உள்ளடக்கத்துக்குச் செல்

சதி சாவித்திரி (1933 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சதி சாவித்திரி
இயக்கம்சி. புல்லையா
தயாரிப்புகிழக்கிந்திய திரைப்படத்துறை நிறுவனம்
கதைமல்லஜோசையுலா ரமண மூர்த்தி (Mallajosyula Ramana Murthy)
நடிப்புவேமுரி காகய்யா
இராமதிலகம்
நிடுமுக்கால சுப்பா ராவ்
சுரபி கமலாபாய்
வெளியீடு1933
ஓட்டம்125 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதெலுங்கு
ஆக்கச்செலவுமதிப்பீடு. 75,000

சதி சாவித்திரி (Sati Savitri) 1933 ஆம் ஆண்டில் வெளியான இந்தியத் தெலுங்குப் புராணத் திரைப்படமாகும். மைலாவரம் பால பாரதி சமாஜ அமைப்பின் மேடைநாடகத்தை அடிப்படையாகக் கொண்டது. இத்திரைப்படத்தின் இயக்குநர் சி. புல்லையா. கொல்கத்தாவில் ₹75,000 செலவீட்டில் கிழக்கிந்திய திரைப்படத்துறை நிறுவனத்தால் முதன்முதலாகத் தயாரிக்கப்பட்டது.[1] வெற்றிப்படமாக அமைந்த இத்திரைப்படம், இரண்டாவது வெனிசு பன்னாட்டுத் திரைப்படவிழாவில் சிறப்பு விருதினைப் பெற்றது.[2] இது, மகாபாரதக் கிளைக்கதையான சத்தியவான் சாவித்திரியின் கதையாகும். புராணத்தின்படி இளவரசி சாவித்திரி (தாசரி இராமதிலகம்) இளவரசன் சத்தியவானை அவன் ஓராண்டுக்குள் இறந்து விடுவான் என்ற சாபமுள்ளவன் என அறிந்தும் மணக்கிறாள். பின்னர் அவள் எமனுடன் (வெமுரி காகய்யா) போராடித் தன் கணவன் உயிரை மீட்கிறாள்.[1]

கதை

[தொகு]

ஒரு காலத்தில் அசுவபதி என்ற அரசன் மத்ரா நாட்டை ஆண்டு வந்தான். அவன் மாளவி என்ற ராணியை மணந்தான். வெகுகாலத்திற்கு அவர்களுக்குக் குழந்தைப்பேறு இல்லை. பின்னர் அவர்களது குலதெய்வமான சாவித்திரியை வேண்டிக்கொண்டதன் பலனாக அவர்களுக்கு ஒரு பெண்மகவு பிறந்தது. அவளுக்குச் சாவித்திரி என்று பெயரிட்டு வளர்த்தனர். அவள் தன் தோழி வாசந்திகாவுடன் விளையாடிக்கொண்டு அரண்மனையிலும் வனத்திலுமாகச் சுற்றித் திரிந்தாள். அவள் கனவில் அடிக்கடி தோன்றிய ஒரு அழகான ஆண்மகனைப் பற்றித் தோழியிடம் கூறிவந்தாள்.

ஒரு நாள் அவள் வளர்த்து வந்த மான் தப்பி காட்டிற்குள் ஓடிவிட்டது. அதனைத் தேடி சாவித்திரியும் அவளது தோழியும் காட்டிற்குள் சென்றனர். அங்கு அவர்களது மானை சத்தியவந்தன் என்ற இளவரசன் பிடித்து வைத்திருப்பதைக் கண்டனர். தனது கனவில் வந்த ஆண்மகன் அவன்தான் என்று சாவித்திரி வாசந்திகாவிடம் கூறினாள். மானை மீட்டுக்கொண்டு அரண்மனைக்குத் திரும்பிய சாவித்திரியால் சத்தியவந்தனை மறக்க முடியவில்லை. அவன் உருவத்தை ஓவியமாகத் தீட்டி அதனை வணங்கி வந்தாள்.

சாவித்திரியின் பெற்றோர் அவளுக்குத் திருமணம் செய்ய முடிவுசெய்தனர். அவர்களது அரண்மனைக்கு வந்த நாரதர், சாவித்திரியை சத்தியவந்தனுக்கு திருமணம் செய்துதரும்படிக் கூறினார். திருமணமும் நடந்தது. தனது கணவன் விரைவில் இறந்துவிடுவான் என்பதை நாரதர் வாயிலாக அறிந்த சாவித்திரி, அவனைக் ஒருநொடியும் பிரியாமல் கூடவே இருந்து அவனை கவனித்துக் கொண்டாள்.

அவன் இறப்புக்கு மூன்று நாட்களுக்கு முன், சாவித்திரி விரதமிருந்தாள். அதன்பிறகு ஒருநாள் அவர்கள் காட்டுக்குள் சென்றிருந்தனர். அங்கு நண்பகலில் சூரியன் உச்சியிலிருந்தபோது சத்தியவான் தனக்குத் தலைவலிக்கிறது எனக்கூறி கீழே விழுந்தான். அப்போது எமன் தனது எருமை வாகனத்தின் மீதமர்ந்து வந்து சத்தியவந்தன் உயிரைப் பறித்துக்கொண்டு செல்லலானான். அதைக்கண்ட சாவித்திரி எமனிடம் தன் கணவன் உயிரைத் திருப்பிக் கொடுத்துவிடுமாறு கேட்டாள். அவனைப் பின்தொடர்ந்து சென்று அவனிடம் வாதிட்டாள். எமன் எவ்வளவோ அவளைப் பயமுறுத்தியும் நரகத்தின் பயங்கரக் காட்சிகளை எடுத்துச் சொல்லியும் அவள் அசரவில்லை. அவளது தீவிரமான அன்பைக் கண்டு மகிழ்ந்த எமன் அவளுக்குப் பல வரங்களை அளித்தான். அதிலொன்றாக அவளுக்கு மகப்பேறினையும் அவர்களது நாட்டுக்கு வாரிசையும் தருவதாகக் கூறிவிட்டான்.

வரவேற்பு

[தொகு]

இத்திரைப்படம் நல்ல வெற்றிபடமாக அமைந்து வணிகரீதியாக நல்ல லாபத்தைக் கொடுத்தது. மேலும் வெளியீட்டாளர்களின் பங்காக 1,00,000 ரூபாய்க்கு மேலாகக் கிடைத்த முதல் தெலுங்குத் திரைப்படம் என்ற சிறப்பையும் பெற்றது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Narasimham, M. L. (7 November 2010). "Sati Savithri (1933)". தி இந்து. Chennai, India. Archived from the original on 13 November 2010. பார்க்கப்பட்ட நாள் 8 July 2011.
  2. Bhagwan Das Garg (1996). So many cinemas: the motion picture in India. Eminence Designs. p. 86. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-900602-1-X.

வெளி இணைப்புகள்

[தொகு]