சகோதரி நிவேதிதை
சகோதரி நிவேதிதை Sister Nivedita | |
---|---|
இந்தியாவில் நிவேதிதை | |
பிறப்பு | 28 அக்டோபர், 1867 அயர்லாந்து |
இறப்பு | அக்டோபர் 13, 1911 டார்ஜிலிங், மேற்கு வங்காளம், இந்தியா | (அகவை 43)
சகோதரி நிவேதிதை (28 அக்டோபர் 1867 - 13 அக்டோபர் 1911),(இயற்பெயர்:மார்கரெட் எலிசபெத் நோபல்), சமூக சேவகியும் எழுத்தாளரும் ஆசிரியையும் சுவாமி விவேகானந்தரின் முதன்மை சீடரும் ஆவார். ஆங்கில-ஐரியப் பெண்ணான இவர் 1895 ஆம் ஆண்டில் இலண்டனில் விவேகானந்தரை சந்தித்து அவருடைய கொள்கைகளால் கவர்ந்திழுக்கப்பட்டு 1898ஆம் ஆண்டு சனவரி 28இல் இந்தியாவில் கல்கத்தா நகருக்கு வந்தார். நிவேதிதையை வரவேற்க சுவாமி விவேகானந்தரே துறைமுகத்திற்குச் சென்றிருந்தார். மார்ச் 28, 1898 ஆம் ஆண்டு பிரம்மச்சரிய தீட்சைக் கொடுக்கும்போது விவேகானந்தர் தெய்வத்திற்கு அர்ப்பணிப்பு எனும் பொருள்படும் நிவேதிதா என்ற பெயரை அளித்தார். (இவ்வாறு இந்து சமயத்தில் தீட்சை வழங்கப்பட்ட முதல் மேற்கத்திய பெண் இவர் என்று சொல்லப்படுகிறது). கடினமான உழைப்பு மற்றும் தவ வாழ்வால் உடல் நலன் பாதிக்கப்பட்டு அக்டோபர் 13, 1911 அன்று டார்ஜிலிங்கில் இறந்தார்.
முக்கிய நிகழ்ச்சிகள்
[தொகு]- 1898 ஆம் ஆண்டு மார்ச் 11-இல் நிவேதிதையை கல்கத்தாவாசிகளுக்கு அறிமுகப்படுத்துவதற்காக சுவாமி விவேகானந்தர் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார்.
- 1898 ஆம் ஆண்டு மார்ச் 17-இல் அன்னை சாரதாதேவியை சந்தித்தார். இந்நிகழ்வை அவர் ”பொன்னான நாள்” என்று குறிப்பிடுகிறார். அன்னை சாரதா தேவி, அவர்களை வரவேற்று உரையாடி மகிழ்ந்தார். மொழி புரியாத போதும் அன்னையின் இனிமையை புரிந்து கொள்ள அவரால் முடிந்தது. அன்னையுடன் உரையாடுவதற்காகவே நிவேதிதை வங்காள மொழி கற்றுக் கொள்ள ஆரம்பித்தார்.
- 1898 ஆம் ஆண்டு மார்ச் 25-இல், வெள்ளிக் கிழமையன்று அவரது குரு, ’நிவேதிதை’ என்று பெயர் சூட்டினார்.
