சிசிர் குமார் மித்ரா
சிசிர் குமார் மித்ரா | |
---|---|
சிசிர் குமார் மித்ரா | |
பிறப்பு | கோல்கத்தா | 24 அக்டோபர் 1890
இறப்பு | 13 ஆகத்து 1963 | (அகவை 72)
தேசியம் | இந்தியர் |
துறை | இயற்பியல் |
பணியிடங்கள் | பங்குரா கிறித்தவ கல்லூரி பாரிசு பல்கலைக்கழகம் நான்சி பல்கலைக்கழகம் கோல்கத்தா பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | பிரெசிடென்சி கல்லூரி பல்கலைக்கழக அறிவியல் கல்லூரி பாரிசு பல்கலைக்கழகம் |
சிசிர் குமார் மித்ரா (Sisir Kumar Mitra, அக்டோபர் 24, 1890 - ஆகசுட் 13 1963) ஒரு இந்திய இயற்பியலாளர்.
பிறப்பு , ஆரம்ப வாழ்க்கை
[தொகு]இவர் கொல்கத்தாவின் ஊக்ளி மாவட்டத்திலுள்ள கொன்னாகர் என்ற இடத்தில் பிறந்தார். ஜாய்கிருஷ்ண மித்ரா, சரத்குமாரி தம்பதியருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார் சிசிர் குமார்.[1] சிசிருக்கு 9 அல்லது 10 வயது நிரம்பியிருந்த நிலையில், ராம் சந்திர சாட்டர்ஜி என்ற ஒருவர் கொல்கத்தா மைதானிலிருந்து பசீர்காட் வரையிலான 15 கி.மீ. தொலைவிற்கு ஒரு பெரிய பலூனைப் பறக்கவிட்டுக் காட்டினாராம்; உடன் தன் அண்ணண் சதீஷ் குமாரிடம் துருவித்துருவி ஆராய்ந்து அந்த பலூன் எவ்வாறு பறந்தது என்று தெரிந்து கொண்டாராம் சிசிர்.[2]
பல இன்னல்களுக்கிடையில் படிப்பு
[தொகு]பகல்பூர் டீ.என்.ஜே. கல்லூரியில் எப்.ஏ. படிப்பில் சேர்ந்தார் சிசிர். சில காலம் கழித்து அவரது அண்ணன்கள் இருவரும் இறந்தனர்; அத்துயரம் தாங்காது அவர் தந்தையும் காலமானார். குடும்பப் பொறுப்பு முழுவதையும் சிசிரின் தாயார் மனம் கலங்காமல் ஏற்றுக்கொண்டார். சிசிரை கொல்கத்தா அனுப்பினார்; அங்கு பிரெசிடென்சி கல்லூரியில் அறிவியலில் இளங்கலை, முதுகலைப் பட்டங்கள் பெற்றார் மித்ரா. அங்கிருந்த போது சர்.பீ.சீ. ரே, சகதீசு சந்திர போசு ஆகியோரின் வகுப்புகளை கவனிப்பதுண்டு; அவர்களது அறிவியல் ஆளுமையால் கவரப்பட்டார்.[2]
முன்னணி அறிவியலாளர்களுடன் ஆய்வில் பங்கேற்பு
[தொகு]முதுகலைப் பட்டம் பெற்றவுடன் பிரெசிடென்சி கல்லூரியிலேயே சகதீசு சந்திர போசுக்கு உதவியாக ஆய்வுப்பணியில் சில காலம் ஈடுபட்டார் சிசிர் குமார். குடும்பச்சூழல் காரணமாக வேலைக்குச் செல்ல நேரிட்டதால் அவரால் இப்பணியைத் தொடர இயலவில்லை.[3] கொல்கத்தா அறிவியலுக்கான பல்கலைக்கழகக் கல்லூரியில் ஆய்வறிஞராக சேர்ந்தார். ஒளியின் விளிம்பு விளைவு, குறுக்கீட்டு விளைவு [4] ஆகியவை குறித்த ஆய்வுகளை சர்.சி.வி.ராமன் பார்வையில் மேற்கொண்டு , 1919-ல் ஒளி ஊடுபுகுதலும் சிதறலும் (The interference and diffraction of light) என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்து டி.எஸ்சி பட்டம் பெற்றார். பின்னர் பாரிஸ் சென்று 1923-இல் PhD பட்டம் பெற்றார்.[5][6]
கண்டுபிடிப்புகள்
[தொகு]- புவியின் அயனிமண்டலத்தை பற்றி இவர் கண்டறிந்த கருத்துகள் இயற்பியல் உலகில் புகழ்பெற்றவை. அயனிமண்டலத்திலுள்ள E அடுக்கு அறிவியலாளர்(விஞ்ஞானி)களுக்கு ஒரு புதிராகவே இருந்து வந்தது. சூரியனிலிருந்து வெளிவரும் புற ஊதா(UV) கதிர்வீச்சே இந்த E அடுக்கு உருவாக காரணம் என்று தன் ஆய்வுகளின் அடிப்படையில் மித்ரா கண்டுபிடித்தார்.
