கன்சலும் கிரேடெலும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


ஹான்சலும் க்ரெட்டலும் கிரிம் சகோதரர்கள் தொகுத்த ஒரு ஜெர்மானிய நாட்டுப்புற மந்திரக் கதையாகும். 1812 ஆம் ஆண்டு இக்கதை பிரசுரம் ஆனது.[1] இக்கதை சினிமா, நாடகம் என பல ஊடகங்களில் வெளிவந்துள்ளது.

சூனியக்காரியை சந்தித்தல்

கதை சுருக்கம்[தொகு]

ஹான்சல் என்று ஒரு சிறுவனும் அவனுக்கு க்ரெட்டல் என்ற ஒரு தங்கையும் ஜெர்மானிய நகரம் ஒன்றில் வாழ்ந்து வந்தனர். இவர்களின் தந்தை ஒரு ஏழ்மையான மரவெட்டி. மரங்களை வெட்டி அதன் கட்டைகளை விற்று பணம் சம்பாதித்து வந்தான். இவர்களின் அம்மா இறந்து விட்டதால் தந்தை வேறொரு மணம் செய்தான். இவர்களின் சித்தியானவள் இவர்களின் மீது ஒரு துளி கூட அன்பு காட்டாதவள்.

ஒரு வறட்சி காலம் வந்த போது வீட்டில் சாப்பிட உணவு மிகவும் குறைவாக இருந்தது. குழந்தைகள் அதிகமாக உணவு உண்கின்றனர் என்று சித்தி கருதினாள். அதனால் ஹான்சலின் தந்தையிடம் குழந்தைகள் இருவரையும் காட்டில் விட்டுவிடுவோம், நாமும் பட்டினி கிடந்து சாக தேவையில்லை என்று அவள் கூறினாள். ஹான்சலின் தந்தை அந்த இரக்கமற்ற காரியத்தை செய்ய மறுத்தார். காட்டில் அவர்களை விட்டால் வேறுயாராவது அவர்களை பார்த்துக்கொள்வர் என்று சித்தி கூறிய போது ஹான்சலின் தந்தை தயக்கத்துடன் ஒப்புக்கொண்டார். அப்பாவும் சித்தியும் பேசி கொண்ட இந்த உரையாடலை ஹான்சல் ஒட்டு கேட்டான்.

அப்பாவும் சித்தியும் தூங்க சென்ற பிறகு ஹான்சல் வீட்டின் வெளியே சென்று வெண் கூழாங்கற்களை எடுத்து கொண்டான். க்ரெட்டலிடம் அப்பாவும் சித்தியும் பேசிய உரையாடலை கூறிவிட்டு, நம்மை கடவுள் எளிதில் கைவிட மாட்டார் என்று உறுதி கூறினான்.

அடுத்த நாள் காலை அவர்கள் அனைவரும்  அந்த அடர்ந்த காட்டினுள் சென்றனர். ஹான்சல் போகும் வழியில் கூழாங்கற்களை ஒவ்வொன்றாக போட்டுக்கொண்டே வந்தான். அப்பாவும் சித்தியும் சிறுவர்கள் அசந்த நேரம் அவர்களை காட்டிலேயே விட்டுவிட்டு சென்றனர். தெளிந்த வெண்ணிலவு விண்ணில் உதித்ததும் அந்த வெளிச்சத்தில்  வெண் கூழாங்கற்களை தொடர்ந்து வீட்டிடம் வந்தடைந்தனர் சிறுவர் இருவரும். இதை கண்ட சித்திக்கு ஒரே ஆத்திரம்.

மீண்டும் ஒரு சமயம் வீட்டில் உணவு பற்றாற்குறை ஏற்பட்ட போது சித்தி தந்தையிடம் குழந்தைகளை காட்டில் விட சொன்னாள். இதை கேட்ட ஹான்சலும் க்ரெட்டலும் முன்பு போலவே கூழாங்கற்களை எடுக்க வீட்டின் வெளியில் செல்ல முயன்றனர். ஆனால் அவர்கள் வெளியே செல்லாதவாறு வீட்டினுள்ளே பூட்டப்பட்டிருந்தனர்.

அடுத்த நாள் அவர்களை காட்டில் விட அப்பாவும் சித்தியும் கூட்டி சென்றனர். ஹான்சல் தன் கையில் ஒரு ரொட்டி துண்டை எடுத்து வந்தான். அதை பாதை முழுவதும் உதிர்த்து ரொட்டி துகள்களாக சிந்தி கொண்டே போனான்.

