கோபால்தாசு அம்பைதாசு தேசாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோபால்தாசு அம்பைதாசு தேசாய் (Gopaldas Ambaidas Desai) (1887–1951) தர்பார் கோபால்தாசு தேசாய் என்றும் அழைக்கப்படும் இவர் சௌராட்டிராவில் உள்ள தசா மாநிலத்தின் அரியணையில் ஏறிய ஒரு இளவரசரும் மற்றும் ஒரு பிரபல காந்தியவாதியும் மற்றும் சமூக ஆர்வலருமாவார். பிரிட்டிசு இராச்சியத்துக்கு எதிராக ஒரு சுதந்திரப் போராளியாக மாற தனது அரியணையை கைவிட்ட இந்தியாவின் முதல் இளவரசர் என்ற பெருமையைப் பெற்றார். [1]

தசா மற்றும் இராய்-சங்க்லியின் இளவரசர் மற்றும் ஆட்சியாளர்[தொகு]

கோபால்தாசு இன்றைய குசராத்தின் கேதா மாவட்டத்தில் வாசோவில் பிறந்தார். இவர் பரோடா அரசில் ஒரு இனாம்தாராகவும் (நிலப்பிரபு) தசா மாநிலத்தின் ஆட்சியாளராகவும் மற்றும் இராய் மற்றும் சங்க்லி கிராமங்களின் சாகிர்தாரராகவும் இருந்தார். வைணவரான இவர் பட்டிதார் சாதியைச் சேர்ந்தவராவார். மேலும் தேசாய் மற்றும் அமீன் என்றப் பட்டப்பெயருடன் அறியப்பட்டார். [2] இவர் தசாவின் ஆட்சியாளராக இருந்தார். இவரது தாய்வழி தாத்தா அம்பைதாசுக்குப் பிறகு இவரை அரியணைக்கு வாரிசாக ஏற்றுக்கொண்டனர். கோபால்தாசு மோகன்தாஸ் காந்தி மற்றும் இந்திய தேசிய காங்கிரசின் ஆதரவாளராக இருந்தார். அவர்களுக்கு பெருமளவில் நிதி உதவி வழங்கினார். இவர் ஒரு முற்போக்கான ஆட்சியாளராக இருந்தார். மேலும் தனது குடிமக்களுக்கு இலவச கல்வியை வழங்கினார். மேடம் மாண்டிசோரியின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட இவர், தனது வழிகாட்டியான மோதிபாய் அமினின் உதவியுடன் 1915 ஆம் ஆண்டில் வாசோவில் முதல் மாண்டிசோரி பள்ளியைத் தொடங்கினார். இது குசராத் மாநிலம் மற்றும் இந்தியாவின் முதல் மாண்டிசோரி பள்ளியாகவும், இருந்தது. [3]

1921 வாக்கில், கோபால்தாசு இந்திய தேசிய காங்கிரசில் தீவிரமாக இருந்தார். அந்த ஆண்டு இவர் கேதா மாவட்ட காங்கிரசு குழுவின் தலைவரானார். [4] அடுத்த ஆண்டு, இவரது அரசு பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இவர் தேசிய இயக்கத்தில் ஈடுபடுவதற்கும் காந்திக்கு நிதி உதவியை வழங்குவதற்கும் எதிராக பிரிட்டிசு அரசப்பிரதிநிதியின் எச்சரிக்கையை மீறியதால் பிரிட்டிசாரால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். பக்திபா என்று அழைக்கப்படும் கோபால்தாசு மற்றும் அவரது மனைவி பக்தி லட்சுமி 1922 முதல் தீவிரமான சுதந்திர போராளிகளாக மாறினர். இவர் பதவி நீக்கப்பட்ட பின்னர், கோபால்தாசின் மூத்த மகன் சூர்யகாந்தை புதிய ஆட்சியாளராக பிரிட்டிசார் முன்மொழிந்தனர். இவரும் தனது தந்தையின் அதே அரசியல் கருத்துக்களைக் கொண்டிருந்தார் என்பதால் மறுக்கப்பட்டது. பிரிட்டிசார் பின்னர் கோபால்தாசின் மற்ற மூன்று மகன்களையும் அணுகினார். அவர்கள் அனைவரும் தங்கள் தந்தையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி சலுகையை நிராகரித்தனர். [5]

விடுதலை போராளி[தொகு]

