குரு மக்கலம் அரசியல் அமைப்பு
குரு மக்கலம் அரசியல் அமைப்பு (Crewe-McCallum Reforms) என்பது இலங்கையில் 1910 முதல் 1921 வரை அமுலிலிருந்த அரசியலமைப்பு. பிரித்தானியரால் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட இரண்டாவது அரசியலமைப்பும் இதுவே. இலங்கையில் 1833ம் ஆண்டு முதல் 1910ம் ஆண்டுவரை கோல்புறூக் அரசியல் அமைப்பின் கீழ் உள்நாட்டு மக்களின் நலவுரிமைகள் எவ்விதத்திலும் பேணப்படவில்லை. குறிப்பாக இந்த அரசியலமைப்பானது பிரித்தானிய ஏகாதிபத்திய நலவுரிமைகளை மாத்திரம் பேணக்கூடிய வகையிலும் இலங்கையின் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு இலாபத்தினை அடைவதைக் குறிக்கோளாகக் கொண்ட வகையிலுமே இந்த அரசியலமைப்பு இலங்கையில் செயல்பட்டது.
பின்னணி
[தொகு]19ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலும், 20ம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியிலும் இலங்கையில் மத்தியதர வகுப்பாரின் தோற்றம் இடம்பெற்றது. விசேடமாக பண வசதிபெற்ற இலங்கையர்கள் தமது பிள்ளைகளை மேற்குலக நாடுகளுக்கு அனுப்பி கல்வி கற்பிப்பதில் ஆர்வம் செலுத்தினர். இக்காலகட்டங்களில் உலகளாவிய ரீதியில் மாக்சீச சிந்தனைகளும், தாராண்மைவாதப் போக்கும் வளர்ச்சி கண்டிருந்தன. இச்சிந்தனையால் தூண்டப்பட்ட கற்ற இலங்கையர் கோல்புறூக் அரசியலமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டுமென்றும் சுதேசிய கற்ற பிரதிநிதிகள் சட்டநிரூபண சபையில் இடம்பெறக்கூடிய வகையில் அத்தகைய மாற்றங்கள் அமைய வேண்டும் எனவும் போராட்டங்களை நடத்திவந்தனர். இந்த அடிப்படையில் இலங்கைக்கு வழங்கப்பட்டதே குரு மக்கலம் அரசியல் திட்டமாகும்
சட்டநிரூபண சபை
[தொகு]குரு மக்கலம் அரசியமைப்பின் கீழ் சட்டநிரூபண சபை (சட்டசபை) யின் மொத்த அங்கததவர்களின் 21 ஆகும்.
உத்தியோக சார்புடையோர் 11
[தொகு]- இராணுவத்தளபதி
- குடியேற்றநாட்டுக்கரியதரிசி
- அரசாங்க சட்ட அதிபதி
- வருமானவரி அதிகாரி
- குடியேற்றநாட்டுத் தனாதிகாரி
- மேல் மாகாண அதிபர்
- மத்திய மாகாண அதிபர்
- தென்மாகாண அதிபர்
- பிரதம சிவில் வைத்தியர்
- தேசாதிபதியால் நியமிக்கப்படும் உத்தியோக சார்பு அதிகாரிகள் 02
உத்தியோக சார்பற்றோர் 10
[தொகு]தேசாதிபதியால் நியமனம் 06
- கண்டிச் சிங்களவர் - 1
- கரையோர சிங்களவர் - 2
- முஸ்லிம் - 1
- இலங்கைத் தமிழர் - 1
- தமிழர் - 1
மட்டுப்படுத்தப்பட்ட வாக்கெடுப்பின் மூலம் தெரிவு 04
- நகர்ப்புற ஐரோப்பியர் - 1
- கிராமப்புற ஐரோப்பியர் - 1
- பறங்கியர் - 1
- படித்த இலங்கையர் - 1
மட்டுப்படுத்தப்பட்ட வாக்குரிமை
[தொகு]குரு மக்கலம் அரசியல் அமைப்பின் பிரகாரம் இலங்கையில் வாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்வாக்குரிமை மட்டுப்படுத்தப்பட்ட வாக்குரிமை அல்லது கற்றோருக்கான வாக்குரிமை என அழைக்கப்படுகின்றது. (இது கல்வி அறிவு, சொத்து உள்ள 21 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு மாத்திரம் வழங்கப்பட்டது)
தேசாதிபதியின் சார்பு
[தொகு]வாக்குரிமை மூலம் பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்துள்ள முடியுமாக இருந்தாலும்கூட, வாக்குரிமை பெற்றோர் மேற்குலக அரசியல் சிந்தனைகளில் கவரப்பட்டவர்களாக இருந்தமையால் அவர்கள் சுயாட்சி முறைக்கான போராட்டங்களில் ஈடுபடவில்லை. அதேநேரம், சட்டநிரூபண சபை(சட்டசபை)யில் பிரித்தானிய தேசாதிபதியின் தனித்துவத்தைப் பேணிக்கொள்ளக்கூடிய வகையில் அதன் கட்டமைப்பு ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. குறிப்பாக உத்தியோக சார்புள்ள 11 பேரும் தேசாதிபதியால் நியமிக்கப்பட்ட 6 பேரும் எச்சந்தர்ப்பத்திலும் தேசாதிபதிக்கு சார்பானவர்களாக இருப்பார்கள் என கருதப்பட்டது.
முதல் சிறுபான்மைப் பிரதிநிதி
[தொகு]குரு மக்கலம் அரசியல் அமைப்பின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட 4 பிரதிநிதிகளுள் இன ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட படித்த இலங்கையர் சேர் பொன்னம்பலம் இராமநாதன் (ஏப்ரல் 16, 1851 - நவம்பர் 26, 1930) அவர்களாவார்.
உசாத்துணை
[தொகு]- மெண்டிஸ், ஜீ. ஸி - நம்முன்னோரளித்த அருஞ்செல்வம், முதலாம் பாகம், கொழும்பு அப்போதிக்கரீஸ் கம்பனி, 1969
- புன்னியாமீன் பீ. எம்., - வரலாறு ஆண்டு 11 கண்டி சிந்தனை வட்டம், 1998