மூச்சியக்கம்
மூச்சியக்கம் (Respiration) அல்லது சுவாசம் என்பது விலங்குகள் உயிர்வாழ்வதற்கான இன்றியமையாத ஒரு உடலியக்க செயல்முறையாகும். மூச்சியக்கம் என்பது காற்றிலிருந்து ஆக்சிசன் உடல் இழையங்களில் உள்ள கலங்களுக்குக் கொண்டு செல்லப்படுவதையும், கலங்களில் இருந்து கழிவுப் பொருளாக பெறப்படும் காபனீரொட்சைட்டு உடலில் இருந்து வெளியே கொண்டு வரப்படுவதையும் குறிக்கும் செயல்முறையாகும்.
ஓர் உயிரணு (ஒரு கல) உயிரினங்களில் வளிமப் பரிமாற்றத்துக்கு எளிமையான பரவலே போதுமானது. இங்கே ஒவ்வொரு உயிரணுவும் வெளிக் காற்று மண்டலத்துடன் தொடர்பு கொண்டுள்ளது. இதனால் வளிமங்கள் குறைவான தொலைவே செல்லவேண்டியுள்ளது. இதற்கு மாறாக மனிதரைப் போன்ற பல உயிரணுக்களையுடைய விலங்குகளில் வெளியில் இருந்து அவற்றின் உட்பகுதிகளில் உள்ள உயிரணுக்களுக்கு வளிமங்கள் செல்லவேண்டிய தூரம் அதிகம். இதனால் வளிமங்களைச் செயல் திறனுடன் பரிமாற்றம் செய்வதற்கு ஒரு மூச்சுத் தொகுதி தேவை. மூச்சுத் தொகுதி, வளிமங்களைக் கொண்டு செல்வதற்கு குருதிச் சுற்றோட்டத் தொகுதியுடன் இணைந்து செயற்படுகின்றது.
மூச்சுத் தொகுதியைக் கொண்டிருக்கும் மனிதனைப் போன்ற முதுகெலும்பிகளின் மூச்சியக்கத்தில் நான்கு நிலைகள் காணப்படுகின்றன.
- மூச்சுவிடல்: இது வெளியில் இருந்து ஆக்சிசன் செறிவு கூடிய வளி மூக்குத் துவாரங்கள், மூச்சுக்குழாய் வழியாக நுரையீரலில் உள்ள காற்றுச் சிற்றறைகளுக்கு (நுண்ணறைகளுக்கு) எடுத்துச் செல்லப்படுதலையும், பின்னர் நுரையீரலில் இருந்து காபனீரொட்சைட்டு செறிவு கூடிய வளி மூக்கினூடாக வெளிக்கொண்டு வரப்படுவதையும் குறிக்கும். இவை மூச்சிழுத்தல் (inhalation), மூச்செறிதல் (exhalation) எனப்படும் ஒன்றுவிட்டு ஒன்றாக நிகழும் ஒரு உடற்றொழிலியல் பொறிமுறையைக் குறிக்கும். மார்பறையில் ஏற்படும் அழுத்த மாற்றங்களால் இந்த மூச்சிழுத்தலும், மூச்செறிதலும் நடைபெறும். மார்பறையின் முன்புறம் மார்பெலும்பும், பின்புறம் முதுகெலும்புத் தொடரும், பக்கங்களில் விலா எலும்புகளும், கீழ்ப்புறமாக பிரிமென்றகடு அல்லது உதரவிதானமும் (diaphragm) அமைந்துள்ளது. விலா எலும்புகளிடையே வெளிப்புற, உட்புற விலா எலும்பிடைத் தசைகள் உள்ளன. இத்தசைகளின் இயக்கத்தால் மார்பறையின் கொள்ளளவை அதிகரிக்கவும் குறைக்கவும் இயலும். மார்பறையில் அடிப்பரப்பினை உதரவிதானம் மூடியுள்ளது. மூச்சுவிடல் நிகழ்ச்சி மார்பறையை விரிவடையச் செய்வதாலும் குறுக்குவதாலும் நடைபெறும்.[1][2]
- நுரையீரலில் வளிமப் பரிமாற்றம்: நுரையீரலின் காற்றுச் சிற்றறைகளுக்கும், அங்கே காணப்படும் குருதி மயிர்த்துளைக் குழாய்களுக்கும் (capillary) இடையில் நடைபெறும் வளிமப் பரிமாற்றமாகும்.
- வளிமம் கொண்டு செல்லல்: நுரையீரலுக்கு குருதி வழங்கும் குருதி நுண்துளைகளில் இருந்து ஆக்சிசன் செறிவு கூடிய குருதியானது, குருதிச் சுற்றோட்டத்தொகுதியினூடாக, உறுப்புக்களிலுள்ள மயிர்த்துளைக் குழாய்களுக்கு கடத்தப்படுதலும், பின்னர் அங்கிருந்து காபனீரொட்சைட்டு செறிவு கூடிய குருதி நுரையீரலுக்கு கடத்தப்படுவதுமாகும்.
- அக வளிமப் பரிமாற்றம்: உறுப்புக்களுக்கு குருதியை வழங்கும் குருதி மயிர்த்துளைக் குழாய்களுக்கும், உறுப்பிலுள்ள இழையங்கள் அல்லது உயிரணுக்களுக்கும் இடையின் நிகழும் வளிமப் பரிமாற்றமாகும். உயிரணுக்களிலுள்ள இழைமணிகளிலேயே, இறுதியில் குருதியிலிருந்து ஆக்சிசனைப் பெற்று, குளுக்கோசை வளர்சிதை மாற்றத்திற்குட்படுத்தி உடலுக்குத் தேவையான ஆற்றலைப் பெறுவதுடன், காபனீரொட்சைட்டை வெளியேற்றும் உயிரணு ஆற்றல் பரிமாற்றமும் (Cellular respiration) நிகழ்கின்றது.[3]
மேலும் பார்க்க:[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Human Physiology, Respiration". http://people.eku.edu/ritchisong/301notes6.htm. பார்த்த நாள்: செப்டம்பர் 23, 2015.
- ↑ "Anatomy and physiology of muscles involved in breathing". HK Rewards (This is an excerpt from Breathe Strong, Perform Better by Alison McConnell.). http://www.humankinetics.com/excerpts/excerpts/learn-the-anatomy-and-physiology-of-the-muscles-involved-in-breathing. பார்த்த நாள்: செப்டம்பர் 23, 2015.
- ↑ Bailey, Regina. "Cellular Respiration". http://biology.about.com/od/cellularprocesses/a/cellrespiration.htm.