கரோலின் எர்ழ்செல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கரோலின் எர்செல்
Caroline Herschel
பிறப்புகரோலின் லுக்கிரெட்டியா எர்செல்
(1750-03-16)16 மார்ச்சு 1750
அனோவர், புனித உரோமைப் பேரரசு
இறப்பு9 சனவரி 1848(1848-01-09) (அகவை 97)
அனோவர்
தேசியம்செருமானியர்
துறைவானியல்
அறியப்படுவதுவால்வெள்ளிகள் கண்டுபிடிப்பு
விருதுகள்அரச வானியல் கழகப் பொற் பதக்கம் (1828)
அறிவியலுக்கான புருசியப் பொற் பதக்கம் (1846)

கரோலின் லுக்கிரெட்டியா எர்செல் (Caroline Lucretia Herschel, 16 மார்ச் 1750 – 9 சனவரி 1848) ஒரு செருமானிய வானியலாளர். இவர் சர் வில்லியம் ஹெர்ச்செல்லின் தங்கை. இருவரும் வாழ்நாள் முழுவதும் வானியலில் ஒன்றாகவே பணிபுரிந்தனர். இவரது முதன்மை வாய்ந்த பணி வால்வெள்ளிகளின் கண்டுபிடிப்பாகும். குறிப்பாக இவர் பெயரில் வழங்கும் 35பி/ஹெர்ச்செல்-ரிகோல்லேட் எனும் பருவமுறை வருகைதரும் வால்வெள்ளியைக் கண்டுபிடித்தார்.[1]

இவர் அறிவியல் பணிக்காகச் சம்பளம் பெற்ற முதல் பெண்மணியும் அரசு வானியல் கழகப் பொற்பதக்கம் பெற்ற முதல் பெண்மணியும் ஆவார் (1828). இவர்1835இல் மேரி சோமர்வில்லியுடன் அரசு வானியல் கழகத்தின் தகைமை உறுப்பினர் ஆனார். இவர் 1838இல் ஐரிழ்சு கல்விக் கழகத்தின் தகைமை உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டார். பிரசிய அரசர் 1846இல் அதாவது 96ஆம் அகவையில் இவருக்கு அறிவியலுக்கான பொற்பதக்கம் அளித்து பெருமைப்படுத்தினார்.[2]

இளம்பருவம்[தொகு]

கரோலின் லுக்கிரெடியா ஹெர்ச்செல் ஹனோவரில் 1750 மார்ச் 16இல் பிறந்தார். இவர் ஐசக் ஹெர்ச்செல்லுக்கும் அவர்து மனைவி அன்னா இல்சே மோரித்சென்னுக்கும் பிறந்த எட்டாவது குழந்தையும் நான்காவது மகளும் ஆவார். ஐசக் படையில் நெடுங்காலமாக முரசு முழக்குபவராக இருந்து 1743 டெட்டிங்கன் போருக்குப் பிறகு நோய்வாய்பட்டு இறந்தார்.[2]

பத்தாம் அகவையில் என்புருக்கி நோய்கண்ட கரோலின் நான்கடி மூன்று அங்குலத்துக்கு மேல் வளரவில்லை.[1] இவருக்குத் திருமணம் செய்தல் அரிது எனக் கருதி இவரை இவரது தாயர் பணிப்பெண்ணாக்க விரும்பினாராம். இவரது தந்தை இவருக்கு கல்வியளிக்க விரும்ப அதைத் தாயார் எதிர்த்துள்ளார். எனினும் தந்தையார் அம்மா இல்லாதபோதெல்லாம் அவரே கல்வி தருவதும் அண்ணனின் பாடங்களைக் கற்பிப்பதுமாக இருந்துள்ளார். கரோலின் தொப்பி, ஆடை, பல்வகை நயப்பின்னல் வேலைகளில் மிகவும் கடுமையாக உழைத்து பயிற்சி பெற்று பிற்காலத்தில் தன்னைத் தானே கவனித்து கொள்ள முயன்றுள்ளார்.[2]

