உள்ளடக்கத்துக்குச் செல்

குறு ஆர்.என்.ஏ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குறு ஆர்.என்.ஏ

குறு ஆர்.என்.ஏ (Micro RNA) என்பது புரதமாக மொழிபெயர்க்கப்பட (en:Translation (Biology)) முடியாத, ஆனால் தொழிற்படும் தன்மை கொண்ட ஒரு சிறிய (கிட்டத்தட்ட 21-22 நியூக்கிளியோட்டைடுகள் கொண்ட) ஆர்.என்.ஏ இழையாகும். இவைகள் மரபணு வெளிப்படுதலின் (gene expression) அளவுகளை கட்டுபடுத்துவதற்கு முக்கிய பங்காற்றுகிறது . இவை வளர்சிதை மாற்றங்கள் (developmental regulation), புற்றுநோய், இதய, மூளை தொடர்பான வளர்ச்சிகளில் ஈடுபடுவது கண்டுபிடிக்கபட்டுள்ளதால், இதை பற்றிய மிகையான ஆய்வுகள் தற்பொழுது நடைபெறுகின்றன.[1][2][3]

உற்பத்தி மற்றும் முதிர்வாக்கம் (Formation and Processing)

[தொகு]
குறு ஆர்.என்.ஏ உற்பத்தி மற்றும் அதனின் செயலாக்கத்தை விளக்கும் படம்

. முதலில் குறு ஆர்.என்.ஏ க்கள் முந்திய ஆர்.என்.ஏ. வில் (precursor RNA) மரபணுக் குறியீட்டுப் பகுதிகள் சாரா பகுதிகளில், அதாவது உள்ளன்களிலிருந்து (introns) இருந்து பிரிக்கப்பட்டு உயிரணுவின் கரு வுக்கு வெளியில் மாற்றப்படும். பின் இவைகள் டைசர் (daicer) என்னும் நொதியால் 21-22 நியூக்கிளியோட்டௌடுக்களாகப் பிரிக்கப்பட்டு சில புரதங்களோடு இணையும். இக்கலவைக்கு ஆர்.என்.ஏ வால் தூண்டப்பட்ட ஒடுக்கும் கலவை (RNA induced silencing complex) எனப்பெயர். பின் இவைகள் செய்திகாவும் ஆர்.என்.ஏ. (mRNA) யில் பிணைக்கப்பட்டு புரத உற்பத்தியை அல்லது செய்திகாவும் ஆர்.என்.ஏ க்களை முழுவதும் அழிப்பதனால், புரதவுருவாக்கத்தைக் கட்டுப்படுத்தும்.

இவைகள் பொதுவாக டி.என்.ஏ யின் உள்ளன்கள் அல்லது மரபணுக் குறியீடற்ற பகுதிகளில் (non-coding region or introns) இருந்து ஆர்.என்.ஏ யாக உருவாக்கம் செய்யப்படுகிறது. மரபு ஈரிழையில் (டி.என்.ஏ) இருந்து ரைபோ கரு அமிலம் உருவாகும் ஆர்.என்.ஏ. படியெடுப்பின்போது, உருவாகும் செய்திகாவும் ஆர்.என்.ஏ யில் புரத உருவாக்கத்திற்கான தகவல்களற்ற உள்ளன்கள் நிறைந்து காணப்படும். அவ்வாறான ஆர்.என்.ஏ க்கள், "முந்திய ஆர்.என்.ஏ" (precursor RNA) அல்லது முதிர்வற்ற ரைபோ கரு அமிலம் (non-matured RNA) என அழைக்கப்படும். இந்த முதிர்வற்ற ரைபோ கரு அமிலத்தில் நெகிழ்வு தன்மை மிகுந்து இருப்பதால், சிலசமயம் ஊசி-வளைவுகள் (stem-loop) உருவாவதோடு , தனக்குள்ளே இணைவுகளை ஏற்படுத்தி ஈரிழையான அமைப்புகளை உருவாக்குகின்றன. இவ் ஈரிழை அமைப்புகளை இட்ரோச (Drosha) என்ற நொதி வெட்டி 70 நியூக்கிளியோட்டைடுக்கள் அளவுள்ள முந்திய குறு ஆர்.என்.எ யை (pre-miRNA or pre microRNA) உருவாக்குகிறது. இவைகள் உட்கருவில் இருந்து குழியவுருவுக்குக் கடத்தப்பட்டு, பின்னர் 21-22 நியூக்கிளியோட்டைடுக்கள் அளவுள்ள குறு ஆர்.என்.எ வாக முதிர்வாக்கம் செய்யப்படுகிறது. இதற்கு டைசர், எக்ஸ்போர்டின் (Dicer, Exportin) போன்ற நொதியும், காரணியும் செயலாற்றுகிறது. குறு ஆர்.என்.ஏ பல புரதங்களோடு சேர்க்கப்பட்டு (Argonate and Fragmentation retardation protein) ரைபோ கரு அமிலத்தால் தூண்டிய ஒடுக்கும் கலவையாக (RISC, RNA-induced silencing complex) மாற்றப்பட்டு, மரபணு அளவைக் (gene expression) கட்டுப்படுத்தும் தொழிலைப் புரிகின்றன.