இளமைப் பருவம்
[தொகு]மார்கரெட் எலிசபெத் நோபிள் அயர்லாந்தின் வடபகுதி மாகாணம் டைரோனில் உள்ள டங்கனன் எனும் ஊரில் சாமுவேல் ரிச்மண்ட், மேரி இசபெல் ஹாமில்டன் தம்பதியினருக்கு மூத்த மகளாக பிறந்தார். மார்கரெட் எலிசபெத் நோபிளின் தங்கை மே, தம்பி ரிச்மண்ட். இவர்கள் அயர்லாந்தில் அப்போதைக்கு ஐநூறாண்டுகளுக்கு முன் குடியேறிய ஸ்காட்டிஷ் பரம்பரையின் நோபிள் குடும்பத்தவர்.[1]
மார்கரெட் எலிசபெத் நோபிளின் தந்தையும், தாத்தாவும் வாழ்ந்த காலத்தில் அயர்லாந்து மக்களை ஆங்கில அரசு துன்புறுத்தி வந்தது. மார்கரெட் எலிசபெத் நோபிளின் தாத்தா (பாட்டனார்) ஜான் நோபிள் சுதந்திரப் போராட்ட வீரர், இவர் பாதிரியாகப் பணியாற்றி வந்தார். தாய் வழித் தாத்தாவும் அயர்லாந்தின் விடுதலைப் போராட்ட வீரர்.[1]
மார்கரெட் எலிசபெத் நோபிளின் தந்தை சாமுவேல் ரிச்மண்ட் மதபோதகராகப் புகழ் பெற்றவர். மேலும் ஏழைகளுக்கு சேவை புரிந்து வந்தவர். கடின உழைப்பு காரணமாக தமது முப்பத்து நான்காம் வயதில் மறைந்தார்.[1]
ஆசிரியை மார்கரெட் எலிசபெத் நோபிள்
[தொகு]தமது பதினேழாம் வயதில் கல்லூரிப் படிப்பை முடித்த பின்னர் 1884 ஆம் வருடம் இங்கிலாந்தின் கெஸ்விக் நகரிலுள்ள பள்ளியில் பணியாற்றினார். 1886 இல் வெக்ஸாம் நகரில் வேறு பள்ளிக்கு மாறி பணியாற்றினார். சுவிட்சர்லாந்தின் பெஸ்டலாஜி எனும் ஆசிரியர் கண்டுபிடித்திருந்த புதிய கல்விமுறையில் ஈடுபாடு கொண்டு அதனை வரவேற்றார். அக்கல்விமுறையை நடைமுறைக்குக் கொண்டு வர மிசஸ்.டி.லியூ. என்பவர் விடுத்த அழைப்பை ஏற்று 1890ஆம் ஆண்டு லண்டனில் உள்ள விம்பிள்டன் சென்றார். பின்னர் தம் கருத்துக்களை தடையின்றி நிறைவேற்றும் வண்ணம் 1892 ஆம் ஆண்டில் தானே ’ரஸ்கின் பள்ளி’ என்ற பெயரில் ஓர் பள்ளியை ஆரம்பித்தார். தம் இளம் பிராயத்திலேயே, 1884 ஆம் ஆண்டிலிருந்து 1894 ஆம் ஆண்டு வரை ஓர் ஆசிரியையாகப் பணியாற்றியிருந்தார் மார்கரெட் எலிசபெத் நோபிள். இலண்டனில் இருந்த அறிஞர்களிடையே செல்வாக்கு பெற்றிருந்தார். பிரபல கல்வியாளராவார் மார்கரெட் எலிசபெத் நோபிள் என்று அவ்வறிஞர்கள் உணர்ந்திருந்தனர்.[1]
மத நம்பிக்கைகள்
[தொகு]சிறு வயதிலேயே சமய நம்பிக்கை கொண்டவராக வளர்ந்த மார்கரெட் எலிசபெத் நோபிள், ஏசு கிறிஸ்து மீது உளமார்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். சமயம் என்பது கோட்பாடுகளை நம்புவதல்ல உண்மைப் பொருளுக்கான தேடல் என்ற தமது கருத்தால் தேவாலயத்துக்கு செல்வதை நிறுத்தினார். புத்தரின் போதனையை மூன்று ஆண்டுகள் கற்றார். அவரது வாழ்க்கையால் பெரிதும் கவரப்பட்டார். ஆனால் மார்கரெட் எலிசபெத் நோபிளின் சந்தேகங்களை போக்கி மன ஆறுதல் தர அவை போதவில்லை.[1]
இவற்றிற்குப் பிறகே சுவாமி விவேகானந்தரைச் சந்தித்தார். ஓர் நவம்பர் மாதம் மார்கரெட் எலிசபெத் நோபிளின் தோழி இசபெல் மார்கசென் வீட்டில் நடந்த சொற்பொழிவைக் கேட்டார். அவரது பேச்சு பிடித்திருந்தாலும் புதிய கருத்துகள் ஏதும் அதில் இல்லை என்று முதலில் குறைகூறினார். பின்னர் தாமே சிந்தித்துப் பார்த்து தாம் அவ்வாறு கூறியது தவறென்று உணர்ந்தார். அதன் பின்னர் சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுகளை ஆர்வமுடன் கேட்கலானார்.[1]
பல புதிய தகவல்களை அவரது சொற்பொழிவுகள் மூலம் அறிந்து கொள்ள முடிந்தாலும் அவர் கூறிய எல்லா கருத்துக்களையும் ஏற்க முடியாத சமயங்களில் எல்லாம் துணிந்து சுவாமி விவேகானந்தரிடம் கேள்விகள் எழுப்பி வாதாடினார் மார்கரெட் எலிசபெத் நோபிள்.[1]