தந்தையின் இறப்புக்குப் பிறகு வில்லியம் கரோலினைத் தன்னுடன் இலண்டன் நகரப் பாத்துக்கு வந்து இசைப்பயிற்சியில் பங்கேற்கும்படி அழைக்கவே, 1772 ஆகத்து 16இல் இவர் அண்ணனுடன் இலண்டனுக்கு இடம்பெயர்ந்தார்.[2] அங்கு வில்லியத்தின் வீட்டுவேலைகளைக் கவனித்துக் கொண்டே பயிற்சியையும் தொடர்ந்துள்ளார். வில்லியம் தன் இசைவாழ்க்கையில் விரைவாக முன்னேறி, பொது இசைநிகழ்ச்சிகளை நடத்திடலானார். கரோலின் வில்லியத்திடம் ஒவ்வொரு நாளும் பலவகைப் பாடல்களிலும் பயிற்சிபெற்றுள்ளார். வில்லியத்தின் இசைக் கச்சேரிகளில் விரைவாக முதன்மைப் பாடகியாகத் திகழலானார். இவர் புகழ் பரவவே, இவருக்கு பர்மிங்காம் விழாவில் பாட அழைப்பு வந்துள்ளது. என்றாலும் தன் அண்ணனின் கச்சேரிகளில் மட்டுமே பாடுவேன் என அதை மறுத்துவிட்டுள்ளார்.[2] இவரால் உள்ளூர் மக்களுடன் நெருங்கிப் பழகமுடியவில்லை. எனவே அங்கு இவருக்கு நட்பு ஏதும் அமையவில்லை.[3]

சொந்த வாழ்க்கை[தொகு]

வில்லியம் வானியல் ஆர்வத்தால் இசைத்துறையை விட்டு வானியலாளராக மாறியதும் அவரது முயற்சிகளில் கரோலினும் துணைநின்றார். கரோலின் தன் நினைவலைகளில் கசந்து பின்வருமாறு கூறுகிறார். "நான் என் அண்ணனுக்கு பயிற்சி தரப்பட்ட நாயைப் போல பணியாற்றினேன்; வேறேதும் செய்யவில்லை. அவர் கட்டளையிட்டபடியெல்லாம் இணங்கி வேலை செய்தேன்." என்றாலும் வில்லியம் இறந்த பிறகான கரோலினின் பணிகளில் இருந்தும் இவரது கடிதங்களில் வெளிப்படும் வாழ்நாள் முழுதும் வானியலில் காட்டிய ஆர்வத்தில் இருந்தும் இவர் வில்லியத்தின் பணிக்காலத்தில் எவ்வாறு தற்சார்புடன் வானியலில் ஆர்வமும் ஈடுபாடும் கொண்டிருந்துள்ளார் என்பது தெளிவாகிறது. மேலும் கரோலினும் வில்லியமும் வானியலில் இணையான ஆர்வத்துடனேயே ஈடுபட்டுள்ளனர் என்பதும் புரிகிறது.[2] அவருடன் இணைந்து பணிபுரியும்போது கரோலின் தன்னியல்பாகவே தானும் ஒரு தனித்தன்மை வாய்ந்த வானியலாளராக இருந்ததும் விளங்குகிறது.[1]

இவர் தனது எழுத்துகளில் எல்லாம் தனியாக சம்பளம் பெற்று தற்சார்போடு வாழும் விருப்பத்தை அடிக்கடி குறிப்பிட்டுக் கூறுவதைக் காணலாம். இவரது அண்ணனுக்கு இவர் செய்த உதவிக்கு அரசு சம்பளம் தர இசைந்ததும், ஆண்களே அறிவியல் பணிக்காக ஊதியம் பெறாத அக்காலத்தில் இவர் முதலில் அறிவியல் பணிக்கு ஊதியம்பெறும் பெண்மணியானார்.[4] Brock, Claire. "Public Experiments." History Workshop Journal, 2004: 306–312.</ref>

