உள்ளடக்கத்துக்குச் செல்

கிரிம் சகோதரர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வில்லெம் (இடது) மற்றும் ஜேக்கப் கிரிம். - 1855 இல் எலிசபெத் யெரிக்காவு-பாமனால் வரையப்பட்ட ஓவியம்

ஜேக்கப் கிரிம் (ஜனவரி 4, 1785செப்டம்பர் 20, 1863) மற்றும் வில்லெம் கிரிம்(பெப்ரவரி 24, 1786டிசம்பர் 16, 1859) என்னும் இரு ஜெர்மானிய பண்பாட்டு ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மொழியியலாளர்கள் கிரிம் சகோதரர்கள் (Brothers Grimm, இடாய்ச்சு: Die Brüder Grimm / Die Gebrüder Grimm) என்று அழைக்கப்படுகின்றனர். பழைய நாட்டுப்புற கதைகளையும், தேவதைக் கதைகளையும் சேகரித்து “கிரிம்மின் தேவதைக் கதைகள்” என்ற பெயரில் வெளியிட்டனர். அவை பெரும் புகழ்பெற்றன. தேவதைக் கதைகளுக்காகவே இவர்கள் இன்று பெரிதும் அறியப்படுகின்றனர்.

இக்கதைகளின் முதல் தொகுப்பு 1812 ல் குழந்தைகள் மற்றும் வீட்டுக் கதைகள் என்ற பெயரில் வெளியானது. 200 கதைகள் கொண்டிருந்த இத்தொகுப்பிலிருந்த கதைகளில் வன்முறையும் சோகமும் மண்டியிருந்தன. பின்னாளில் இவை குழந்தைகளுக்கான மகிழ்ச்சிகரமான கதைகளாக மாற்றப்பட்டுவிட்டன. சிண்ட்ரெல்லா, தூங்கும் அழகி, ரபுனசெல், சுனோ வைட், தவளை இளவரசன், ஹான்சல் அண்ட் கிரேட்டல் ஆகியவை இன்றளவும் உலங்கெங்கும் புகழ் பெற்று விளங்குகின்றன.

ஜேக்கப் கிரிம் கதைகளைத் தவிர வேறு துறைகளிலும் சாதனைகளைப் புரிந்துள்ளார். மொழியறிவியல் துறையில் புலமை பெற்ற இவர் காலப்போக்கில் சொற்களில் ஓசைகள் எவ்வாறு மாறுகின்றன என்பது குறித்து ஆய்வு செய்துள்ளார். இவரது கண்டுபிடிப்புகள் கிரிம்மின் விதி என்று அழைக்கப்படுகின்றன. தொழில்முறையில் ஒரு வழக்கறிஞரான அவர், ஜெர்மானிய சட்டச் சொற்களின் மூலத்தை ஆராய்ந்து 1828ல் ஒரு ஆய்வு நூலை வெளியிட்டார். தன் சகோதரருடன் சேர்ந்து ஒரு பெரும் இடாய்ச்சு அகரமுதலியை உருவாக்க முயன்றார். A முதல் D வரையான எழுத்துகளின் சொற்கள் முடிவடைந்த நிலையில், ஜேக்கப்பின் மரணத்தால் இப்பணி தடைபட்டது. கிரிம் சகோதரர்கள் இடாய்ச்சு மொழியறிவியலின் முன்னோடிகளாகக் கருதப்படுகின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரிம்_சகோதரர்கள்&oldid=3828628" இலிருந்து மீள்விக்கப்பட்டது