கஸ்டவ் கிளிம்ட்
கஸ்டவ் கிளிம்ட் | |
---|---|
கஸ்டவ் கிளிம்ட், 1913 | |
தேசியம் | ஆஸ்திரியர் |
அறியப்படுவது | ஓவியக் கலை |
அரசியல் இயக்கம் | அடையாள முறைமை, நவீன ஓவியம் |
கஸ்டவ் கிளிம்ட் (Gustav Klimt, சூலை 14, 1862 – பெப்ரவரி 6, 1918) தான் வரைந்த ஓவியங்களால் அளவுக்கதிகமான புகழையும், விமர்சனங்களையும் அடுத்தடுத்து பெற்றவர் கிளிம்ட். ஆரம்பகால கட்டத்தில் கிளிம்ட் வரைந்த நேச்சுரல் ஆர்ட் பாணி ஓவியங்களை வரவேற்ற கலை விமர்சகர்கள், புதிய பாணி ஒன்றை அவர் உருவாக்கிய போது அதை ஆபாசம் என்று கடுமையாக எதிர்த்தனர். ஆனால் அத்தகைய ஒவியங்களால்தான் கிளிம்ட் உலகின் உன்னத ஓவியர்களில் ஒருவராக இன்றும் கொண்டாடப்படுகிறார்.
ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவில் 1862ம் ஆண்டு ஜூலை 14ம் தேதி கிளிம்ட் பிறந்தார். அப்பா நகை வியாபாரி என்பதால் குடும்பம் வளமையுடன் இருந்தது. கிளிம்ட்டுடன் பிறந்தவர்கள் 6 பேர். இவர்தான் மூத்தவர். 7 பேரும் ஒவ்வொரு துறையில் சிறந்தவர்களாக விளங்கினர். ஒருவர் அப்பா வழியில் நகை வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்தார். கிளிம்ட்டும், மற்றொரு சகோதரர் எர்ன்ஸ்டும் ஓவியத்துறையில் தடம் பதித்தனர்.
இளமைக் காலத்தில் இருவரும் வியன்னாவில் அப்போது புதிதாகக் கட்டப்பட்டிருந்த ஒவியக் கல்லூரியில் சேர்ந்தனர். அங்கு பேராசிரியர் பெர்டிணன்ட் லாப்பெர்கரிடம் இருந்து ஓவியக்கலையின் அனைத்து நுட்பங்களையும் கற்றுத் தேர்ந்தனர். ஓய்வு நேரங்களில் புகைப்படங்களை ஓவியங்களாக பிரதி எடுக்கும் வேலையில் ஈடுபட்டு கணிசமாக சம்பாதிக்கவும் தொடங்கினர். அப்போது ஓவியப் பள்ளியில் உடன் பயிலும் மாணவர் பிரான்ஸ் மாட்ச்-ன் தோழமையும் கிடைத்தது. இந்த மூவர் கூட்டணி மீது பேராசிரியர் பெர்டிணென்டிற்கு நல்லபிப்ராயம் இருந்தது. பல மாளிகைகளின் அலங்கார வடிவமைப்பு வேலைகளுக்கு மூவரையும் பெர்டிணென்ட் சிபாரிசு செய்தார்
அப்படித்தான் ஆஸ்திரிய மன்னர் பிரான்ஸ் ஜோசப்பின் திருமண வெள்ளி விழா நடைபெறவிருந்த மாளிகைக்கு அலங்காரம் செய்யும் பொறுப்பு கிளிம்ட்டிற்கு வந்தது. அப்போது அவருக்கு வயது 17தான்.
1883ல் மூவரும் ஓவியப் பள்ளியில் இருந்து விலகி, தங்களுக்கென ஓவிய அரங்கினை ஏற்படுத்திக் கொண்டனர். உடனே வியன்னாவில் பிரபல மாளிகைகளுக்கு அலங்காரம் செய்யும் பணிகளை ஏற்று சுறுசுறுப்பாக செயல்படத் தொடங்கினர். அலங்காரம் செய்வது என்றால் வெறுமனே அலங்கார விளக்குகளையும், திரைச் சீலைகளையும் அமைப்பது அல்ல. மாளிகையின் சுவர்கள், மேல்தளக் கூரைகள், திரைச் சீலைகள் என அனைத்து இடங்களிலும் அழகிய ஓவியங்களை வரைவது, ஓவியத்திற்கு ஒத்திசைவான வண்ணங்களில் வண்ணப்பூச்சு செய்யச் சொல்வது, மாளிகையில் பயன்படுத்த மேசை, அலமாரி, பீங்கான் டம்ளர்கள், நாற்காலி ஆகியவற்றை கலைநயத்துடன் வடிவமைத்துத் தருவது உள்ளிட்ட பணிகளும் அதில் அடங்கும்.
