குரியாக்கோஸ் எலியாஸ் சாவறா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
புனித குரியாக்கோஸ் எலியாஸ் சாவறா
St. Kuriakose Elias Chavara
ܡܪܝ ܩܘܪܝܩܘܣ ܐܠܝܐ
വിശുദ്ധ കുര്യാക്കോസ് ഏലിയാസ് ചാവറ
மன்னானம் மார் குரியாக்கோஸ் எலியாஸ் சாவறா
சீரிய கத்தோலிக்கரின் தலைமை ஆட்சியர்
பிறப்புபெப்ரவரி 10, 1805(1805-02-10)
கைநக்கரி, குட்டநாடு, திருவிதாங்கூர் இராச்சியம்
இறப்புசனவரி 3, 1871(1871-01-03) (அகவை 65)
கூனம்மாவு, கொச்சி இராச்சியம்
ஏற்கும் சபை/சமயம்கத்தோலிக்கம்
அருளாளர் பட்டம்திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல்-ஆல் 8 பெப்ருவரி 1986, கோட்டயம்
புனிதர் பட்டம்திருத்தந்தை பிரான்சிசு-ஆல் 23 நவம்பர் 2014, உரோமை
முக்கிய திருத்தலங்கள்கோட்டயத்தைச் சேர்ந்த மன்னானம் - புனித யோசேப்பு சீரோ மலபார் தயிரா கோவில்
திருவிழா3 சனவரி (சீரோ மலபார்)
சித்தரிக்கப்படும் வகைசீரோ மலபார் சபை - புனிதர், சமூக சீர்திருத்தர்


புனித யோசேப்பு சீரோ மலபார் தயிரா கோவில், மன்னானம். இங்கு புனித குரியாக்கோஸ் எலியாஸ் சாவறாவின் மீபொருள்கள் காக்கப்படுகின்றன
குழந்தை இயேசு, அவருடைய தாய் மரியா, திருமுழுக்கு யோவான். ஓவியர்: ராஜா ரவி வர்மா. மூலம்: சிரிய எழுத்துச் சுவடி (பெஷிட்டா). காப்பிடம்: மன்னானம் தயிரா

குரியாக்கோஸ் எலியாஸ் சாவறா (Mar Kuriakose Elias Chavara, மலையாளம்: മാർ കുര്യാക്കോസ് ഏലിയാസ് ചാവറ, 10 பெப்ரவரி 1805 - 3 சனவரி 1871) என்பவர் கத்தோலிக்க திருச்சபையில் சீரோ மலபார் வழிபாட்டு முறையைச் சார்ந்தவரும் இந்தியாவின் கேரளா மாநிலத்தில் பிறந்தவரும் ஆவார்.[1] இவருக்குத் திருத்தந்தை பிரான்சிசு நவம்பர் 23, 2014, கிறிஸ்து அரசர் பெருவிழாவின்போது புனிதர் பட்டம் வழங்கினார்.

இவர் இந்தியாவிலேயே முதன்முறையாகத் தொடங்கப்பட்ட கத்தோலிக்க ஆண்துறவியர் சபையின் நிறுவனர்களுள் ஒருவர் ஆவர். அவர் தொடங்கிய சபை “மாசற்ற மரியா கார்மேல் சபை” என்று அழைக்கப்படுகிறது. இது சீரோ மலபார் வழிபாட்டுப் பிரிவின் ஓர் அமைப்பு ஆகும். அச்சபையின் முதல் தலைவராகவும் அவர் பணியாற்றினார். பின்னர் அவர் பெண்துறவியருக்கென்று ஒரு சபையைத் தொடங்கினார். அது “கார்மேல் அன்னை சபை” என்று அழைக்கப்படுகிறது.

