கொரநாட்டுக்கருப்பூர் பெட்டி காளியம்மன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொரநாட்டுக்கருப்பூர் பெட்டி காளியம்மன் கோயில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள கொரநாட்டுக்கருப்பூர் என்னுமிடத்தில் உள்ள சுந்தரேஸ்வரர் கோயில் வளாகத்தில் உள்ள காளியம்மன் கோயிலாகும்.

அமைவிடம்[தொகு]

தலவிருட்சமான பாதிரி மரங்கள் அதிகமாக இருந்ததால் திருப்பாடலவனம் என்று முன்ன்ர் அழைக்கப்பட்ட இவ்வூரில் சுந்தரரேஸ்வரர் கோயில் என்னும் சிவன்கோயில் உள்ளது. அக்கோயில் வளாகத்தில் பெட்டி காளியம்மன் எனப்படும் சுந்தர மகாகாளியம்மன் கோயில் உள்ளது. சிவன் கோயிலின் சன்னதிக்கு அருகில், அம்மன் சன்னிதியின் கிழக்கில் சுந்தர மகாகாளியின் பெட்டி உள்ளது. இந்தப் பெட்டியில் சுந்தர மகாகாளியின் இடுப்புக்கு மேற்பட்ட திருமேனி வைக்கப்பட்டுள்ளது. [1]. பெட்டி எப்பொழுதும் மூடிய நிலையில் தாழ்ப்பாளிட்டு காணப்படுகிறது. அப்பெட்டியையே மூலவராக பாவித்து மாலையிட்டு, அர்ச்சனை செய்து ஆராதனை செய்கின்றனர். சித்திரை மாதம் பெட்டிக்காளி திருவீதி உலா வரும் உற்சவம் சிறப்பாக நடைபெறுகிறது. [2]

தல வரலாறு[தொகு]

இக்காளியைப் பற்றி ஒரு கதை கூறப்படுகிறது. ஒரு சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு காவிரியில் வெள்ளம் வந்தபோது ஒரு பெட்டி கரையில் ஒதுங்கியது. அதில் மரத்தால் செய்யப்பட்ட ஒரு காளியின் பாதி சிலைப்பகுதி இருந்தது. அச்சிலையை என்ன செய்வது என ஊர் மக்கள் சிந்தித்தபோது ஒரு சிறுமி மேல் அருள் வந்து தான் திருப்பாடலவனம் வந்ததைப் பற்றியும், தன்னை எப்படிப் பூஜை செய்ய வேண்டும் என்பது பற்றியும் கூறியது. பின்னர் மக்கள் காளியை ஒரு பெட்டியில் வைத்துப் பூட்டி, ஒரு ஓலைக் குடிசையில் வைத்து பூஜை செய்தனர். அந்தக் குடிசை ஒரு நாள் திடீரென தீப்பிடித்த போது மக்கள் அந்தப் பெட்டியைக் காப்பாற்றி, பின்னர் சிவன் கோயில் வளாகத்தில் வைத்து வழிபாடு நடத்தத் தொடங்கினர். [1]

காளியின் உருவ அமைப்பு[தொகு]

இடுப்புக்கு மேல் உருவத்துடன் எட்டு கரங்கள் கொண்ட இக்காளியின் வலது நான்கு கரங்களில் சூலம், அரிவாள், உடுக்கை மற்றும் கிளியும், இடது நான்கு கரங்களில் பாசம், கேடயம், மணி மற்றும் கபாலமும் ஏந்தியும் காணப்படுகின்றன.கண்களில் சற்றே கோபத்துடனும், இரண்டு சிறிய கோரைப் பற்களுடன் காணப்படுகிறது. [1] காளியின் கோபம் தணிவதற்காக நெற்றியில் புனுகு, சவ்வாது, விபூதி, சந்தனம் ஆகியவற்றைப் பூசுகின்றனர். காளிக்குச் சாத்தப்படும் பூ, குங்குமம் போன்றவை பக்தர்களுக்கு வழங்கப்படுவதில்லை. வெள்ளிக்கிழமை இராகு காலத்தில் காளியின் பெட்டிக்குப் படையலிட்டுப் பூஜைகள் செய்யப்படுகின்றன. [3].

பல்லக்கு வீதியுலா[தொகு]

பல்லக்குத் திருவிழா நடப்பதற்கு முன்பாக பள்ளய நைவேத்யம் எனப்படுகின்ற ஒன்பது இலைகளில் அன்னம் முதலியன வைத்துப் படைத்தல் நடைபெறும். பின்னர் பெட்டியைத் திறப்பர். திருவிழாக் காலங்களில் மட்டுமே பெட்டியை திறக்கின்றனர். காளி, பெட்டியில் இருந்தபடியே பல்லக்கில் உலா வருவாள். இதனைக் காண அருகிலுள்ள ஊர்களிலிருந்து அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருவர்.[3] காளியின் உத்தரவு பெற்றபின்னர்தான் காளியம்மனின் பல்லக்கு வீதியுலா நடத்தப்படும் என்பது தொன் நம்பிக்கை. அதன்படி, காளியம்மனின் உத்தரவு கிடைக்கப்பெற்று, 29.5.2015 வெள்ளிக்கிழமை, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பல்லக்கு வீதியுலா நடத்தப்பட்டது. 2.30 மணியளவில் வீதியுலா தொடங்கியது. உலாவின்போது காளி முன்னோக்கியும், பின்னோக்கியும் ஓடும். அதற்கேற்றவாறு பல்லக்கைத் தூக்கிச் செல்லும் இளைஞர்களும் காளியின் விருப்பப்படி ஓடி காளியை மனம் குளிர வைத்தனர். [4]

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 பக்தர்களைக் காக்கும் பெட்டி காளி, தினத்தந்தி, 8.7.2014
  2. திருக்கோயில்கள் வழிகாட்டி, தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, 2014, ப.254
  3. 3.0 3.1 ஆற்றில் மிதந்து வந்த அபூர்வ காளி. தி இந்து, 28.5.2015
  4. பெட்டி காளியம்மன் பல்லக்கு வீதியுலா, தினமணி, திருச்சி, 30.5.2015