிகள் முகுளத்திலுள்ள வெளிச்சுவாசப் பகுதிக்கு வேகஸ் நரம்பின் வழியே தூண்டுதல்களை அனுப்புகின்றன. இதனால் உடள்மூச்சு நிறுத்தப்படும். இவ்வகைத் தொடர் நிகழ்ச்சிக்கு ஃகெரிங் புரூயர் செயல் (Herring Breuer reflex) என்று பெயர்.

மேலும், முகுளத்தில் ஒரு மூச்சொழுங்குப் பகுதி உண்டு. இப்பகுதி மூளையின் மூச்சு மையத்துடன் தொடர்பு கொண்டுள்ளது. இவ்வகையில் சீரான ஒத்திசைப்பு இயக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. உள்மூச்சின் போது மூச்சு மையத்தின் உள்மூச்சுக் கட்டுப்பாட்டுப் பகுதியானது மூச்சொழுங்குப்(Pneumotaxic) பகுதிக்கு உணர்வுகளை அனுப்பும். இதன் தொடர்ச்சியாகத் தூண்டப்பட்ட மூச்சொழுங்குப் பகுதி உணர்வுகளைச் மூச்சு மையத்தின் வெளிச்சுவாசக் கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பி விடும். வெளிச்சுவாச மையம் இயங்கத் துவங்கும். இதனால் உள்மூச்சு மையத்தின் பணி தானாகவே தடைப்படும். இவ்வகையில் மூச்சின் சீரியக்கம் மூளையின் மையங்களால் இயக்கப்படுகிறது.

மேலும் பார்க்க[தொகு]