செயலாக்கம் (Mechanisms)

[தொகு]

குறு ஆர்.என்.எ தாவரங்களிலும், விலங்குகளிலும் இரு வேறுபட்ட வகையான செயலாக்கத்தின் படி மரபணு வெளிப்படுத்தல் அளவைக் குறைக்கின்றன. சில வேளைகளில் விலங்குகளில், இரு வகையான முறைகளாலும் மரபணு வெளிப்படுத்தல் அளவை குறைப்பதற்குச் சில ஆதாரங்கள் உள்ளன. என்றாலும், அவைகள் ஒரு சிலவே உள்ளது.

தாவரங்களில் குறு ஆர்.என்.ஏ, தனக்கு உரிய இலக்கு செய்திகாவும் ஆர்.என்.ஏ க்களில் (target mRNA) மிக நேர்த்தியான (perfect complementarity) பிணைப்புகளைக் கொண்டுள்ளதால், முழுமையான மரபணு வெளிப்படுத்தலை கட்டுக்குள் கொண்டுவருகின்றன. சுருக்கமாக சொல்வதென்றால் ஒரு முழுமையான அழிவு ஆர்.என்.ஏ அளவில் முடிக்கப்படும் (post-transcription level).

விலங்குகளில் குறு ஆர்.என்.ஏ, தனக்கு உரிய இலக்கு செய்திகாவும் ஆர்.என்.ஏ க்களில் (target mRNA at 3' UTR) மிகக் குறைவான (imperfect complementarity) பிணைப்புகளைக் கொண்டுள்ளதால், இவைகள் குறிப்பிட்ட மொழிபெயர்ப்புச் (en:Translation (Biology)) செயற்பாட்டைக் கட்டுப்படுத்துவதன் மூலம் புரத உற்பத்தியைத் தடுக்குகின்றன (blocking the protein translation). இவ்வழியாக குறு ஆர்.என்.ஏ அளவுகளில் (ஏற்றமோ அல்லது இறக்கமோ) சிறிய அளவுகளில் மாற்றம் ஏற்பட்டாலும், ஒரு மரபணு வெளிப்படுத்தல் அளவுகளில் ஏற்படும் மாற்றங்களினால் இடர்வுகள் ஏற்படுகின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Metazoan MicroRNAs". Cell 173 (1): 20–51. March 2018. doi:10.1016/j.cell.2018.03.006. பப்மெட்:29570994. 
  2. "MicroRNAs: genomics, biogenesis, mechanism, and function". Cell 116 (2): 281–297. January 2004. doi:10.1016/S0092-8674(04)00045-5. பப்மெட்:14744438. 
  3. "VIRmiRNA: a comprehensive resource for experimentally validated viral miRNAs and their targets". Database 2014: bau103. 1 January 2014. doi:10.1093/database/bau103. பப்மெட்:25380780. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=குறு_ஆர்.என்.ஏ&oldid=4098684" இலிருந்து மீள்விக்கப்பட்டது