வாழ்க்கை வரலாறு[தொகு]

குரியாக்கோஸ் எலியாஸ் சாவறா இந்தியாவின் கேரள மாநிலத்தில் கைநாக்கரி என்னும் கிராமத்தில் நசரானி கிறித்தவர்கள் என்று அழைக்கப்படுகின்ற “புனித தோமா கிறித்தவ” குடும்பம் ஒன்றில் பிறந்தார். அவருடைய தந்தை பெயர் குரியாக்கோஸ் சாவறா, தாயார் பெயர் மரியம் தோப்பில். குரியாக்கோஸ் எலியாஸ் சாவறா பிறந்த நாள் 1805, பெப்ருவரி 10 ஆகும். சென்னம்காரி ஊரில் அமைந்துள்ள புனித யோசேப்பு சீரோ மலபார் கோவிலில் 1805, பெப்ருவரி 17ஆம் நாளில் அவருக்குத் திருமுழுக்கு வழங்கப்பட்டது. குரியாக்கோஸ் என்னும் பெயர் சிரிய-அரமேய மொழியிலிருந்து வருகிறது.[2]

சொந்த ஊரில் தொடக்கக் கல்வி பயின்றார். 1818இல் பள்ளிப்புறத்தில் அமைந்திருந்த குருமடம் புகுந்தார். 1829, நவம்பர் 29இல் குருப்பட்டம் பெற்றார்.

குருவான பிறகு குரியாக்கோஸ் வேறு இரண்டு குருக்களோடு சேர்ந்து துறவற வாழ்க்கை வாழ்ந்தார். அவர்கள் பாலய்க்கல் தோமா மல்பான், போருக்கர தோமா கத்தனார் என்போர். அவர்கள் தொடங்கிய துறவு சமூகத்தின் பெயர் “மாசற்ற மரியாவின் ஊழியர்” என்பதாம். மன்னானம் நகரில் முதல் இல்லத்தின் அடிக்கல்லை தோமா கத்தனார் இட்டார். அவர் 1846இலும் அதற்கு முன் தோமா மல்பான் 1841இலும் இறந்தார்கள். 1855, திசம்பர் 8ஆம் நாள் குரியாக்கோஸ் கத்தனாரும் அவரோடு வேறு பத்து குருக்களும் கார்மேல் சபை மரபுக்கு இணங்க வார்த்தைப்பாடு கொடுத்தார்கள். குரியாக்கோஸ் மன்னானம் மடத்திற்குத் தலைவராக நியமனமானார். "காலணியற்ற கார்மேல் சபை” (Order of Discalced Carmelites) என்னும் சபையின் பொதுநிலைப் பிரிவாக அச்சபை ஏற்கப்பட்டது.[3]

சமூக சீர்திருத்தர்[தொகு]

குரியாக்கோஸ் கத்தனார் சமயத் துறையில் மட்டுமன்றி சமூகத் துறையிலும் சிறந்து விளங்கிய ஒரு சீர்திருத்தர் ஆவார்.[4][5] உயர்ந்த சாதி என்று கருதப்பட்ட பிரிவில் அவர் பிறந்திருந்தாலும் அவர் தாழ்ந்த சாதியினர் என்று கருதப்பட்ட மக்களுக்கு கல்வியறிவு வழங்கப்பட வேண்டும் என்று அவர் பாடுபட்டார்.[6] 1846இல் அவர் மன்னானத்தில் ஒரு கல்விக்கூடம் தொடங்கினார். சிரிய கத்தோலிக்கரின் தலைவராக் இருந்தபோது, 1864இல், ஒவ்வொரு கோவிலிலும் (பள்ளி) ஒரு கல்விக் கூடம் தொடங்கி அனைவருக்கும் இலவசக்கல்வி கிடைக்க ஏற்பாடு செய்தார். “பள்ளி”யோடு இணைந்த கல்விக்”கூடம்” “பள்ளிக்கூடம்” என்று பெயர்பெற்றது.[2][5][7][8]

குரியாக்கோஸ் கத்தனார் முயற்சியால் பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு நண்பகல் உணவு வழங்கப்பட்டது. இந்த வழக்கத்தைத் திருவிதாங்கூர் அரசும் பின்னர் கேரள அரசும் கடைப்பிடித்தன.[4]

இந்திய கத்தோலிக்க திருச்சபையில் முதன்முறையாக அச்சுக்கூடத்தை ஏற்படுத்தியவர் குரியாக்கோஸ். அது மன்னானத்தில் நிறுவப்பட்டது.[5] அந்த அச்சுக்கூடத்திலிருந்து வெளிவந்த முதல் மலையாளப் பத்திரிகை “தீபிகா”.[4][5][9]