ஒரு சமயம் இந்தியப் பெண்களின் நிலை பற்றி பேசிக் கொண்டிருந்த சுவாமி விவேகானந்தர் ’என் நாட்டுப் பெண்களின் கல்வி குறித்த திட்டங்களில் நீ பெரிதும் உதவ முடியும் என்று நம்புகிறேன்’ என்று கூறினார். இவை மார்கரெட் எலிசபெத் நோபிளுக்கு இந்திய மக்களுக்காகப் பாடுபட வேண்டும் என்பதற்கான ஓர் அழைப்பாகத் தோன்றியது.[1]
இந்தியாவிற்கு வந்த பின்னரும், எளிதாக எந்தக் கருத்தையும் ஏற்றுக் கொள்பவராக இல்லாத நிவேதிதை எதிர்ப்புகளையும் கேள்விகளையும் எழுப்புவார். யாரிடமும் தமது கருத்தைத் திணிக்க விரும்பாத சுவாமி விவேகானந்தரும் உரிய விளக்கங்களைத் தந்து விட்டு நிவேதிதையின் போக்கில் விட்டுவிடுவார். ஆனால் எதிர்க்கருத்தைக் கூறுகிறார் என்று நிவேதிதையை ஒதுக்கி வைத்ததும் கிடையாது. சுவாமி விவேகானந்தருக்கு தமது குருவிடம் தாம் கேள்வி கேட்ட நாட்களை நினைவு படுத்துவதாக அவை அமைந்திருந்தன.[2]
குருவின் பயிற்சி
[தொகு]சுவாமி விவேகானந்தர், நிவேதிதையை சிறப்பாகப் பயிற்றுவித்தார். பயிற்சி மூன்று முக்கிய அம்சங்கள் கொண்டவையாக அமைந்தது.
இந்தியாவை அறிந்து கொள்வது
[தொகு]இந்திய வரலாறு, அதன் மன்னர்கள், துறவிகள், வீரர்கள் தியாகிகள் என்று சுவாமி விவேகானந்தர் இந்தியாவைப் பற்றி விளக்கியிருந்தும், இங்கிலாந்து இந்தியாவிற்கு பேரளவு நன்மை செய்வதாகவே இங்கிலாந்தில் இருந்த போது கேள்விப்பட்டிருந்த நிவேதிதைக்கு இங்கிலாந்து இந்தியாவிற்கு இழைத்த தீமைகள் தெரியாத ஒன்று. ஆங்கில ஆட்சியின் தீமைகளை சுவாமிகள் கூறியபோது அவற்றை நம்ப அவர் மனம் முதலில் மறுத்தது. மேலும் பல துறைகளிலும் தனிக்கருத்து கொண்டிருந்தார் நிவேதிதை. இது சுவாமிகளின் கருத்துக்களை நிவேதிதைப் புரிந்து கொள்வதைக் கடினப்படுத்தியது. சிறிது காலத்திற்குள் தமது ஐயங்கள் பொய்யானவை என்பதைப் புரிந்து கொண்டு பணிவாக இருப்பது என்று முடிவெடுத்தார் நிவேதிதை.[3]
ஆன்மீகக் குறிக்கோள் மற்றும் சாதனைகள்
[தொகு]எளிய, தூய, புனித வாழ்வு வாழ்வதுடன் அனைத்து உயிர்களையும் இறைவனாகக் கருதி அவர்களுக்குப் பணி செய்தல் எனும் கோட்பாடுகளை உணர்ந்து செயலாக்க முனைந்தார் நிவேதிதை.[3]
கற்பிப்பதற்கான செயல்முறைத் திட்டம்
[தொகு]இந்தியாவிற்கு நிவேதிதை வந்ததன் முக்கிய காரணம் கற்பிப்பது. அதில் சுவாமி விவேகானந்தர் படிப்படியாக தொண்டு செய்யவே வந்துள்ளதையும் மற்றவர்களை விடப் பெரிய அறிவாளிகள் என்றோ அவர்களைக் கைதூக்கி விடும் உயர்ந்தோராகவோ நினைத்துக் கொள்ளாதிருப்பதன் அவசியத்தைப் புகட்டினார். மேலும் தொண்டு செய்ய வேண்டியிருக்கும் மக்களினத்தை அறிந்திருப்பதன் அவசியத்தையும் மேனாட்டுக் கருத்துக்களை திணிக்காதிருப்பதன் அவசியத்தையும் அறிவுறுத்தினார்.[3]
நிவேதிதா இந்தியாவிற்கு ஆற்றிய தொண்டுகள்
[தொகு]கல்விப் பணி
[தொகு]1898, நவம்பர் 13 ஆம் நாள், எண் 16, போஸ்பாரா தெருவில் அமைந்துள்ள வீட்டில் பெண்களுக்கான பள்ளி திறக்கப்பட்டது. காளி பூசையன்று அன்னை சாரதா தேவி பள்ளியைத் திறந்து வைத்தார். ’அன்னையின் ஆசியை விட வேறு நல்ல சகுனத்தை என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. எதிர்காலத்தில் சிறந்து விளங்கப்போகும் படித்த பெண்ணினத்திற்கு இதைவிட நல்ல சகுனம் ஏதும் இருக்க முடியாது’ என்று தமது கடிதத்தில் எழுதுகிறார் நிவேதிதை.
