காய்மறை விளையாட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காயை மறைத்தல்
காயைக் கவித்தல்

காய்மறை விளையாட்டு சங்ககால மகளிர் விளையாட்டுகளில் ஒன்று.

அண்மைக்கால விளையாட்டுகளில் கிச்சுக்கிச்சுத் தம்பலம் விளையாட்டைப் போன்றது இது.

ஆயத்தாரோடு விளையாடிய பெண் ஒருத்தி புன்னைமரக் காயை மணலில் மறைத்து விளையாடியிருக்கிறாள். விளையாடியப்பின்னர் அந்தக் காயை மண்ணுக்குள்ளேயே விட்டுவிட்டு விளையாட்டு ஆயம் சென்றுவிட்டது. மழை பொழிந்ததும் அது முளைத்து வளர்ந்ததாம். அதனைப் பார்த்த வளர்ப்பு அன்னை காயை எடுக்க மறந்து விட்டுவிட்ட தன் மகளுக்கு அந்த புன்னைமுளைக் கன்று 'தங்கை' உறவு என்று கூறிவைத்தாள். தலைவி அதனை நம்பி அன்றுமுதல் அந்தப் புன்னைமுளைக் கன்றை தான் உண்ணும் பாலை ஊற்றி வளர்த்துவந்தாளாம். அவள் பருவம் எய்திய காலத்தில் அவளது காதலன் அவளைத் தழுவ வந்தபோது அந்த புன்னைமரத்தைக் காட்டி "தங்கை பார்க்கிறாள். தழுவாதே" என்றாளாம்.

இந்தச் செய்தியைக் கூறும் பாடலிலிருந்து அவர்கள் அக்காலத்தில் விளையாடிய விளையாட்டை உணர்ந்துகொள்ள முடிகிறது.[1]

அடிக்குறிப்பு[தொகு]

 1. விளையாடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி
  மறந்தனம் துறந்த கால்முளை அகைய
  நெய்பெய் தீம்பால் பெய்து இனிது வளர்த்தது
  நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும் என்று
  அன்னை கூறினள் புன்னையது நலனே
  அம்ம நாணுதும் நும்மொடு நகையே - நற்றிணை 172

"https://ta.wikipedia.org/w/index.php?title=காய்மறை_விளையாட்டு&oldid=3208448" இலிருந்து மீள்விக்கப்பட்டது