கௌஹர் அரா பேகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கௌஹர் அரா பேகம் (Gauhar Ara Begum) ( பாரசீக மொழி: گوہر آرا بیگم‎  ; 17 சூன் 1631 – c. 1706) ஒரு முகலாய இளவரசியும் முகலாயப் பேரரசர் ஷாஜகான் மற்றும் அவரது மனைவி மும்தாஜ் மஹாலின் பதினான்காவது மற்றும் இளைய குழந்தையும் ஆவார். [1]

1631-ஆம் ஆண்டில் அவரது தாயார் அவரைப் பெற்றெடுத்து இறந்தார். இருப்பினும், கௌஹர் ஆரா பிரசவத்தில் இருந்து தப்பி, மேலும் முக்கால் நூற்றாண்டு காலம் வாழ்ந்தார். அவரைப் பற்றியும், தனது தந்தையின் சிம்மாசனத்திற்கான வாரிசுப் போரில் அவர் ஈடுபட்டாரா என்பதும் பற்றி அதிகம் அறியப்படவில்லை.

கௌஹர் ஆரா 1706 ஆம் ஆண்டில் தனது 75 வயதில் இறந்தார்.

வாழ்க்கை[தொகு]

தாயார் மும்தாஜ் மஹால் இறந்த நாளான 1631 சூன் 17 அன்று பிறந்த கௌஹர் அரா பேகம், தனது தந்தை மற்றும் சகோதரரின் ஆட்சிக் காலம் முழுவதும் மிகவும் தாழ்ந்த ஆளுமையைக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. வாரிசுப் போரின் போது அரியணைக்கான தனது நான்காவது சகோதரர் முராத் பக்சின் முயற்சியை அவர் ஆதரித்திருக்கலாம் என்று சான்றுகள் தெளிவற்ற முறையில் சுட்டிக்காட்டுகின்றன. உண்மையாக இருந்தால், இந்தப் பாத்திரம் குறிப்பாக சுறுசுறுப்பாக இருந்திருக்க வாய்ப்பில்லை, ஏனெனில் அவரது தந்தை மற்றும் சகோதரி ஜஹானாரா போலல்லாமல், அவர் பின்னர் இவரது வெற்றிகரமான சகோதரர் ஔரங்கசீப்பால் சிறையில் அடைக்கப்படவில்லை.

தனது தந்தையின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, தனது உறவினர்களின் திருமணங்களை ஏற்பாடு செய்வதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அவரது மூத்த சகோதரர் தாரா மகன் சிபிகர் ஷிகோ 1673 இல் அவுரங்கசீப்பின் மகள் ஜுப்தாத்-உன்-நிஸாவை மணந்தபோது, கௌஹர் ஆராவும் அவரது தாய்வழி உறவினர் ஹமிதா பானு பேகமும் திருமண விழாவை ஏற்பாடு செய்தனர். 1672 ஆம் ஆண்டில் தாராவின் பேத்தி சலீமா பானு பேகம் (கவுகார் அரா தத்தெடுத்து வளர்த்தவர்) மற்றும் அவுரங்கசீப்பின் நான்காவது மகன் இளவரசர் முகமது அக்பர் ஆகியோரின் திருமண ஏற்பாட்டில் அவர் ஒரு பெரிய பங்கினை வகித்துள்ளார். மணமகளின்[2] தாயின் இடத்தை அவர் ஏற்றுக்கொண்டார், இத்திருமணம் ஒரு காலா நிகழ்வு என்று விவரிக்கப்பட்டது. "டெல்லி வாயிலிலிருந்து பேகமின் மாளிகைக்கு செல்லும் சாலையின் இருபுறமும் அலங்கார மரக் கட்டமைப்புகள் ஒளிரும் வகையில் அமைக்கப்பட்டன".

இறப்பு[தொகு]

கௌஹர் அரா பேகம் 1706இல் ஷாஜகானாபாத்தில் இறந்தார். அந்த நேரத்தில் தக்காணத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஔரங்கசீப், தனது தங்கையின் மரணத்தால் பாதிக்கப்பட்டார். "ஷாஜகானின் அனைத்து குழந்தைகளிலும், அவளும் நானும் மட்டுமே எஞ்சியிருந்தோம்" என்று அவர் தொடர்ந்து கூறியதாக கூறப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கௌஹர்_அரா_பேகம்&oldid=3912216" இலிருந்து மீள்விக்கப்பட்டது