உள்ளடக்கத்துக்குச் செல்

கற்கோடரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1800ல் பிரித்தானிய வெளியீட்டில் இடம்பெற்ற கற்கோடரியின் முதல் வரைபடம்.
வின்செசுட்டரில் கண்டெடுக்கப்பட்ட கற்கோடரி ஒன்று.

கற்கோடரி அல்லது கைக்கோடரி என்பது இரண்டு முகங்களைக் கொண்ட, வரலாற்றுக்கு முற்பட்ட காலக் கற்கருவிகளுள் ஒன்று. மனித வரலாற்றில் கூடிய காலம் பயன்பாட்டில் இருந்த கருவி இதுவே. இது கீழைப் பழங்கற்காலம், நடுப் பழங்கற்காலம் ஆகியவற்றுக்குரிய சிறப்பியல்பான கருவியாகும். இருமுகக் கருவி என்பது இதன் தொழில்நுட்பப் பெயர். இதன் மூலப்படிம மாதிரி வேல் வடிவம் கொண்ட இரு முகக் கற் சீவலாக இருப்பதே இப்பெயருக்கான காரணம். கற்கோடரிகள் பொதுவாக அதன் நீளப்பாட்டு அச்சுப் பற்றி சமச்சீர் வடிவம் கொண்டவை. இவை அழுத்தம் கொடுப்பதன் மூலமோ தட்டி உடைப்பதன் மூலமோ உருவாக்கப்பட்டன. மிகப் பொதுவான கற்கோடரிகள் கூரான முனையையும், வளைவான அடிப்பகுதியையும் கொண்டு அவற்றுக்கான சிறப்பியல்பான வடிவத்தைக் கொடுக்கின்றன.

பழங்கற்காலக் கருவிகளாக முதன் முதலாக அடையாளம் காணப்பட்டவை கற்கோடரிகளே. முதல் வெளியிடப்பட்ட கற்கோடரி ஒன்றின் படம், யோன் பிரேரே என்பவரால் வரையப்பட்டு 1800 ஆம் ஆண்டில் பிரித்தானிய வெளியீடு ஒன்றில் இடம்பெற்றது.[1] அதற்கு முன்னர் இப்பொருட்கள் இயற்கையாகவோ அல்லது இயற்கைக்கு மேம்பட்ட சக்திகளாலோ உருவானவை என்றே மக்கள் நம்பினர். இடிக்கற்கள் என்று அழைக்கப்பட்ட இவை புயல்களின்போது வானத்தில் இருந்து விழுந்தவை என்றோ அல்லது நிலத்துக்கு அடியில் மின்னலின் தாக்குதலினால் உருவாகி புவியின் மேற்பரப்புக்கு வந்தவை என்றோ கருதினர். இந்த நம்பிக்கை காரணமாகவே இன்னும் சில நாட்டுப்புறப் பகுதிகளில், தம்மைப் புயல்களில் இருந்து காத்துக்கொள்வதற்காகத் தாயத்தாக அணிகின்றனர்.

கற்கோடரிகள்,

  1. வேட்டையாடிய விலங்குகளைத் துண்டுபோடுதல்,
  2. கிழங்குகள், நீர் போன்றவற்றுக்காக நிலத்தைத் தோண்டுதல்,
  3. விறகு தறித்தலும், மரப் பட்டைகளை உரித்தலும்,
  4. இரைகளை நோக்கி எறிதல்,

போன்றவற்றுக்காகப் பயன்பட்டிருக்கக்கூடும்.

மூலப்பொருட்கள்

[தொகு]

கற்கோடரிகள் பெரும்பாலும் தீக்கற்கள், ரியோலைட்டுகள், போனோலைட்டுகள், குவார்ட்சைட்டுகள் அல்லது அவற்றைப் போன்ற பிற பாறைகளில் இருந்து செய்யப்படுகின்றன. ஆப்சிடியன் போன்ற எரிமலைக் கண்ணாடிப் பாறைகள் இலகுவில் உடைந்துவிடக்கூடும் ஆதலால் கற்கோடரிகள் செய்வதற்கு இவை அரிதாகவே பயன்படுகின்றன.