திருச்சபை அளவில் பணி[தொகு]

கேரள கத்தோலிக்க திருச்சபையில் பொதுநிலையினருக்கு தியானங்கள் வழங்குவதற்கு குரியாக்கோஸ் ஏற்பாடு செய்தார். கத்தோலிக்க பக்திமுயற்சிகளை வளர்த்தார். செபமாலை, சிலுவைப்பாதை, நற்கருணை ஆராதனை போன்ற பக்திமுயற்சிகள் பரவ வழிவகுத்தார்.

ஆண்களுக்கென்று ஒரு துறவியர் சபை, பெண்களுக்கென்று ஒரு துறவியர் சபை என்பவற்றைக் குரியாக்கோஸ் நிறுவினார். பெண்களும் ஆண்களுக்கு நிகரான விதத்தில் கல்வியறிவு பெற வேண்டும் என்ற கருத்துடைய குரியாக்கோஸ் பெண்களுக்கான துறவற சபையை 1866இல் நிறுவினார்.[10][11]

இறப்பு[தொகு]

குரியாக்கோஸ் கத்தனார் கூனம்மாவு என்ற ஊரில் 1871, சனவரி 3ஆம் நாள் உயிர்துறந்தார். அவருடைய உடலின் மீபொருள்கள் மன்னானம் ஊரில் உள்ள புனித யோசேப்பு கோவில் மடத்தில் 1889, மே 24ஆம் நாளிலிருந்து காக்கப்படுகிறது.[4][5][7] அவருடைய நினைவு விழா அவர் இறந்த நாளாகிய சனவரி 3ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.[12]

புனிதர் பட்டம்[தொகு]

குரியாக்கோஸ் கத்தனாரை நோக்கி வேண்டியதன் பயனாக பல புதுமைகள் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்தியாவின் முதல் புனிதராகக் கருதப்படுகின்ற புனித அல்போன்சா என்பவர் 1936இல் வழங்கிய கூற்றுப்படி, குரியாக்கோஸ் இரண்டுமுறை அல்போன்சாவுக்குக் காட்சியளித்து அவருடைய நோய் தணித்தார். குரியாக்கோசுக்குப் புனிதர் பட்டம் வழங்குவதற்கான மறைமாவட்டத் தயாரிப்பு 1955இல் சங்கனாச்சேரியில் தொடங்கியது. 1984, ஏப்பிரல் 7ஆம் நாள் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் குரியாக்கோசின் சிறப்புப் பண்புகளை ஏற்று அவருக்கு “வணக்கத்துக்குரியவர்” என்னும் பட்டம் கொடுத்தார்.[13]

1986இல் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் இந்தியாவுக்கு வருகை தந்த வேளையில், கோட்டயம் நகரில் பெப்ருவரி 8ஆம் நாள் குரியாக்கோசுக்கு “அருளாளர்” (”முத்திப்பேறு பெற்றவர்”) பட்டம் வழங்கினார்.[13]

2014, ஏப்பிரல் 3ஆம் நாள், குரியாக்கோஸ் வழியாக நிகழ்ந்த புதுமைகள் திருச்சபைத் தலைமைப் பீடத்தால் ஏற்கப்பட்டன.[14]

திருத்தந்தை பிரான்சிசு குரியாக்கோஸ் எலியாஸ் சாவறாவுக்குப் புனிதர் பட்டத்தை 2014, நவம்பர் 23ஆம் நாள் கிறித்து அரசர் பெருவிழாவின் தருணத்தில் வத்திக்கான் நகரத்தில் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் நிகழ்ந்த திருப்பலியின்போது வழங்கினார். அப்போது, குரியாக்கோஸ் ஏற்படுத்திய பெண்துறவியர் சபைக்குத் தலைவியாகப் பணியாற்றியிருந்த யூப்ரேசியா எலுவத்திங்கல் என்பவருக்கும் புனிதர் பட்டம் வழங்கப்பட்டது.[15]

அடிக்குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]