உள்ளடக்கத்துக்குச் செல்

கலைச்சொல்லியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கலைச்சொல்லியல் (Terminology) என்பது துறைசார்ந்த சொற்களான கலைச்சொற்களின் உருவாக்கம், அவ்வுருவாக்கம் தொடர்பான கோட்பாடுகள், கலைச்சொல் சீர்தரப்படுத்தல், கலைச்சொல் தொடர்பான நோக்குநூல் உருவாக்கம், கலைச்சொல் அகரமுதலி உருவாக்க நெறிமுறைகள், கலைச்சொல் அகரமுதலிகள் பற்றிய ஆய்வு என்னும் பல்வேறு நடவடிக்கைகளையும் அந்நடவடிக்கைகளின்போது உருவாகும் கோட்பாடுகளையும் உள்ளடக்கிய அறிவுப்புலம் ஆகும்.[1] ஆனாலும், பலர் இன்னும் அதைத் தனியான ஒரு அறிவுத்துறையாக ஏற்றுக்கொள்வது இல்லை. அவர்கள் இதை, மொழியியல், ஏரணம், மெய்ப்பொருளாய்வு, தகவலியல், பிற அறிவுத்துறைகளின் சிறப்புத் துணைத்துறைகள் என்பவற்றோடு தொடர்புடைய ஒரு பல்துறை ஆய்வுக்களமாகவே கொள்கின்றனர். மேலும், தனியானதொரு அறிவுத்துறைக்கு அடிப்படையாக இருக்க வேண்டிய தனியான கோட்பாடு, வழிமுறைகள் போன்றவை கலைச்சொல்லியலுக்கு இல்லை என்பதும் அவர்களது கருத்தாக உள்ளது.[2] ஆனால், கலைச்சொல்லியல் ஒரு தனியான அறிவுத்துறைக்கான எல்லா நிபந்தனைகளையும் பூர்த்தி செய்வதாகக் கூறுகின்றனர்.

வரலாறு

[தொகு]
கலைச்சொல்லியலின் தந்தை எனக் கருதப்படும் யூஜீன் வூசுட்டர்

கலைச்சொல்லும். அது தொடர்பான பல நடவடிக்கைகளும் ஒரு அண்மைக்காலத் தோற்றப்பாடு அல்ல. மிகப் பழைய காலத்தில் இருந்தே கலைச்சொல் குறித்த உணர்வு இருந்து வந்திருக்கிறது. எனினும், 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலேயே இது குறித்த முறையான ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டன. 20 ஆம் நூற்றாண்டின் முன்பகுதியில் ஆசுத்திரியாவைச் சேர்ந்த யூஜீன் வூசுட்டர் என்னும் மின் பொறியாளர் கலைச்சொல் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு, பொதுக் கலைச்சொற் கோட்பாடு என அறியப்படும் கலைச்சொற் கோட்பாடு ஒன்றையும் உருவாக்கினார். இதனால், இவரைக் கலைச்சொல்லியலின் தந்தை எனக் குறிப்பிடுவது உண்டு.[3] கோட்பாட்டு உருவாக்கத்தில் மட்டுமன்றிக் கலைச்சொற்களைத் தரப்படுத்துவது தொடர்பிலும் ஆர்வம் கொண்டிருந்த வூசுட்டர், பல ஆய்வுகளை முன்னெடுத்ததோடு, நடைமுறையில் கலைச்சொற்களைத் தரப்படுத்தலைச் செயற்படுத்தும் முயற்சிகளிலும் தீவிரமாக ஈடுபட்டார். 1931 ஆம் ஆண்டில் கலைச் சொற்களைப் பன்னாட்டளவில் தரப்படுத்துதல் என்னும் நூலை வூசுட்டர் எழுதி வெளியிட்டார்.

1951 ஆம் ஆண்டில், பன்னாட்டுத் தரப்படுத்தல் அமைப்பின் கீழ் கலைச்சொற்களைத் தரப்படுத்தல் தொடர்பான ஆவணங்களை உருவாக்கும் நோக்குடன் தொழில்நுட்பக் குழு-37 என்னும் பெயரில் ஒரு குழு அமைக்கப்படுவதற்கு இந்நூல் ஏதுவாக அமைந்தது.[4] இக்குழு 1967 ஆம் ஆண்டில் தனது முதலாவது ஆவணத்தை வெளியிட்டது. அதன் பின்னர் இன்றுவரை கலைச்சொற்களைத் தரப்படுத்துவது தொடர்பில் பல ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன.[5]

1971ல், யுனெசுக்கோ, ஆசுத்திரியத் தர நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையிலான ஒரு ஒப்பந்தத்தின் மூலம் பன்னாட்டுக் கலைச்சொல் தகவல் மையம் (இன்ஃபாடேர்ம் - Infoterm) உருவானது. இது, துறைசார் தொடர்பாடல், அறிவுப் பரிமாற்றம் ஆகியவற்றை மேம்படுத்தல், பன்மொழி அறிவுச் சமூகங்களின் பங்களிப்பை ஊக்குவிப்பதற்கான உள்ளடக்கங்களை வழங்குதல் போன்ற நோக்கங்களைக் கொண்டிருந்தது.[6]

