கிச்சுக் கிச்சுத் தம்பலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
காயை மறைத்தல்
காயைக் கவித்தல்

கிச்சுக் கிச்சுத் தம்பலம் என்பது சிறுவர், சிறுமியர் விளையாடும் விளையாட்டுகளில் ஒன்று. சில வேளையில் பெரியவர்களும் சிறுவர்களோடு சேர்ந்துகொள்வர். இதனை ஈழத்தமிழர் குச்சாட்டம் எனவும் வழங்குவர். [1]

சிறு மணல் கரையில் துரும்பை மறைத்துக் கண்டுபிடிக்கச் செய்யும் விளையாட்டு. இருவர் ஆட்டம். ஒருவர் துரும்பை மறைப்பவர். மற்றொருவர் கண்டுபிடிப்பவர். இருகைப் பெருவிரலும் இணைந்து விரல்கள் நீட்டப்பட்ட நிலையில் கைக்குள் அடங்கும் மணல் அல்லது புழுதிமண் கரை அமைக்கப்படும். அதன் நீளம் விளையாடுபவர் கையில் ஒருமுழம் இருக்கும்.

கிச்சுக் கிச்சுத் தம்பலம்
கிய்யாக் கிய்யாத் தம்பலம்
மச்சு மச்சு தம்பலம்
மாயா மாயா தம்பலம்

இப்படிப் பாடிக்கொண்டு தன் கையிலுள்ள துரும்பை ஒருவர் மறைப்பார்.

கண்டுபிடிப்பவர் தம் இருகை விரல்களையும் கோத்துக்கொண்டு துரும்பு இருக்கும் இடத்திலுள்ள கரையைம் பொத்திக்கொள்வார். மறைத்தவர் கை பொத்தப்படாத கரையைக் கிண்டித் தான் மறைத்த துரும்பை எடுக்கவேண்டும். அப்பகுதியில் துரும்பு இல்லையென்றால், இருக்குமிடத்தைக் கையால் பொத்தி மறைத்தவர் தான் மறைத்த இடத்தில் துரும்பு இருப்பதை எடுத்துக் காட்டவேண்டும். யார் கையில் துரும்பு அகப்படுகிறதோ அவர் துரும்பை மறைக்கும் ஆட்டத்தைத் தொடங்குவார்.

இது ஒரு ஊக விளையாட்டு. இதனை ஊழ்த்திற விளையாட்டு என்றும் கொள்ளலாம்.

சங்ககாலத்தில் இப்படி ஒரு புன்னைக்கொட்டையை மறைத்து விளையாடிய பெண் ஒருத்தி அதனை எடுக்காமலே விட்டுவிட்டுப் போய்விட்டாளாம். அது முளைத்து வளர்ந்தபோது மறைத்து விளையாடிய சிறுமி அதற்குப் பால் ஊற்றி வளர்த்தாளாம் என நற்றிணை பாடல் ஒன்று கூறுகிறது.[2]

அடிக்குறிப்பு[தொகு]

  1. கிச்சுக்கிச்சுத் தம்பலம் என்பது பாட்டின் பெயரால் அமைந்த பெயர். குச்சாட்டம் என்பது சிறு துரும்புக் குச்சியை மறைத்துவைத்து விளையாடுவதால் சூட்டப்பட்டுள்ள பெயர். சங்ககாலத்தில் புன்னை மரத்து விதையை மறைத்து வைத்து விளையாடிய செய்தி ஒன்று உண்டு.
  2. விளையாடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி
    மறந்தனம் துறந்த காழ்முளை அகைய
    நெய்பெய் தீம்பால் பெய்து இனிது வளர்த்தது
    நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும் என்று
    அன்னை கூறினள் புன்னையது நலனே - நற்றிணை 172

மேலும் பார்க்க[தொகு]