தனது நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கோபால்தாசு போர்சாட் நகருக்கு இடம் பெயர்ந்தார், அங்கிருந்து இவர் போர்சாத் மற்றும் பர்தோலி சத்தியாகிரகம் ஆகிய இரண்டிலும் பங்கேற்றார். 1930 ஆம் ஆண்டு சட்ட ஒத்துழையாமை இயக்கத்தின் போது, கோபால்தாசு, மற்றும் இவரது மனைவி பக்திபா, இரண்டு மூத்த மகன்கள் மகேந்திரன் மற்றும் சூர்யகாந்த், மற்றும் அவர்களது மனைவிகள் மற்றும் அவர்களது பிறந்த மகன், வெறும் ஆறு மாத வயதான பரிந்திரா உட்பட முழு தேசாய் குடும்பமும் சிறையில் அடைக்கப்பட்டனர். [6] வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் தேசாய்கள் தீவிரமாக பங்கேற்றனர். பக்திபா ஒரு புகழ்பெற்ற சமூக சேவையாளராகவும், காந்திய அரசியல் ஆர்வலராகவும் மாறினார். அதே நேரத்தில் இவரது மகன் யோக சுந்தர் ஒரு புகழ்பெற்ற நடனக் கலைஞராகவும் நடன இயக்குனராகவும், இந்திய மறுமலர்ச்சி குழுவின் நிறுவனராகவும் ஆனார். [1]

சமூக ஆர்வலர்[தொகு]

காந்திய வழியில் தீண்டாமையை ஒழிப்பதற்கும், பெண்களின் கல்விக்காகவும் கோபால்தாசும் பக்திபாவும் அயராது உழைத்தனர். குசராத் மற்றும் சௌராட்டிராவில் பெண் கல்வியறிவை முன்னேற்றுவதில் இவர்கள் முன்னோடியாக இருந்தனர். குறிப்பாக சிறுமிகளுக்கான குடியிருப்பு பள்ளிகள் நிறுவினர். இவர்கள் 1935 இல் நதியாட் என்னும் இடத்தில் விட்டல் கன்யா வித்யாலயாவையும் பின்னர் 1946 இல் ராஜ்கோட்டில் வல்லப் கன்யா வித்யாலயாவையும் நிறுவினர். இவை இரண்டும் பெண்கள் குடியிருப்புப் பள்ளிகளாகும். சுதந்திரம் அடைந்த உடனேயே, மகாத்மா காந்தியின் பிறந்த இடமான போர்பந்தரில் தர்பார் கோபால்தாசு 1947 ஆம் ஆண்டில் கிருதி மந்திர் என்ற நினைவுச்சின்னத்திற்கு அடிக்கல் நாட்டினார். [7]

இவர் பரோடாவிலிருந்து இந்திய அரசியலமைப்பு சபைக்கு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். [8] இந்தியச் சுதந்திரத்திற்குப் பிறகு கோபால்தாசு தனது தசா பகுதியின் ஆட்சியாளராக மீண்டும் நியமிக்கப்பட்டார். சுமார் 550 சுதேச மாநிலங்களில் தன்னார்வத்துடன் இந்திய ஒன்றியத்துடன் நிபந்தனையின்றி தானாக முன்வந்து இணைத்த முதல் இளவரசர் என்ற பெருமையால் இவர் நினைவு கூறப்படுகிறார். [9]

சமீபத்தில், ராஜ்போகன் காந்தி என்பவர், தர்பார் கோபால்தாசு தேசாயின் சுயசரிதையான 'குஜராத்தின் இளவரசர்' என்பதை எழுதியுள்ளார். [10]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 "Wanderings in wonderland". The Hindu. 25 August 2012. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/wanderings-in-wonderland/article3818579.ece. 
  2. "Yog Sunder: A true Prince of Dance".
  3. "Vaso Heritage Village". Archived from the original on 2013-12-02. பார்க்கப்பட்ட நாள் 2020-06-12.
  4. Heredia, Ruth (1997). The Amul India Story. New Delhi: Tata Mc Graw Hill. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780074631607. https://books.google.com/?id=TYEkjpYkHrMC&pg=PA30&lpg=PA30&dq=darbar+gopaldas+desai#v=onepage&q=darbar%20gopaldas%20&f=false. 
  5. McLeod, John (1999). Sovereignty, Power, Control: Politics in the State of Western India, 1916–1947. Netherlands: Brill. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789004113435. https://books.google.com/?id=jXpzWlPpE1cC&pg=PA232&lpg=PA232&dq=darbar+gopaldas+desai#v=onepage&q=gopaldas%20desai&f=false. 
  6. Sunder, Yog. "Thus Youngest Freedom Fighter in India's Struggle for Independence" (PDF).
  7. "Gandhi Bapu Kirti mandir".
  8. "Constituent Assembly Debate on 28 April, 1947".
  9. McLeod John, Sovereignty, Power, Control: Politics in the State of Western India, 1916-1947
  10. "Remembering a prince". The Hindu. 3 December 2014. http://www.thehindu.com/features/metroplus/interview-with-rajmohan-gandhi/article6658450.ece. பார்த்த நாள்: 5 December 2014.