இவர்களது வேலைகளுக்கான அங்கீகாரம் உடனடியாக இவர்களைத் தேடி வந்தது. 1886ல் வியன்னாவில் புதிதாகக் கட்டப்பட்ட ‘பர்க்தியேட்டர்’ மாளிகையின் கூரை மற்றும் படிக்கட்டுகளின் பக்கவாட்டுப் பகுதிகளில் ஓவியம் வரையும் மதிப்பு வாய்ந்த பணி கிடைத்தது. அதில் மூவரும் தங்கள் திறமையைக் காட்ட, அதைவிட மதிப்பு வாய்ந்த ஒரு பணி தானாகவே இவர்களை வந்து சேர்ந்தது. அது வியன்னாவின் ‘குன்ஸ்திஸ்டாரிஸ்க்ஸ்’ மியூசியத்தின் படிக்கட்டுகளை அலங்கரிக்கும் பணியாகும். ஆஸ்திரியாவின் உன்னத அருங்காட்சியகம் எனப் போற்றப்பட்ட அந்த அரங்கிற்கு அலங்காரம் செய்ய கிடைத்த வாய்ப்பை மூவரும் கிடைத்தற்கரிய பேறாகவே கருதினர்.
ஆஸ்திரியாவின் மூத்த ஓவியர் ஹான்ஸ் மார்ட்டிடம் தான் முதலில் இந்தப் பணி தரப்பட்டது. ஆனால் அவர் தனது முழுமையாக முடிக்கும் முன்னர் எதிர்பாராத விதமாக மரணமடைந்தார். அவர் விட்ட இடத்திலிருந்து பணியைத் தொடரும் வாய்ப்பு கிளிம்ட் கூட்டணிக்கு கிடைத்தது.
மாகர்ட்டின் ஒவியங்களை முன்மாதிரியாக நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு அவரது ஓவியங்களை முழுமையடையச் செய்யும் வாய்ப்பு. மூவரும் அந்தப் பரவசத்தில் நெகிழ்ந்து போனார்கள். மாளிகையைத் தாங்கி நிற்கும் தூண்களுக்கு இடைப்பட்ட வெற்றிடத்தை தனித் தனி ஓவியங்களால் நிரப்பும் வேலை கிளிம்ட்டிற்குத் தரப்பட்டது. பண்டைய கிரேக்க காலத்திலிருந்து சமகாலம் வரையிலான மனித வரலாற்றை தனித்தனி ஓவியங்களாக வரைவது என கிளிம்ட் தீர்மானித்துக் கொண்டார். அதற்கான தகவல்களை நூலகம் நூலகமாக தேடியலைந்தார். புத்தகங்களிலும், அருங்காட்சியகங்களிலும் முழுமையாக தன்னைப் புதைத்துக் கொண்டார். இதன் விளைவுவாக குன்ஸ்திஸ்டரிஸ்க்ஸ் மாளிகையில் பல்வேறு வகை சிறப்பான ஓவியங்கள் உருவெடுத்தன. ஒவ்வொரு ஓவியமும் ஒவ்வொரு பாணியில் அமைந்து பார்வையாளர்களின் ஏகோபித்த பாரட்டை கிளிம்ட்டிற்குப் பெற்றுத் தந்தன.
கிளிம்ட் தன்னுடைய 35 வயதில் ஹான்ஸ் மாகர்ட்டின் இடத்தை நிரப்ப வல்ல ஓவியர் என்ற பெயரைப் பெற்றார். வியன்னா கலை இலக்கியத்தின் முக்கிய தூணாகக் கருதப்பட்டார். அக்காலகட்டத்தில் வியன்னாவின் முற்போக்குக் கலைஞர்களுடனும், சிந்தனையாளர்களுடனும் கிளிம்ட்டிற்கு தொடர்பு ஏற்பட்டது. மேலும் ஐரோப்பிய ஓவியர்கள் வியன்னாவில் நடத்திய ஓவிய கண்காட்சிகள் இவரது பார்வையை விசாலப்படுத்தின.
இயல்பிலேயே கலைஞனுக்குரிய சுதந்திரத்துடன் உலாவி வந்த கிளிம்ட்டால் இதற்குப் பின் பழமைவாதம் பேசும் கலைஞர்களுடன் ஒத்துப் போக முடியவில்லை. 1897ல் தன்னைப் போல் முற்போக்கு எண்ணம் கொண்ட ஓவியர்களுடன் ‘வியன்னா ஓவியக்கலைஞர்கள் சங்கத்தி’லிருந்து விலகி, முற்போக்கு ஓவியர்கள் சங்கத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தார்.