இப்பள்ளியில் சிறுமிகளுக்கு எழுதப் படிக்க சொல்லித் தந்ததுடன், ஓவியம் வரைதல், மண்பொம்மைகள் செய்தல், துணி தைத்தல் முதலானவையும் சொல்லித் தந்தார் நிவேதிதை. அதன்பின் சிறுமிகளின் அன்னையருக்கும் கல்வியும் மற்ற நுண்கலைகளும் சொல்லித் தரும் பிரிவு சகோதரி கிறிஸ்டைன் துணையுடன் ஆரம்பித்தார்.[1]
பள்ளி நடத்துவதற்கான செலவை புத்தகம் எழுதி அதில் வரும் தொகை கொண்டு சமாளித்தார் நிவேதிதை. இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நண்பர்களும் உதவினர். மிசஸ் புல் என்பவர் பெருமளவு உதவினார்.[1]
நிவேதிதையின் மறைவுக்குப் பின்னரும் அன்னை சாரதா தேவி இப்பள்ளி தொடர்ந்து நடைபெறச் செய்தார்.[4] தன்னுடைய முன்னாள் மாணவிகளுக்காக இணையதளத்தை பராமரித்து வருகிறது இப்பள்ளி.[5]
கொள்ளை நோய் நிவாரணப் பணி
[தொகு]சுவாமி விவேகானந்தர், மார்ச் மாதத்தில் கல்கத்தா மக்களை தாக்கிய கொள்ளை நோயின் நிவாரணப் பணி செய்ய அமைத்த குழுவிற்கு நிவேதிதையை தலைவியாக்கினார். நிவேதிதை நோயாளிகளைப் பராமரிக்கவும் நகரைத் தூய்மைப் படுத்தவும் இளைஞர் குழு ஒன்றையும் அமைத்து தொண்டாற்றினார்.
மாவட்ட மருத்துவ அலுவலர் தமது குறிப்பேட்டில் "இந்தப் பேரிழப்புக் காலத்தில் அன்பின் வடிவாகத் திகழ்ந்த நிவேதிதையை பாக்பசாரில் உள்ள எல்லாக் குடிசைப் பகுதிகளிலும் காண முடிந்தது. தன்னைப் பற்றிய சிந்தனையின்றி, துன்பத்தால் நலிந்தோர்க்குப் பணத்தாலும் உழைப்பாலும் உதவி புரிந்தாள் அவள்." என்று குறிப்பிட்டுள்ளார்.[6]
மேல்நாட்டுப் பயணம்
[தொகு]புதிய முறைகளைப் பின்பற்றி நிவேதிதை துவக்கிய பள்ளி சோதனையளவில் இருந்ததால் அதனை வளர்க்க நிதி உதவி வேண்டியிருந்தது. நிதி திரட்ட இங்கிலாந்துக்கு செல்ல வேண்டியிருந்தது. சுவாமி விவேகானந்தரும் அப்போது மேலை நாடு செல்வதாக இருந்ததால் அவருடன் 1899 ஜூன் மாதத்தின் இடைக்காலத்தில் புறப்பட்டார். சுவாமி விவேகானந்தர் இந்தப் பயணத்தின் போது தனது பயண அனுபவங்களை ’உத்போதன்’ பத்திரிக்கைக்காக எழுதினார். அப்பயணத்தில் சுவாமி விவேகானந்தர் கூறியவற்றைக் குறிப்பெடுத்து ’தி மாஸ்டர் அஸ் ஐ சா ஹிம்’ என்ற நூலில் சேர்த்தார் நிவேதிதை.[7]
அமெரிக்காவிலும் தனது பள்ளிக்காக நன்கொடை திரட்டினார் நிவேதிதை. பள்ளிக்கு நிதி திரட்ட மேல்நாட்டுக்குச் சென்ற நிவேதிதை அமெரிக்கப் பெண்களிடம் இந்தியப் பெண்களைப் பற்றிய சரியான புரிந்துணர்வுத் தகவல்கள் இல்லை என்பதை உணர்ந்தார். அவர் நிதி திரட்டச் சென்ற சமயம் அமெரிக்கா போன்ற மேல் நாடுகளில் மிஷனரிகளால் இந்தியாவைப் பற்றியும் இந்து மதத்தைப் பற்றியும் பல தவறான எதிரான தகவல்கள் பெருமளவில் பரப்பப்பட்டிருந்தது. அந்நிலையில் இந்திய பெண் குழந்தைகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட பள்ளிக்கு நிதி திரட்டுவது என்பது மிகச் சிரமமான காரியமாகவே இருந்ததால் பேரளவில் உரையாற்றி உண்மையான நிலையை தெரியப்படுத்துவது என்பது தேவையான ஒன்றாயிற்று.[8]
நியூயார்க்கில் ’ராமகிருஷ்ண தொண்டர் சங்கம்’ அமைப்பை நிறுவி ’ராமகிருஷ்ணர் பெண்கள் பள்ளிக்கான திட்டம்’ என்ற தலைப்பில் சிறு புத்தகமும் வெளியிட்டார். இந்தியப் பெண்களின் உள்ளத் தூய்மையைப் பற்றியும் சாந்த இயல்பு பற்றியும் பேசினார். இவற்றின் மூலம் அமெரிக்கப் பெண்கள் இந்திய மக்களின் வாழ்க்கையைப் பற்றித் தெளிவாக அறிந்து கொண்டனர்.