வில்லியம் மேரி பிட் நீ பால்டுவின் எனும் பணக்கார விதவையை 1788இல் மணம் செய்ததும் அண்ணன்-தங்கை உறவு விரிசல் கண்டது. முனைப்போடு அண்ணனை வணங்கும் பொறாமைபிடித்தவராகக் கூறப்படுகிறார். வீட்டு வாழ்க்கையில் வந்து எவர் தலையிட்டாலும் எரிந்து விழுந்து வருத்தப்படுபவராக இருந்துள்ளார்.[5] வியப்பான காலம் என்ற தன் நூலில் ரிச்சர்டு ஓல்மெசு கரோலின்பால் மிகவும் பரிவு காட்டுவதோடு இம்மாற்றம் கரோலின் வாழ்வில் எவ்வளவு அல்லலைத் தந்தது என விளக்குகிறார். வில்லியத்தின் மனைவியின் வருகையால் வீட்டில் இவருக்கிருந்த மேலாண்மையையும் குடும்பப் பொறுப்பையும் இவற்றால் கிடைத்துவந்த மதிப்பையும் இவர் இழக்க நேர்ந்துள்ளது. தன் நினைவலைகளின்படி, இவர் வீட்டில் இருந்து வெளியேறி, அருகில் உள்ளவொரு விடுதியில் தங்க நேர்ந்துள்ளது. அன்றாடப் பணிகளுக்காக மட்டுமே இவர் அண்ணனிடம் வந்துள்ளார். இவர் தனியே பலவேளைகளில் பணிபுரியும் வான்காணகத்துப் பணியறையின் திறவுகூட இவரிடம் தரப்படவில்லையாம்.[2] 1788 முதல் 1798 வரையுள்ள நாட்குறிப்புக் கையேட்டை அழித்துவிட்டதால் அக்கால நிகழ்வுகள் பற்றியும் அப்போது நிலவிய இவரது உணர்வுகள் பற்றியும் ஏதும் அறிய முடியவில்லை. பார்த்தேலெமி ஃபௌஜாசு தெ செயிண்டு-ஃபாண்டு இவரும் அண்ணனும் இணக்கமாக நன்கு பணிபுரிந்து வந்ததாகக் கூறுகிறார். அண்ணனின் குடும்பம் அங்கே இல்லாத வேளைகளில் இவர் வீட்டைப் பார்த்துக் கொண்டுள்ளார். பிற்கால வாழ்க்கையில் இவரும் அண்ணியும் ஆழ்ந்த அன்போடும் பரிவோடும் வாழ்ந்துள்ளனர்.[2]

வில்லியத்தின் திருமணம் இவர் அவரை விட்டுப் பிரிந்து தற்சார்புடன் தனித்த ஆளுமையாக மாற வழிவகுத்துள்ளது.[6] வில்லியத்தின் துணையின்றியே கரோலின் தொடர்ந்து வானியல் திட்டங்களில் ஈடுபட்டு பல கண்டுபிடிப்புகளை மேற்கொண்டுள்ளார். எனவே இவர் புகழ் மென்மேலும் உயரலானது.

தன் அண்ணன் இறந்ததும் பேரவலத்தில் ஆழ்ந்ததால் இவர் மீண்டும் செருமனி, ஹனோவருக்கு வந்துள்ளார். இவர் அங்கு 1848 ஜனவரி 9இல் இயற்கை எய்தியுள்ளார். இவர் ஹனோவரில் (35 Marienstrasse இல் உள்ள Gartengemeinde கல்லறையில்) அடக்கம் செய்யப்பட்டுள்ளார்.

வானியற் பணிகள்[தொகு]

கரோலினுக்காக வில்லியம் ஹெர்ச்செல் செய்த தொலைநோக்கி, 1795
வில்லியமும் கரோலின் ஹெர்ச்செல்லும் தொலைநோக்கி வில்லைக்கு மெருகூட்டுதல், 1896 கல்லச்சுப் படம்.

இரவுநேர பொழுதுபோக்காக வில்லியத்தின் வானியல் ஆர்வம் தொடங்கியுள்ளது. இரவு தான் கற்றதை மறுநாள் காலைச் சிற்றுண்டி நேரத்தில் இயல்பான முறையில் உரையாற்றுவார். கரோலினும் வில்லியம் போலவே வானியலில் ஆர்வம் கொண்டிருந்தார். வில்லியம், கரோலின் பல்வேறு வானியற் கருவிகளின் உருவாக்கத்திற்காக அடிக்கடி அவரைக் கூப்பிட்டு தொல்லை செய்வதாகக் கூறுமளவுக்கு அது அமைந்திருந்துள்ளது.[3] வில்லியம் உயர்செயல்திறன் தொலைநோக்கிகளை உருவாக்க அதற்கு கரோலின் தன்னாலான அனைத்து உதவிகளையும் செய்துள்ளார். கரோலின் கண்ணாடிகளையும் வில்லைகளையும் மெருகூட்டி, கவரும் ஒளி பெருமமாக அமையும்படி, தொலைநோக்கியைத் துல்லியமாக நிறுவ பல மணி நேரம் எடுத்துக்கொள்வார்.[7] வில்லியம் இரவல் பெற்றுவந்த வானியல் அட்டவணைகளையும் வெளியீடுகளையும் கரோலின் துல்லியமாகப் படியெடுக்க கற்றுக்கொண்டுள்ளார். இவர் தன் அண்ணன் செய்த நோக்கீடுகளைப் பதிவு செய்து தரவுகளை ஒழுங்கமைக்கவும் கற்றுக்கொண்டுள்ளார். இப்பணிகளுக்கு வேகமும் துல்லியமும் சரிநுட்பமும் தேவைப்படுவதைப் புரிந்தவராக இருந்துள்ளார்.[8]

