கரிமத்தாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கரிமத்தாள்

கரிமத்தாள் (Carbon paper) என்பது காய்ந்த மையோ அல்லது ஒருவித மெழுகுடன் சேர்ந்த நிறமியோ ஒரு பக்கம் மட்டும் தடவப்பட்ட ஒருவகைக் காகிதம் ஆகும். இது நகல்கள் எடுக்கப் பயன்படும். குறிப்பாகத் தட்டச்சுக் கருவிகளில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. குமிழ்முனைப் பேனாவைப் பயன்படுத்தியும் நகல்கள் எடுத்து வந்தனர். 1954 ஆம் வருடம் மெழுகிற்குப் பதிலாக பல்லுறுப்பியைப் (polimer) பயன்படுத்தி கரைப்பான் கரிமத்தாள் (Solvent Carbon Paper) என்னும் ஒரு வகைத் தாளுக்கு கொலம்பியா ரிப்பொன் மற்றும் கரிமம் உற்பத்தி செய்யும் நிறுவனம் (Columbia Ribbon and Carbon Manufacturing Company) காப்புரிமை வேண்டி மனு செய்திருந்தது. உற்பத்தி முறையும் உருக்கிச் செய்யும் முறைக்குப் (Hot-melt Method) பதிலாக கரைப்பான் தடவும் (Solvent applied Coating method) முறை பயன்படுத்தப்பட்டது. இதன் மூலம் கரிமத்தாள் என்னும் பெயர் தொடர்ந்தாலும் கூட காகிதத்திற்குப் பதிலாக ‘பாலியிச்டெர்’ அல்லது நெகிழியும் பயன்படுத்த முடிந்தது.[1]

வரலாறு[தொகு]

1806 ஆம் ஆண்டு கண்டுபிடிப்பாளர் ரால்ப் வெட்சிவுட் (Radph Wedgwood) (1766-1837) என்பவர் தாம் கண்டுபிடித்த சுடைலோ கிராபிக் மேனிபோல்டு ரைட்டர் (Stylographic manifold writer) என்னும் உபகரணத்திற்குக் காப்புரிமை பெற்றார். கரிமத்தாளுக்கு முதன் முதலில் பெற்ற காப்புரிமை இதுவே ஆகும்.[2][3] இது பார்வை இழந்தவர்களுக்கு எழுத்தாணி மூலம் எழுதுவதற்கு வகை செய்யும்படி அமைக்கப்பட்டிருந்தது. இந்த எழுதும் எந்திரம் ஒரு பலகையில் கம்பிகளை குறுக்கும் நெடுக்குமாக அமைத்து பார்வையற்றவர்கள் தொட்டுணர்ந்து எழுதும் வண்ணம் இதனை வடிவமைத்திருந்தார். அதன்பின் வெட்சுவுட் மையினால் நன்கு நனைக்கப்பட்டு பின்பு உலர வைத்த ஒரு காகிதத்தை கம்பிகளுக்கு இடையிலும் மைத்தாளுக்கு கீழ் புரைத்தாள் (Tissue paper) ஒன்றையும் வேறொரு தாளையும் இந்த குறுக்கு நெடுக்கு கம்பிகளமைத்த பலகையில் வைத்தார். எழுத்தாணியால் மைத்தாளில் எழுதுவது வெறும் தாளில் பதியத் துவங்கியது.

இந்த சுடைலோ கிராபர் (Stylographic manifold writer) என்னும் எழுதும் கருவிக்கு ஒரு உபபொருளாகவே கரிமத்தாள் உருவானது. ஆனாலும் காிமத்தாளைப் போலி ஆவணம் புனைய ஏதுவாகும் என்று பொதுமக்கள் கருதி இதனை விரைவில் ஏற்றுக்கொள்ளவில்லை. 1867 ஆம் ஆண்டு தட்டச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டுப் பரவலாக பயன்படுத்தப்படும் வரை கரிமத்தாளின் பயன்பாடு அதிகமாக இல்லை. 1860 ஆம் ஆண்டு கரிமத்தாள் புது வடிவம் பெற்றது. லெப்புசு ரோஜர்சு ( Lebbeus Rogers)என்பவர் புகைக்கரி, நாப்தா மற்றும் எண்ணெய் கலந்த கலவையைப் பயன்படுத்தி கரிமத்தாளை மாற்றியமைத்தார். இம்முறை 20 ஆம் நூற்றாண்டு வரையிலும் பிரபலமாகவே இருந்தது. தற்பொழுது அனைவராலும் பயன்படுத்தப்படும் ‘cc’ என்னும் சொல் (Carbon Copy) 'கரிமத்தாளின் நகல்' என்பதே இது எவ்வளவு பிரபலம் என்பதற்கு எடுத்துக்காட்டு.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கரிமத்தாள்&oldid=3711419" இருந்து மீள்விக்கப்பட்டது