ஆனால் இவற்றின் இடையே எதிர்ப்புகளையும் பழிப்புகளையும் அவர் சந்திக்க வேண்டியிருந்தது. லண்டன் பத்திரிக்கை நிருபர் ஒருவர் நிவேதிதையை ’இந்திய நாட்டிற்காகத் தொண்டாற்றும் வீராங்கனை’ என்று குறிப்பிட்டார். [எவ்வாறு?]
விவேகானந்தரின் கவிதை
[தொகு]பாரிசில் உள்ள பிரிட்டானியில் ’நல்வாழ்த்து’ என்ற கவிதையை சுவாமி விவேகானந்தர் நிவேதிதைக்குப் பரிசாக எழுதித் தந்தார்.
- "தாயின் இதயமும் தலைவனின் உள்ளமும்
- ஆய தென்றலின் அற்புத இனிமையும்
- ஆரிய பீடத் தழகொளி விரிக்கும்
- சீரிய எழிலும் திகழும் வலிமையும்
- கனவிலும் முன்னோர் கண்டிரா வகையில்
- உனதென ஆகி ஓங்குக மென்மேல்!
- எதிர்காலத்தில் இந்திய மகனின்
- சீர்சால் தலைவியாச் செவிலியாய்த் தோழியாய்
- நேரும் ஒருமையில் நீயே ஆகுக!"
நண்பர்கள் மற்றும் விடுதலை இயக்கத் தலைவர்கள்
[தொகு]இரவீந்திரநாத் தாகூர், சகதீச சந்திர போசு முதலானவர்களுடன் நண்பராக இருந்தார்.
விடுதலை இயக்கத்தினர்
[தொகு]சுவாமி விவேகானந்தரின் மறைவிற்குப் பின்னர் பன்மடங்கு உறுதியுடன் இந்தியாவிற்கு பணி செய்தார். ’அவர் மறையவில்லை. நம்மிடையே இருந்து வருகின்றார்’ என்றும் ’வருந்திக் கொண்டிருப்பதை விட மேலும் பணிசெய்ய விரும்புகிறேன்’ என்றும் தமது கடிதத்தில் குறிப்பிடுகின்றார் நிவேதிதை. இதன்பின்னரே தேசிய விடுதலைப் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்தார். ஆரம்பத்தில் இங்கிலாந்தும் இந்தியாவும் நட்புடன் வாழும் என்று நம்பிய நிவேதிதைக்கு இந்திய வாழ்க்கை அனுபவம் விடுதலை பெறாமல் இந்தியா மேன்மை பெற முடியாது என்பதை உணர்த்தியது.
அரவிந்தருடன் இணைந்து இந்திய விடுதலை இயக்கத்திலும் பங்கேற்றார். தனது இந்த ஈடுபாட்டினால் ஆங்கில அரசு இராமகிருஷ்ண இயக்கத்தை முடக்காமல் இருக்க அவ்வியக்கத்தில் இருந்து தன் அதிகாரபூர்வ பிணைப்பை விலக்கிக் கொண்டார்.