வில்லியம் 1782இல் ஜார்ஜ் III அரசரின் வானியலாளராகப் பணிபுரிய ஒப்புக்கொண்டு தாட்செட்டுக்குப் புலம்பெயர்ந்தார். பிறகு (அப்போது பக்கிங்ழ்சையரில் இருந்த, இப்போது பெர்க்குழ்சையரில்இல் உள்ள) சுலவுகுக்கு அருகில் இருந்த வான்காணகத்துக்குச் சென்றார். இப்புது வேலை அவருக்கு நல்வாய்ப்பு கலந்ததாக அமைந்தது. தன் வானியல் ஆய்வுக்குப் போதுமான ஒழிவு நேரமும் கிடைத்தது. என்றாலும் இதில் அவரது வருமானம் குறைந்தது. எப்போது வேண்டுமானலும் பொழுதுபோக்குக்காக அரசரால் அழைக்கப்படலாம். இக்காலத்தில் அவர் தொலைநோக்கிகளைச் செய்யலானார். கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிய பெரிய தொலைநோக்கிகளைச் செய்து இறுதியாக அவரது பெயர்பெற்ற 100செ.மீ குவிய நீளம் அமைந்த தொலைநோக்கியைச் செய்தார். வானியல் நோக்கீடுகளிலும் அவற்றோடு தொடர்புடைய கணக்கீடுகளிலும் கரோலின் பெரிதும் உதவியாக இருந்துள்ளார். பெரிய தொலைநோக்கியில் 1783இல் ஒரு நோக்கீட்டின்போது ஓர் இரும்பு கொக்கியில் கரோலின் மாட்டிக் கொண்டுள்ளார். அவரது உடலில் இருந்து 2 அவுன்சு சதையை வெட்டி நீக்கிய பிறகுதான் கரோலினை மீட்க அப்போது முடிந்திருககிறது."[3]

வில்லியத்தின் பரிந்துரையின் பேரில் 1782இல் கரோலின் தனித்து வானியல் நோக்கீடுகளைச் செய்யத் தொடங்கியுள்ளார். ஓய்வு நேரங்களில் 27 அங்குலக் குவிய தொலைவுள்ள நியூட்டோனியத் தொலைநோக்கியால் பார்க்கத் தொடங்கி, 1783-87 கால இடைவெளியில் பல வான்பொருள்களைக் கண்டுபிடித்துள்ளார். இவற்றில் M110 (NGC 205) ஆந்திரமேடா பால்வெளியின் துணையமைப்பும் அடங்கும். மேலும் 1786–97 கால இடைவெளியில் எட்டு வால்வெள்ளிகளையும் கண்டுபிடித்துள்ளார். முதல் வால்வெள்ளியை 1786 ஆகத்து 1இல் கண்டுள்ளார். இவர் 5 வால்வெள்ளிகளை முன்பாகக் கண்டுபிடித்தமை ஏற்கப் பட்டது.[4][9] இவர் 1795இல் என்கே வால்வெள்ளியை மீளக் கண்டுபிடித்துள்ளார்[10] இவருக்கு 1787இல் ஆண்டுச் சம்பளமாக £50 தரப்பட்டது (2016 இல் £5700 க்குச் சமம்). இது ஜார்ஜ் III ஆல் வில்லியத்துக்கு இவர் உதவியதற்காகத் தரப்பட்டுள்ளது.[11]

வில்லியம் 1797இல் செய்த நோக்கீடுகளால் ஜான் ஃபிளம்சுட்டீடு வெளியிட்ட விண்மீன் அட்டவணையில் பற்பல பிழைகள் இருப்பதைக் கண்ணுற்றுள்ளார். மேலும் அது நோக்கீடுகளுக்கு ஒரு தொகுதியும் அட்டவணைக்கு ஒரு தொகுதியுமாக வெளியிடப்பட்டிருந்ததால் அதைப் பயன்படுத்துவது அரியதாக இருந்தது. வில்லியம் இதற்குத் தனியாகச் சுட்டி ஒன்று தேவைப்படுவதை உணர்ந்தார். அப்பணியைத் தன் உயர்தர வானியற் பணிகளுக்கிடையில் செய்ய அவரால் நேரம் ஒதுக்க முடியவில்லை. எனவே இப்பணியைச் செய்ய கரோலினுக்குப் பரிந்துரைத்துள்ளார். கரோலின் சரிசெய்து உருவாக்கிய விண்மீன் அட்டவணை 1798இல் அரசு வானியல் கழகத்தால் வெளியிடப்பட்டது. இதில் ஃபிலம்சுட்டீடு கண்ட ஒவ்வொரு விண்மீனின் ஒவ்வொரு நோக்கீட்டிற்கும் ஒரு சுட்டியும் பிழைப்பட்டியலும் விடுபட்ட 560 விண்மீன்களின் பட்டியல் ஒன்றும் அமைந்தன.[11]

