கராச்சியில் காற்று மாசுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கராச்சியில் காற்று மாசுபாடு (Air pollution in Karachi) பாக்கித்தான் நாட்டின் முதன்மையான தொழில் நகரமும், வணிக தலைநகரமுமான கராச்சியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாட்டை இக்கட்டுரை விவரிக்கிறது. காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள உலகின் 12 ஆவது மிகப்பெரிய நகரமாக கராச்சி நகரம் கருதப்படுகிறது. குறிப்பிடத்தக்க காற்று மாசுபாடு பிரச்சனையை கராச்சி நகரம் நாள்தோறும் எதிர்கொள்கிறது. [1] கராச்சியின் காற்றின் தரம் பல ஆண்டுகளாக மோசமடைந்து வருகிறது, மாசு அளவுகள் பெரும்பாலும் உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்த பாதுகாப்பான வரம்புகளை மீறியுள்ளன.[2]

காற்றின் தரக் குறியீடு[தொகு]

கராச்சி நகரத்தின் காற்றுத் தரக் குறியீடு அளவு 193 என்ற ஆரோக்கியமற்ற நிலைக்கு உயர்ந்துள்ளது. இந்த அளவின் அடிப்படையில் இது உலகின் நான்காவது மிகவும் மாசுபட்ட நகரமாகும்.[2] நகரத்தின் காற்றுத் தரக் குறியீடு பெரும்பாலும் உலகளவில் மிக அதிகமான அளவாக உள்ளது. இந்நிலை காற்று மாசுபாட்டின் கடுமையான அளவைக் குறிக்கிறது.[3]

கராச்சியில் காற்று மாசுபடுவதற்கு நுண் துகள்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கராச்சி நகரத்தின் காற்றில் 2.5 மைக்ரோமீட்டர் அல்லது அதற்கும் குறைவான விட்டம் கொண்ட துகள்களின் செறிவு உலக சுகாதார நிறுவனத்தின் வருடாந்திர காற்றின் தர வழிகாட்டி மதிப்பை விட 11.8 மடங்கு அதிகமாக உள்ளதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. [2] கோரங்கியில் 24 மணி நேர சராசரி PM2.5 101 ± 45.6 µg m−3 என்றும் திபெத் மையத்தில் 76.5 ± 38.4 µg m−3. என்றும் பதிவாகியுள்ளன. குளிர்காலத்தில் இந்த அளவுகள் கணிசமான அளவுக்கு அதிகமாக இருக்கும். அதிகரித்த எரிப்பு செயல்பாட்டையும் குறைந்த காற்றின் பரவலையும் இந்நிலை குறிக்கிறது. [4]

மாசுபாட்டின் முக்கிய ஆதாரங்கள்[தொகு]

போக்குவரத்து மற்றும் தொழில்துறை உமிழ்வுகள், கழிவுகளை எரித்தல், மின்னுற்பத்தி உமிழ்வுகள், குளிர்சாதன பெட்டிகளில் இருந்து உமிழ்வுகள், தூசி வீச்சு மற்றும் வீடுகள் மற்றும் விடுதிகளில் பயன்படுத்தப்படும் அடுப்புகள் ஆகியவை கராச்சியின் காற்று மாசுபாட்டுக்கு முக்கிய ஆதாரங்களாகும். [2]

சுற்றுச்சூழல் பாதிப்பு[தொகு]

காற்று மாசுபாட்டால் கராச்சியின் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கராச்சியில் கார்பன் டை ஆக்சைடு மற்றும் சுத்தமான காற்றை உறிஞ்சுவதற்கு உதவும் சதுப்புநிலங்கள் உட்பட சிந்துவின் கடற்கரையோரத்தில் உள்ள அனைத்து வகையான காடுகளும் ஆபத்தான அளவிற்கு குறைந்துவிட்டன. கடந்த 50 ஆண்டுகளில், கராச்சி நகரம் 10,000 எக்டேர் சதுப்புநிலக் காடுகளை ஆக்கிரமிப்பு, வணிகமயமாக்கல் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக இழந்துள்ளது. [5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Karachi Air Quality Index (AQI) and Pakistan Air Pollution | IQAir". November 4, 2023.
  2. 2.0 2.1 2.2 2.3 "Karachi's air quality worsening". February 28, 2022.
  3. "Pakistan's Karachi ranks first for highest pollution on US Air Quality index". October 10, 2022.
  4. "PM2.5 in a megacity of Asia (Karachi): Source apportionment and health effects. in SearchWorks articles".
  5. "Karachi's air quality worsening". 28 February 2022.