இந்தியக் கவுன்சில், அல்லது சபை நியாயமற்ற சட்டத்தைப் பிறப்பித்தால் அதை முதலில் எதிர்ப்பவராக இருந்தார். உணர்ச்சி பொங்க பேசியும் எழுதியும் தனக்கு சரி என்று தோன்றியதை எடுத்துக் கூறி வாதாடினார் நிவேதிதை. இந்தியாவில் பாட்னா, லக்னௌ, காசி, பம்பாய், நாக்பூர், சென்னை என்று பல இடங்களிலும் மேடைகளில் உரையாற்றினார்.
தேசியப் பாடலாக ’வந்தே மாதரம்’ அங்கீகரிக்கப்படாத அக்காலத்திலேயே தமது பள்ளியில் காலை வணக்கத்தின் போது அப்பாடலை பாடச் செய்தார்.
வங்காளத்தின் அனுசீலன் சமித்தி முதலான புரட்சி இயக்கங்களுடனும் தொடர்பிலிருந்தார்.
சென்னை வருகையும் சொற்பொழிவும்
[தொகு]1902 திசம்பர் 19ஆம் தேதி சென்னைக்கு வந்த சகோதரி நிவேதிதை இந்து இளைஞர் சங்கம் சார்பில் பச்சையப்பா அரங்கத்தில் திசம்பர் 20ஆம் தேதி ’இந்தியாவின் ஒருமைப்பாடு’ என்ற தலைப்பில் உரையாற்றினார். சென்னையில் பல்வேறு உரையாடல், சொற்பொழிவுகள் மற்றும் பேட்டிகளிலும் கலந்து கொண்டார். சித்தாரிப்பேட்டையில் நிவேதிதை நிகழ்த்திய சொற்பொழிவு குறித்து 1902 ஆம் ஆண்டு திசம்பர் மாத ’த மெட்ராஸ் மெயில்’ பத்திரிக்கை மிகவும் புகழ்ந்திருந்தது. 1903 சனவரி 20 ஆம் தேதி சென்னையில் கொண்டாடப்பட்ட சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள் விழாவிலும் வந்து கலந்து கொண்டு மறுநாள் கல்கத்தா திரும்பினார் சகோதரி நிவேதிதை.[9]
அறிவியல்
[தொகு]பிரபல இந்திய அறிவியல் அறிஞரான ஜகதீஷ் சந்திர போஸ் ’தாவரங்களின் உணர்ச்சி’ என்ற நூலையும் மற்றும் பல நூல்களையும் வெளியிட உதவினார்.
கலை
[தொகு]இந்திய கலைகளுக்கு ஓர் புது உரு தந்தார். பிறவி மேதைகளாக இருந்த இந்தியக் கலைஞர்கள் மேலை நாட்டு பாணியை பின்பற்றுவதை விரும்பாத நிவேதிதை, இந்திய வாழ்க்கையைச் சித்தரிக்கும் ஓவியங்களையும் இந்தியவுணர்வைத் தட்டி எழுப்பி இந்தியாவின் உயர்வைச் சித்தரிக்கும் ஓவியங்களையும் வரையச் சொல்லி தூண்டினார்.
அபனீந்திரநாத் தாகூர் மற்றும் அபனீந்திரநாத் தாகூரின் மாணவர்கள் நந்தலால் போசு, அஜித் ஹல்தார் முதலான ஓவியர்கள் நிவேதிதையின் கருத்தால் தாக்கம் கொண்டனர்.
பாரதியாரின் குருவாக
[தொகு]மகாகவி பாரதியார் இவரைத் தமது குருவாகக் குறிப்பிடுவார்.[10] ஒரு முறை, பாரதியார் சகோதரி நிவேதிதாவை சந்தித்தபோது, அவரது மனைவியை அழைத்து வரவில்லையா என பாரதியாரிடம் கேட்டுள்ளார். அதற்கு பாரதியார், சமுதாய வழக்கப்படி தான் அவரை வெளியில் எங்கும் அழைத்துச் செல்வதில்லை என குறிப்பிட்டார். மேலும் தனது மனைவிக்கு அரசியல் குறித்து எதுவும் தெரியாது என்றும் கூறினார். இதைக் கேட்ட சகோதரி நிவேதிதை வருத்ததுடன், ’மனைவியை அடிமைக்கு அதிகமாக நினைக்காத இன்னொரு இந்திய மனிதரைக் காண்கிறேன் என்றார். மேலும் சகோதரி நிவேதா, பாரதியாரிடம், 'உங்கள் மனைவிக்கே நீங்கள் சம உரிமையும், விடுதலையும் கொடுப்பதில்லை. இந்நிலையில், நீங்கள் நாட்டுக்கு எவ்வாறு விடுதலை பெற்றுத்தர போகிறீர்கள்', என்று கேட்டார். இந்த உரையாடல் தான் பாரதியாருக்கு பெண்களைப் பற்றிய சிந்தனையை மாற்றி, பெண்ணுரிமைக்காக போராட தூண்டுகோலாக இருந்தது.[11]
பாரதியாரின் நூல் சமர்ப்பணங்கள்
[தொகு]"ஸ்ரீகிருஷ்ணன் அர்ஜுனனுக்கு விசுவரூபம் காட்டி ஆத்தும நிலை விளக்கியதொப்ப, எனக்கு பாரததேவியின் ஸம்பூர்ண ரூபத்தைக் காட்டி, ஸ்வதேச பக்தியுபதேசம் புரிந்தருளிய குருவின் சரண மலர்களில் இச்சிறு நூலைச் சமர்ப்பிக்கின்றேன்" என 1908 ஆம் ஆண்டு தாம் எழுதிய ’ஸ்வதேச கீதங்கள்’ முதல் பகுதியை பாரதியார் நிவேதிதைக்கு சமர்ப்பணம் செய்து எழுதியிருந்தார்.