தன் அண்ணன் இறந்த பிறகு கரோலின் 1822இல் ஹனோவருக்குத் திரும்பியுள்ளார். என்றாலும் வில்லியத்தின் கண்டுபிடிப்புகளைச் சரிபார்க்கவும் தனது உறவினர் ஜான் ஹேர்ச்ஷெல் பணிகளில் உதவிபுரியவும் வானியல் பணிகளைத் தொடர்ந்து செய்துள்ளார். அப்போது ஒண்முகில்களின் அட்டவணையை உருவாக்குவதில் துணை புரிந்துள்ளார். இவருக்கு 1828இல் இப்பணிக்காக அரசு வானியல் கழகம் அக்கழகப் பொற்பதக்கத்தை வழங்கியது. பிறகு இப்பதக்கத்தை 1996இல் தான் வேரா ரூபின் என்பவர் பெற்றார் என்பது இங்கு குறிப்பிடத் தக்கது.

தகைமைகள்[தொகு]

சிறுகோள் 281 லுக்கிரெடியா (1888இல் கண்டுபிடிக்கப்பட்டது) இவரது இரண்டாம் பெயரால் அழைக்கப்படுகிறது. நிலாவில் உள்ள ஒரு குழிப்பள்ளம் சி. ஹெர்ச்செல் என இவரது பெயரால் வழங்கப்படுகிறது.

அட்ரியன்னே ரிச்சின் 1968ஆம் ஆண்டு கவிதை கரோலின் ஹெர்ச்செல்லின் வாழ்வையும் அறிவியல் பணிகளையும் பாராட்டுகிறது Planetarium.

The Dinner Party எனும் கலைப்பணி கரோலின் ஹெர்ச்செல்லுக்கு ஓரிடம் அளித்து இவரைப் பெருமைப்படுத்தியுள்ளது.[12]

மேற்கோள்கள்[தொகு]

92ஆம் அகவையில் கரோலின் ஹெர்ச்செல்
 1. 1.0 1.1 1.2 Nysewander, Melissa. Caroline Herschel. Biographies of Women Mathematicians, Atlanta: Agnes Scott College, 1998.
 2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 Herschel, Caroline Lucretia (1876). Herschel, Mrs. John. ed. Memoir and Correspondence of Caroline Herschel. London: John Murray, Albemarle Street. https://archive.org/details/memoircorrespond00hersiala. 
 3. 3.0 3.1 3.2 The Inimitable Caroline, J. Donald Fernie, American Scientist, November–December 2007, pp. 486–488
 4. 4.0 4.1 Brock, Claire. "Public Experiments." History Workshop Journal, 2004: 306–312.
 5. Fernie, Donald. "The Inimitable Caroline". American Scientist 2007: 486–488. 
 6. The Age of Wonder by Richard Holmes pages 182–196
 7. Ashworth, Wilhelm. "Untitled Review." The British Society for the History of Science Vol. 37 No. 3, 2004: 350–351.
 8. Warner, Deborah. "Review, Untitled." Chicago Journal, 2004: 505.
 9. "Obituary of Miss Caroline Lucretia Herschel". Monthly Notices of the Royal Astronomical Society 8: 64–66. 1847. doi:10.1093/mnras/8.4.57. Bibcode: 1848MNRAS...8...57.. http://articles.adsabs.harvard.edu/full/seri/MNRAS/0008/0000064.000.html. 
 10. "Obituary of John Francis Encke". Monthly Notices of the Royal Astronomical Society 26: 129–134. 1865. http://articles.adsabs.harvard.edu/full/seri/MNRAS/0026//0000131.000.html. 
 11. 11.0 11.1 Marilyn Bailey Ogilvie (1986). Women in Science: Antiquity through the Nineteenth Century. MIT Press. பக். 97–98. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-262-65038-X. https://archive.org/details/womeninsciencean0000ogil. 
 12. Place Settings. Brooklyn Museum. Retrieved on 2015-08-06.

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கரோலின்_எர்ழ்செல்&oldid=3583370" இலிருந்து மீள்விக்கப்பட்டது