கலைச்சொல்லியலின் கூறுகள்

[தொகு]

முன்னர் கலைச்சொல்லியல் என்பது கலைச்சொற்களைப் பற்றிய ஆய்வு என்ற அளவிலேயே இருந்தது. ஆனால், தற்காலத்தில் இதன் பரப்பு விரிவடைந்துள்ளது. கலைச்சொல்லியல் என்பது, கலைச்சொற்களின் சேகரிப்பு, விபரிப்பு, முறைப்படுத்தல், வழங்கல் ஆகியவற்றோடு தொடர்புடைய ஆய்வு, செயற்பாடுகள் என்பவற்றை உள்ளடக்கிய ஒரு அறிவுப் புலம் எனப்படுகிறது.[7] தற்காலத்தில் கலைச்சொல்லியலில் பின்வருவன அடங்குகின்றன.

  • கலைச்சொற்களைச் சேகரித்தல், விளக்குதல், வழங்குதல் என்பவற்றுக்கான நடைமுறைகளும், வழிமுறைகளும்
  • கலைச்சொற்களுக்கும், கருத்துருக்களுக்கும் இடையிலான தொடர்புகளை விளக்குவதற்கு அடிப்படையாக அமையக்கூடிய கோட்பாடுகள்.
  • அறிவுத் துறைகளில் பயன்படுகின்ற கலைச்சொற்றொகுதி.

இந்த அடிப்படையில் தற்காலக் கலைச்சொல்லியல் கலைச்சொல் அகரமுதலி உருவாக்கம், கலைச்சொல்லாக்கம், கலைச்சொல் தரப்படுத்தல், கலைச்சொல்லியல் திட்டமிடல், கலைச்சொல்லியல் கொள்கை, கலைச்சொல்லியல் கோட்பாடு போன்ற பல்வேறு கூறுகளைத் தன்னகத்தே கொண்டு விளங்குகிறது.

கலைச்சொல் அகரமுதலி உருவாக்கம்

[தொகு]

கலைச்சொல் அகரமுதலி உருவாக்கம் என்பது புழக்கத்தில் உள்ள கலைச்சொற்களைச் சேகரித்து அவற்றுக்கான விளக்கங்களுடன் அகரமுதலி வடிவில் ஒழுங்குபடுத்தி வெளியிடுவது ஆகும். கலைச்சொல் அகரமுதலிகள் பொதுவாகத் துறைவாரியாகவே உருவாக்கப்படுகின்றன. முந்திய கலைச்சொல் அகரமுதலிகள் அச்சிட்டுப் புத்தக வடிவிலேயே வெளிவந்தன. தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியினால், இணையவழிக் கலைச்சொல் அகரமுதலிகளும் தற்போது பரவலாகப் பயன்பட்டு வருகின்றன. துறைசார் மாணவர்கள், ஆசிரியர்கள், வல்லுனர்கள், ஆய்வாளர்கள் போன்றோருக்கும், பிறருக்கும் உசாத்துணையாகப் பயன்படுவது ஒருபுறம் இருக்க, ஒவ்வொருவரும் தாம் விரும்பியபடி கலைச்சொற்களைப் பயன்படுத்தாமல், கலைச்சொற்களில் ஒருங்கிணைவு ஏற்படுவதற்கு இவ்வாறான அகரமுதலிகள் துணை செய்கின்றன.

குறிப்புகள்

[தொகு]
  1. மாதையன், பெ., 2009. பக். 144.
  2. Packeiser, Kirsten., 2009. பக். 8.
  3. செல்லப்பன், இராதா., 2004. பக். 1.
  4. செல்லப்பன், இராதா., 2004. பக். 1, 2.
  5. தொழில்நுட்பக்குழு 37, கலைச்சொல் தரப்படுத்தல் தொடர்பில் இதுவரை வெளியிட்ட ஆவணங்கள்.
  6. History of Infoterm - இன்ஃபாடேர்ம் இணையத் தளத்தில் இருந்து.
  7. Sager, Juan C., 1990. பக். 3.

உசாத்துணைகள்

[தொகு]
  • சண்முகம், செ. வை., மொழி ஆய்வு, மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், 2005.
  • செல்லப்பன், இராதா., கலைச்சொல்லாக்கம், அறிவுப் பதிப்பகம், சென்னை, 2006.
  • மாதையன், பெ., அகராதியியல் கலைச்சொல்லகராதி, பாவை பப்ளிகேசன்சு, சென்னை, 2009.
  • Cabre, M. Teresa., Terminology: Theory, Methods and Applications, John Benjamins Publishing Company, Amsterdam, 1999.
  • Infoterm, Guidelines for Terminology Policies, United Nations Educational, Scientific and Cultural Organization, Paris, 2005.
  • Packeiser, Kirsten., The General Theory of Terminology: A Literature Review and a Critical Discussion, Master Thesis Submitted to International Business Communication Copenhagen Business School, 2009.
  • Sager, Juan C., A Practical Course in Terminology Processing, John Benjamons Publishing Company, 1990.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலைச்சொல்லியல்&oldid=3958722" இலிருந்து மீள்விக்கப்பட்டது