1909 ஆம் ஆண்டு ’’ஸ்வதேச கீதங்கள்’ நூலின் இரண்டாம் பாகமான ’ஜன்ம பூமி’யையும் நிவேதிதைக்கு சமர்ப்பணம் செய்தார். "எனக்கு ஒரு கடிகையிலே மாதாவினது மெய்த் தொண்டின் தன்மையையும் துறவுப் பெருமையையும் சொல்லாமல் சொல்லி உணர்த்திய குருமணியும், பகவான் விவேகானந்தருடைய தர்ம புத்திரியும் ஆகிய ஸ்ரீமத் நிவேதிதா தேவிக்கு இந்நூலைச் சமர்ப்பிக்கின்றேன்" என்று எழுதியிருந்தார்.[12]
இறுதி நாட்கள்
[தொகு]போஸ் (சகதீச சந்திர போசு) குடும்பத்தினருடன் நிவேதிதை டார்ஜிலிங் சென்றிருந்தார். ’ரே வில்லா’ என்ற வீட்டில் தங்கி முதல் சில நாட்களை அமைதி நிரம்பிய சூழ்நிலையில் செலவிட்ட பின்னர் சாண்டக்பூ எனும் மலைச்சிகரத்தை பார்க்க முடிவு செய்தனர். அங்கு கிளம்பும் நாளன்று அவருக்கு ரத்தபேதி கண்டது. சிறந்த முறையில் மருத்துவர்கள் சிகிச்சை செய்தும் பலன் கிட்டவில்லை. அக்டோபர் 7 ஆம் நாள் உயில் எழுதி தனது சொத்துக்களையும் நூல்களையும் இந்தியப் பெண்களுக்கு தேசியக் கல்வி வழங்க எழுதி வைத்து அதற்கு பேலூர் மடத்தைச் சார்ந்த மூத்த துறவிகளை அறங்காவலர்கள் ஆக்கினார்.
தமக்கு மிகவும் பிடித்த பிரபஞ்சம் தழுவிய அன்பையும் அமைதியையும் கூறுகின்ற பௌத்த தோத்திரத்தை அடிக்கடி படிக்கக் கேட்டு மகிழ்ந்தாள்.
உபநிடதத்தில் வரும் ருத்ரப் பிரார்த்தனை ஒன்று நிவேதிதைக்கு மிகவும் பிடித்தது. மரணம் அவளை நெருங்கிக் கொண்டிருந்த போது அந்தப் பாடலை அடிக்கடிப் பாடினாள்.
அந்தப் பாடல் ’அஸதோ மா ஸதகமய தமஸோ ம ஜ்யோதிகமய ம்ருத்யோர் மா அம்ருதம் கமய’
பொருள் உண்மையற்றதிலிருந்து எங்களை உண்மைக்கு அழைத்துச் செல்வாயாக, இருளிலிருந்து எங்களை ஒளிக்கு அழைத்துச்செல்வாயாக மரணத்திலிருந்து எங்களை மரணமிலாப் பெருவழ்விற்கு அழைத்துச் செல்வாயாக
மேகமூட்டமான அந்த நாட்களில் டார்ஜிலிங்கில் சூரிய தரிசனம் கிடைப்பது மிகவும் அபூர்வம். ஆனால் அக்டோபர் 13, காலை ஏழு மணி சமயம் சூரியன் ஒளிவீசினான். அதைப் பார்த்தபடி நிவேதிதை ’பழுதடைந்த இந்தப் படகு மூழ்கிக் கொண்டிருக்கிறது. ஆனாலும் என்னால் சூரியோதத்தைக் காண முடிகிறது என்றார். பிறகு அவர் ஆவி பிரிந்தது.