பயன்பாடுகள்

[தொகு]

பெரும்பாலான கற்கோடரிகளில் சுற்றிலும் உள்ள விளிம்புகள் கூரானவையாக அமைந்துள்ளதால் அவற்றின் பயன்பாடு குறித்து உறுதியான ஒத்த கருத்து இல்லை. பழங்கற்காலக் கற்கருவிகளின் முன்னோடி ஆய்வாளர்கள் இவை கோடரிகளாகவோ, குறைந்தது கடினமான வேலைகளைச் செய்வதற்காகவோ பயன்பட்டிருக்கக்கூடும் எனக் கருதினர். தற்போது இது ஒரு பல் செயற்பாட்டுக்கான கருவியாகப் பயன்பட்டிருக்கக்கூடும் என்ற கருத்தும் எழுந்துள்ளது. அத்துடன் பல்வேறு வடிவங்களிலான கற்கருவிகள் கிடைத்துள்ளன. இவை ஒவ்வொரு வகையும் பல்வேறு வகை வேலைகளைச் செய்வதற்குப் பயன்பட்டிருக்கலாம்.

கற்கோடரிகள் இரைகளை வேட்டையாடும்போது அவற்றின் மீது எறிவதற்கான ஆயுதங்களாகப் பயன்பட்டிருக்கலாம் என்னும் கருத்தை 1899 ஆம் ஆண்டில் எச். ஜி. வெல்சு முன்வைத்தார்.[2] வாசிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வில்லியம் எச். கல்வின் இக்கருத்தை ஆதரித்தார். வட்டத்தை அணுகும் வடிவம் கொண்ட சில கற்கோடரிகள் வேட்டையில் எறி பொருட்களாகப் பயன்பட்டிருக்கலாம் அல்லது நீர்நிலைக்கு அருகில் காணப்படும் பல விலங்குகளைக் கொண்ட மந்தை ஒன்றில் ஒரு விலங்கைத் திகைக்கச் செய்வதற்கு அந்த மந்தை மீது எறிவதற்காகப் பயன்பட்டிருக்கலாம் என அவர் கூறுகிறார். கெனியாவில் உள்ள ஒரு தொல்லியல் களம் ஒன்றில் பெறப்பட்ட தகவல்களில் இருந்தே இக்கருத்து உருவானது.[3] கற்கோடரிகளுக்கு பிடிகள் மிக அரிதாகவே காணப்படுகின்றன. சில கற்கோடரிகள் மிகப் பெரிதானவை என்பதால் இது சாத்தியப் படாதது. எனினும் எறியப்படும் கற்கோடரி விலங்குகளுக்குப் பெரிய காயத்தை ஏற்படுத்தும் அளவுக்கு அவற்றின் உடலுக்குள் ஊடுருவியிருக்க முடியாது. மேலும், பெரும்பாலான கற்கோடரிகள் மிகவும் சிறியவை. கற்கோடரிகளில் தாக்கத்தினால் பழுது ஏற்பட்டதற்கான சான்றுகள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன.

அத்துடன், கற்கோடரிகளை மீள்சுற்றுக்கு விடமுடியும், அவற்றின் பயன்பாட்டுக்காலம் முழுவதிலும் அவற்றை மீளக் கூராக்கவோ அல்லது மீளுருவாக்கம் செய்யவோ முடியும் என்பதுடன் அக்காலத்தில் அவை பல்வேறுபட்ட வேலைகளைச் செய்வதற்குப் பயன்பட்டிருக்கக்கூடும். இதனால், இவற்றைக் கோடரி என்று குறிப்பிடுவது சரியல்ல. இவை, அகழ்தல், வெட்டுதல், துருவுதல், கொத்துதல், துளைத்தல், அடித்தல் போன்ற பல வேலைகளுக்குப் பயன்பட்டிருக்கும்.

குறிப்புக்கள்

[தொகு]
  1. Frere, John (1800). "Account of Flint Weapons Discovered at Hoxne in Suffolk". Archeologia, vol. 13. London. Pages 204-205.
  2. Kohn, Marek (1999). As We Know it: Coming to Terms with an Evolved Mind. Granta Books. p. 59. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-86207-025-7.
  3. Calvin, William H. (2001). Cómo piensan los cerebros. Publisher Debate, Madrid. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 84-8306-378-6..

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கற்கோடரி&oldid=3581418" இலிருந்து மீள்விக்கப்பட்டது