சிங்கப்பூரில் மொழிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சிங்கப்பூர் அரசு நான்கு ஆட்சி மொழிகளைக் கொண்டுள்ளது: ஆங்கிலம், மலாய், சீனம், மற்றும் தமிழ்.[1] இந்த ஆட்சிமொழிகளைத் தவிர இங்கு புழங்கிவரும் பல்வேறு பிற மொழிகளும் சிங்கப்பூரில் நிலவும் பலரதப்பட்ட இன, பண்பாட்டு, மொழி மக்களைப் பிரதிபலிக்கின்றன. 2009ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் 20க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்பட்டு வருவதாக கண்டறியப்பட்டது.[2][3] குடிமைப்படுத்த காலத்தில் சிங்கப்பூர் ஓர் வணிக மையமாக விளங்கியதும் தற்போதும் முதன்மையான வணிக/சேவைத்துறையின் மையமாக விளங்குவதும் ஆசியாவிலிருந்தும் பிறநாடுகளிலிலிருந்தும் மக்களை இங்கு ஈர்த்துள்ளது. அவர்கள் கொணர்ந்த மொழிகள் சிங்கப்பூர் மொழிகளை பெரிதும் பாதித்துள்ளன.

முந்தைய ஆண்டுகளில், மலாயா தீபகற்பத்தில் வணிகர்களால் பேசப்பட்டுவந்த மலாயு மொழியும் சீன மொழியும் கலந்த[4] மெலாயு பசார் எனப்படும் மலாய் மொழி இத்தீவின் இணைப்புமொழியாக (lingua franca) இருந்தது. [5] தற்போதும் இது பலரால் பேசப்பட்டாலும், குறிப்பாக சிங்கப்பூர் மலாய்கள், சிங்கப்பூரின் ஆங்கிலம் தற்போது இணைப்புமொழியாக மாறி வருகிறது. சிங்கபூரில் பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் ஆங்கிலம் பலராலும் பயன்படுத்தப் பட்டது. சிங்கப்பூர் விடுதலை அடைந்தபிறகும் ஆங்கிலமே முதன்மையான இணைப்புமொழியாக விளங்கியது. பல்வேறு மொழிபேசுவோரை ஒற்றுமைப்படுத்த ஆங்கிலமே உதவியது; கல்வித்துறையிலும் இதுவே முதன்மையான பயிற்று மொழியாக உள்ளது.


துவக்கத்தில் ஹொக்கெய்ன் பெரும்பான்மையான சீனர்களால் பேசப்படும் மொழியாக இருந்தது. ஆனால் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மண்டாரின் இந்த நிலையை அடைந்தது. மண்டாரின் பேசாத பிற சீனக்குழுக்களை ஒற்றுமைப்படுத்தவும் பொதுவான ஒரு சீன அடையாளத்தை உருவாக்கவும் சிங்கை அரசு மண்டாரின் பயன்பாட்டை ஊக்குவித்தது.[6] 21ஆம் நூற்றாண்டில் சீனாவின் பொருளாதார முன்னேற்றமும் இதற்கு தூண்டுகோலாக இருந்தது. மற்ற சீன மொழிகள், ஹொக்கெய்ன், டியோச்சியூ, ஹக்கா, ஹைனீசு மற்றும் கன்டனீசு ஆகியன வட்டாரப் பேச்சுமொழிகளாக அறிவிக்கப்பட்டன. அரசின் கொள்கைகளும் ஏனைய மொழிச்சார்புகளும் இக்கிளை மொழிகளை பேசப்படுவோரின் எண்ணிக்கை அருகி வருகிறது.[7] இந்திய மொழிகளில் முதன்மையாக தமிழ் இருப்பினும் மற்ற இந்திய மொழிகளும் பேசப்படுகின்றன. மற்ற சிறுபான்மையான மலாயு அல்லது சீன வட்டார மொழிகளைப் போலன்றி இந்திய மொழிகள் பள்ளிக் கூடங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன.

சிங்கப்பூர் இருமொழி கொள்கையைப் பின்பற்றுகிறது; இதன்படி மாணவர்கள் ஆங்கிலம் கற்பதுடன் தங்கள் இன அடையாளத்திற்கான மொழியையும் கற்கின்றனர். இந்தத் தாய்மொழி கல்வி பலதரப்பட்ட பண்பாட்டுச் சூழலில் தங்கள் பண்பாட்டை தக்கவைத்துக் கொள்ளத் தேவையாயுள்ளது. இருப்பினும் தாய்மொழிப் பயன்பாடு குறைந்துகொண்டும் ஆங்கிலப் பயன்பாடு கூடிக்கொண்டும் வருகிறது.

மேற்சான்றுகள்[தொகு]

  1. "Official languages and national language". Constitution of the Republic of Singapore. பார்த்த நாள் 2010-11-11.
  2. David, Maya Esther (2008). "Language Policies Impact on Language Maintenance and Teaching Focus on Malaysia Singapore and The Philippines" (PDF). University of Malaya Angel David Malaysia.
  3. Lewis, M. Paul (ed.) (2009). "Languages of Singapore". Ethnologue: Languages of the World.
  4. http://benjamins.com/#catalog/journals/jpcl.25.1.06bao
  5. Deraman, A. Aziz (Dato Haji) (2003-12-30). "The Development of the Malay Language: Contemporary Challenges". மூல முகவரியிலிருந்து 2011-07-23 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2010-11-13.
  6. Goh, Chok Tong (1991-09-30). "English version of Speech in Mandarin by the Prime Minister, Mr Goh Chok Tong". Speak Mandarin Campaign. பார்த்த நாள் 2010-11-13.
  7. Abu Baker, Jalelah (2009-03-08). "One generation - that's all it takes 'for a language to die'". The Straits Times (Singapore). http://www.asiaone.com/News/Education/Story/A1Story20090306-126699.html. பார்த்த நாள்: 2010-10-12. 

மேற் தகவல்களுக்கு[தொகு]