’ரே வில்லா’ வின் இன்றைய நிலை
[தொகு]1957 திசம்பரில் பண்டித நேருவும், இந்திரா காந்தியும் அங்கு வருகை தந்துள்ளனர். பின்னர் பல ஆண்டுகள் பயன்பாட்டில் இல்லாத அந்த கட்டிடம், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் முயற்சியால் மே 16, 2013 இல் ராமகிருஷ்ண இயக்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இங்கு ’ராமகிருஷ்ண மிஷன் நிவேதிதை கல்வி மற்றும் கலாச்சார மையம்’ நிறுவ முயன்று வருகின்றனர்.[13][14]
மேலும் படிக்க
[தொகு]- en:wikisource|The Complete Works of Swami Vivekananda/Volume 9/Excerpts from Sister Nivedita's Book
- India’s 50 Most Illustrious Women (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-88086-19-3) இந்திரா குப்தா
உதவி நூல்
[தொகு]- சகோதரி நிவேதிதை வாழ்க்கை வரலாறு; ஸ்ரீராமகிருஷ்ணமடம், சென்னை
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 சகோதரி நிவேதிதை வாழ்க்கை வரலாறு; (ஆங்கில மூலம் ப்ரவ்ராஜிகா ஆத்மப்ராணா;) ஸ்ரீராமகிருஷ்ண மடம்; சென்னை; பக்கம் 7-20
- ↑ சுவாமி விவேகானந்தர் விரிவான வாழ்க்கை வரலாறு; பாகம் 2; ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை;பக்கம் 163-164;
- ↑ 3.0 3.1 3.2 சகோதரி நிவேதிதை வாழ்க்கை வரலாறு; (ஆங்கில மூலம் ப்ரவ்ராஜிகா ஆத்மப்ராணா;) ஸ்ரீராமகிருஷ்ண மடம்; சென்னை; பக்கம் 27-30
- ↑ http://www.sisterniveditagirlsschool.org/grandhistory.html
- ↑ http://www.niveditapractoni.com
- ↑ சகோதரி நிவேதிதை வாழ்க்கை வரலாறு; (ஆங்கில மூலம் ப்ரவ்ராஜிகா ஆத்மப்ராணா;) ஸ்ரீராமகிருஷ்ண மடம்; சென்னை; பக்கம் 32-34
- ↑ சுவாமி விவேகானந்தர் விரிவான வாழ்க்கை வரலாறு; பாகம் 2; பக்கம் 275
- ↑ http://www.balagokulam.org/teach/biographies/sister.php
- ↑ சுவாமி ராமகிருஷ்ணானந்தர் விரிவான வாழ்க்கை வரலாறு; ஸ்ரீராமகிருஷ்ண மடம்; சென்னை; பக்கம் 234
- ↑ "ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்-மார்ச் 2014 கட்டுரை-சகோதரி நிவேதிதா பாரதியாரின் குரு". பார்க்கப்பட்ட நாள் 2014-03-01.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ வேதாந்த கேசரி; சுப்பிரமணிய பாரதியாரின் சகோதரி நிவேதிதையுடனான சந்திப்பு; பக்கம் 34[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ சகோதரி நிவேதிதை வாழ்க்கை வரலாறு;ஸ்ரீராமகிருஷ்ண மடம்; சென்னை
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-11-16. பார்க்கப்பட்ட நாள் 2014-06-26.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-07-16. பார்க்கப்பட்ட நாள் 2014-06-26.
வெளியிணைப்புகள்
[தொகு]- வாழ்க்கை வரலாறு பரணிடப்பட்டது 2009-06-14 at the வந்தவழி இயந்திரம்
- வாழ்க்கை வரலாறு - சுருக்கம் பரணிடப்பட்டது 2008-07-24 at the வந்தவழி இயந்திரம்
- விவேகானந்தரும் நிவேதிதாவும்
- நிவேதிதா தேவியின் அருளுரையும், வங்கப்பிரிவினையால் ஏற்பட்ட எழுச்சியும் பாரதியை ஒரு தீவிரவாதியாக மாற்றின.
- http://srkvijayam.com/2014/10/29/unselfishlove/ பரணிடப்பட்டது 2016-06-30 at the வந்தவழி இயந்திரம்
- http://vivekanandam150.com/?tag=சகோதரி-நிவேதிதை பரணிடப்பட்டது 2016-04-01 at the வந்தவழி இயந்திரம்
- http://www.aurobindo.ru/persons/00164_e.htm பரணிடப்பட்டது 2014-04-19 at the வந்தவழி இயந்திரம்