பெற்றோர்கள் அவர்களை காட்டில் விட்டு சென்ற பின்னர், ரொட்டி துகள்களை பின்தொடர்ந்து வீட்டை அடையலாம் என்றெண்ணிய ஹான்சலும் க்ரெட்டலும் ஏமாற்றம் அடைந்தனர். ரொட்டி துகள்களை பறவைகள் கொத்தி தின்றுவிட்டனர்.

காட்டில் அவர்கள் இருவரும் தொலைந்து போயினர். சில நாட்கள் காட்டில் அங்கும் இங்குமாக அலைந்தனர். ஒரு சிறிய வெள்ளை பறவையை பின் தொடர்ந்து சென்ற அவர்கள் ஒரு அற்புதமான காட்சியை கண்டனர். ரொட்டியாலும் கேக்காலும் மிட்டாயாலும் ஜெல்லியினாலுமான ஒரு வீடு. அதன் ஜன்னல்கள் கற்கண்டால் ஆயிருந்தது. நெடு நாள் காட்டிலேயே அலைந்த இருவருக்கும் இருந்த பசியில் இதை கண்டதும் வீட்டின் கூரையை பிய்த்து உண்ண தொடங்கினர். அப்பொழுது வீட்டின் உள்ளிலிருந்து ஒரு கிழவி வெளியே வந்தாள். அவர்களை வாங்க வாங்க என்று கூறி வரவேற்றாள். உண்ண உணவும் தூங்க மெத்தையும் தருகிறேன் என்றும் ஆதரவாய் பேசி வரவேற்றாள். அவர்களை சமைத்து உண்ண காத்திருக்கும் சூனியக்காரி தான் அந்த கிழவி என்பதை அவர்கள் அறிந்திராது உள்ளே சென்றனர்.

அடுத்த நாள் அந்த கிழவி ஹான்சலை ஒரு  கூட்டிற்குள் அடைத்தாள். க்ரெட்டலை தனக்கு பணிவிடைகள் செய்யும் அடிமையாய் வைத்தாள். கூண்டிற்குள் இருக்கும் ஹான்சலை தினந்தோறும் அதிக உணவளித்து கொழுக்க செய்து சமைத்து உண்ணலாம் என திட்டமிட்டாள். க்ரெட்டலுக்கோ மிச்சத்தையும் மீதியையும் உண்ண அளித்தாள்.

ஒரு நாள் ஹான்சல் கொழுத்து விட்டானா என சோதிக்க அவனை தன் விரலை நீட்ட சொன்னாள். அவனோ ஒரு மெலிந்த எலும்பினை நீட்டினான். கண்கள் சரியாக தெரியாத அந்த சூனியக்காரி அவன் இன்னும் கொழுக்க வில்லை என்று எண்ணினாள். இப்படியே சில வாரங்கள் போயின.

கொழுத்தாலும் சரி கொழுக்காவிட்டாலும் சரி இன்று இவனை சமைத்தே ஆக வேண்டும் என்று ஒரு நாள் தீர்மானித்தாள். அவனை சமைக்க அடுப்பை மூட்டினாள். க்ரெட்டலை அடுப்பில் தள்ளி சமைத்து விடலாம் என எண்ணி அவளிடம் அடுப்பு நன்றாக எரிகிறதா என பார் என்று கிழவி சொன்னாள். அதை புரியாதவாறு விழித்தாள் க்ரெட்டல். இப்படி தான் பார்க்க வேண்டும் என்று அடுப்பருகில் சென்று காட்டினாள் சூனியக்காரி. சட்டென க்ரெட்டல் சூனியக்காரியை அடுப்பினுள் தள்ளி விட்டு கொன்றாள். கூண்டிலிருந்து ஹான்சலை விடுவித்து, சூனியக்காரி வைத்திருந்த மாணிக்கமும் ரத்தினமும் நிறைந்த ஒரு குவளையையும் எடுத்து அங்கிருந்து அவர்கள் தப்பினர்.

காட்டை விட்டு தங்கள் நகரத்தை வந்தடைந்த அவர்கள் தங்கள் தந்தை தனித்திருப்பதை கண்டனர். அவர்களின் சித்தி இறந்து விட்டதாக கேள்வி பட்டனர். சூனியக்காரியிடமிருந்து எடுத்த வந்த விலை உயர்ந்த கற்களை விற்று அவர்கள் சந்தோசமாக வாழ்ந்தனர்.  

  1. Ashliman, D. L. (2011). "Hansel and Gretel". University of Pittsburgh.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கன்சலும்_கிரேடெலும்&oldid=3832708" இலிருந்து மீள்விக்கப்பட்டது