- இரவில் வானத்தை பார்க்கும்போது அது அடர் கருமையாக இல்லாமல் சற்று வெளிராகவே இருக்கும். இதற்கு இரவு-வான ஒளிர்வு என்று பெயர். அயனிமண்டலத்திலுள்ள F அடுக்கிலுள்ள அயனிகள் உமிழும் ஒளியினால்தான் இந்த ஒளிர்வு ஏற்படுகின்றது என்று மித்ரா கண்டுபிடித்தார்.
பிற முக்கிய பணிகள்
[தொகு]சகதீசு சந்திர போசின் (ரேடியோ) அலைகள் பற்றிய ஆய்வுகளால் உந்தப்பட்டு மித்ராவும் தொலைத்தொடர்பு அறிவியலில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அவரது அயராத உழைப்பால் அரிங்கடா அயனிமண்டல கள நிலையம் (Harringhata Ionosphere Field Station), வானொலி இயற்பியல் மற்றும் மின்னணுவியல் நிலையம் (Institute of Radio Physics and Electronics, Calcutta) ஆகிய முக்கிய ஆராய்ச்சி நிலையங்கள் தோற்றுவிக்கப்பட்டன. இவர் வெளியிட்ட உயர் வளிமண்டலம் (The Upper Atmosphere) என்ற ஆய்வுக்கட்டுரை உலக அளவில் பாராட்டைப் பெற்றது.
ஆசிரியராக
[தொகு]சகதீசு சந்திர போசிடம் பணிபுரிந்த பிறகு, தான் எப்.ஏ. படிப்பு படித்த டீ.என்.ஜே. கல்லூரியிலேயே ஆசிரியராக பணியில் சேர்ந்தார் சிசிர் குமார். பின்னர் ஒரு கிருத்தவக் கல்லூரியில் பணிபுரிந்தார்; அவரது பாணி, பரிசோதனைகளைச் செய்து காட்டியபடியே வகுப்புகள் எடுப்பது. மேலும் வெகுசன அறிவியல் கட்டுரைகளையும் அதிகளவில் எழுதி வந்தார். அறிவியல் தத்துவங்களை தெளிவாகவும் துல்லியமாகவும் எடுத்துரைப்பதில் வல்லவர் என்ற பெயர் அவருக்கு வாய்த்து.[7]
விருதுகளும் பெருமைகளும்
[தொகு]- ராயல் சங்கத்தின் உறுப்பினர் (Fellow of Royal Society)
- பத்மபூஷண்
- இந்திய தேசிய அறிவியல் கழகத்தின் தலைவர் (1959-60)
- நிலவில் உள்ள ஒரு விண்கல் வீழ் பள்ளத்திற்கு மித்ரா பெருங்குழி என்று பெயரிடப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ இந்தியன் அகாதமி ஆவ் சயன்சசு
- ↑ 2.0 2.1 இந்தியன் அகாதமி ஆவ் சயன்சசு Vol.68_பக். 1150
- ↑ "விக்யான் பிரசார்". Archived from the original on 2007-03-05. பார்க்கப்பட்ட நாள் 2009-10-27.
- ↑ "தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்_Diffraction&Interference" (PDF). Archived from the original (PDF) on 2009-04-10. பார்க்கப்பட்ட நாள் 2009-10-27.
- ↑ பேராசிரியர் கே. ராஜு. "சிசிர் குமார் மித்ரா". தீக்கதிர் தமிழ் நாளிதழ். பார்க்கப்பட்ட நாள் 8 செப்டம்பர் 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)[தொடர்பிழந்த இணைப்பு] - ↑ [1]
- ↑ "விக்யான் பிரசார் வலைத்தளம்". Archived from the original on 2007-03-05. பார்க்கப்பட்ட நாள் 2009-10-27.