சுக்ரா ரபாபி
சுக்ரா ரபாபி (1922-1994) ஒன்றுபட்ட பிரித்தானிய இந்தியாவில் பிறந்த ஒரு ஓவியக்கலைஞர் ஆவார், இந்திய பாகிஸ்தான் பிரிவினையின்போது பாகிஸ்தானில் வாழ்ந்து வந்தார். 1940 ம் ஆண்டில் இளம் பெண் கலைஞராக, அகில இந்திய ஓவியப் போட்டி விருதை வென்ற முதல் பெண்மணி ரபாபி என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பல்துறை ஓவியரும், வடிவமைப்பாளரும் மட்டுமல்லாமல் சிறந்த சிற்பியுமாவார். ரபாபி அவரது ரசிகர்களால் "அவரது காலத்தில் வாழ்ந்த மற்றெல்லாரையும் விட சிந்தனையிலும் கலையிலும் முன்னேறியவர்" என்று பாராட்டப்பட்டுள்ளார்.
இவரது கலைப்படைப்புகளை விற்றதில் கிடைத்த பரிசுப்பணத்தின் பெரும்பகுதியை ரபாபி மனிதாபிமான காரணங்களுக்காகவும், பொதுசேவைக்காகவும் வழங்கியுள்ளார். அவரது கலை மற்றும் தொண்டு பங்களிப்புகளின் அங்கீகாரம் மற்றும் நினைவாக, யுனிசெஃப் நிறுவனமும் சுக்ரா ரபாபி நிதி என்பதை உருவாக்கி நிதியளித்து வருகிறது. மேலும் இவரது சிறப்பை உணர்த்தும் விதமாக சான் பிரான்சிஸ்கோ மேயர் ஜனவரி 19, 1994 அன்று சான் பிரான்சிஸ்கோவில் சுக்ரா ரபாபி நாளாக அறிவித்துள்ளார்.
சிறந்த ஓவியரும் சிற்பியுமான ரபாபி, கராச்சியில் உள்ள சரணாகதி கலைப் பள்ளியில் தனது பட்டப்படிப்பையும், இந்தியாவின் வங்காளத்தில் உள்ள சாந்திநிகேதன் நுண்கலை பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படிப்பையும் படித்துள்ளார். அவரது கலை படைப்புகள் அனைத்தும் தனி மற்றும் குழு கண்காட்சிகளில் காட்சிப்படுத்தப்பட்டு ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இவ்வாறு அவரது கலை வாழ்க்கை ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக அவரது வாழ்நாள் முழுவதும் நீடித்தது. அவரது கடைசி தனி கண்காட்சி 1992 ம் ஆண்டு கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ரபாபியின் கலையானது மிகவும் தத்ரூபமானதும், பலவகைகளைக் கொண்டுள்ளதுமானது. அவரது காலகட்டத்தில், சிறந்த கலைஞராக இருந்து இயற்கைக்காட்சிகள், உருவக மற்றும் கையெழுத்து ஓவியங்கள் பலவற்றை உருவாக்கியுள்ளார். டெம்பரா, எண்ணெய் மற்றும் அக்ரிலிக் ஆகியவற்றைத் தனது ஓவியங்களில் நிறமேற்ற ஊடகங்களாகப் பயன்படுத்தியுள்ளார். அத்தோடு ரபாபி ஒரு வடிவமைப்பாளரும் சிற்பியாகவும் இருந்துள்ளார்.
இவரது மரணத்திற்கு பிறகும் அவரது கலைப்படைப்புகள் அனைத்தும் மறுஉருவாக்கம் செய்யப்பட்டு மனிதாபிமான காரணங்களுக்காக இன்னமும் விற்கப்பட்டு வருகிறது.[1][2][3][4][5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 'Art for a Cause' by Professor Karrar Hussain in 'The News'. 1994.
- ↑ 'Smoldering Shades of Passion' by Marjorie Hussain in 'The Dawn'. 1994.
- ↑ 'Spirit of Sughra Rababi' by Salwat Ali in 'The Dawn'. 2005.
- ↑ 'Sughra Rababi' by David Douglas Duncan in 'The World of Allah'. 1982. Publisher Houghton Mifflin, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0395325048, 9780395325049
- ↑ 'Sughra Rababi Day in San Francisco'. 19 January 1994. The Mayor of San Francisco's Office.