ஜஹானாரா பேகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இளவரசி ஜெகானரா பேகமின் ஓவியம்

ஜஹானாரா பேகம் ( Jahanara Begum, 23 மார்ச் 1614 – 16 செப்டம்பர் 1681) என்பவர் ஒரு முகலாய இளவரசியாவார். இவர் மொகலாய மன்னர் ஷாஜகானுக்கும் மும்தாஜ்க்கும் மூத்த மகளாக பிறந்தவர் ஆவார். இவர் நல்ல படிப்பாளியாகவும், சூபி ஞானநெறியை பின்பற்றுபவராகவும், கவிதை எழுதும் ஆற்றல் பெற்றவராகவும் இருந்தார். இவர் அரசு நிர்வாகத்தில் தனது தந்தை ஷாஜகானுக்கு உறுதுணையாக உதவிபுரிந்தார். ஷாஜகான் நாட்டின் முதல் பெண்மணி என்ற் அந்தஸ்தை ஜஹானாரா பேகத்திற்கு வழங்கினார். 1631 ஜூன் 17ல் மும்தாஜ் மறைந்தபோது அவருக்கு வயது 38. ஜஹானாரா பேகத்திற்கு வயது 17. மனைவியை இழந்த தந்தைக்கு ஆறுதலாக இருந்தார். இவர் திருமணம் செய்துகொள்ளவில்லை.


தனது சகோதரர் தாராவின் மீது அளவற்ற அன்பு கொண்டிருந்தார். 1644 மார்ச் 29 ல் தாரா -நாதிரா பானு திருமணத்தை முன்னின்று நடத்தினார். திருமண ஏற்பாடுகளின் போது எதிர்பாராவிதமாக இவர் முகத்தில் தீக்காயங்கள் ஏற்பட்டது. ஷாஜஹானாபாத் (பழைய டெல்லி ) உருவாக்கப்பட்டபோது அதில் முக்கியப் பங்காற்றினார். அவரது வடிவமைப்பில் உருவாக்கப்பட்டதுதான் தற்போதைய சாந்தினி சௌக் பகுதி. 1658ல் ஷாஜகான் உடல் நலிவுற்றபோது அவரது மகன்களிடையே பதவிப்போராட்டம் தொடங்கியது. ஜஹானாரா பேகம் தாராவை ஆதரித்தார். ஆனால் போட்டியில் வெற்றி பெற்றவர் ஔரங்கசீப். சிறையில் அடைக்கப்பட்ட தனது தந்தை ஷாஜகானுக்கு ஆறுதலாக இருந்தார் ஜஹானாரா பேகம். நாட்டின் முதல் பெண்மணி என்ற் அந்தஸ்தை மீண்டும் ஜஹானாரா பேகத்திற்கு வழங்கினார் ஔரங்கசீப். ஆனால் அதை பெரிதாக கருதாமல் தனது தந்தையின் நினைவாகவே வாழ்ந்து 1681ல் மறைந்தார் ஜஹானாரா பேகம். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. எனது இந்தியா, எஸ். ராமகிருஷ்ணன், டிசம்பர் 2012, விகடன் பிரசுரம், சென்னை
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜஹானாரா_பேகம்&oldid=3847460" இலிருந்து மீள்விக்கப்பட்டது