கதிர்வீச்சிலிருந்து பாதுகாப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கதிர்வீச்சிலிருந்து பாதுகாப்பு (Radiation protection) என்பது கதிரியல் துறையில் பணியாற்றுகிறவர்களையும் பொது மக்களையும் கதிர்வீச்சின் தீய விளைவுகளிலிருந்து பாதுகாத்தலைக் குறிக்கும். மிகவும் எளிய, அதிகம் செலவில்லாத முறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

  • தொலைவு: கதிர் மூலத்திலிருந்து முடிந்த அளவு தொலைவில் இருத்தல்.
  • நேரம்: செய்ய வேண்டிய பணியை விரைந்து செய்தல்.
  • காப்பரண்: காப்பரண்களைப் பயன்படுத்துதல்.

எதிர் இருமடி விதியின் காரணமாகத் தொலைவு கூடும் போது கதிர் ஏற்பளவினை வெகுவாக்க் குறைக்க முடியும். இருமடங்கு நேரம் ஏற்பளவினை இரட்டிப்பு ஆக்கும். காப்பரண் கதிர்களை ஏற்பதால், கதிர் ஏற்பளவும் குறைகிறது.

கதிர்வீச்சிலிருந்து நோயாளிகளைப் பாதுகாத்தல்[தொகு]

இது கதிரியல் துறையில் மிகவும் முக்கியமான ஒரு செயலாகும். கதிர்ப்பட ஆய்வினால் பொறப்படும் நன்மை அதனால் ஏற்படும் தீய விளைவுகளைவிட மிகவும் அதிகம். தேவையானபோது மட்டுமே இப்படிப்பட்ட கதிர்ப் படங்கள் எடுக்கப்படுகின்றன. இருப்பினும் எவ்வளவு குறைந்த அளவு கதிர்வீச்சினைக் குறைக்க முடியுமோ அவ்வளவு குறைக்க எல்லா முயற்சிகளும் மேற்கொள்ள வேண்டும். கீழ்காணும் முறைகள் பயன் அளிக்கும்.

  1. படம் எடுக்கும் போது தேவையான அளவு சிறிய கதிர் வீச்சுப் புலத்தினைப் பயன்படுத்த வேண்டும். இதற்காகக் கூம்புகளையும்(Cones) புலத்தேர்விகளையும் (Collimator) பயன்படுத்த வேண்டும். இது தேவையற்ற கதிர்வீச்சினை நோயாளிக்குக் கொடுப்பதிலிருந்து காப்பதுடன் எடுக்கப்படும் கதிர்ப்படமும் நன்றாகவும் தெளிவாகவும் அமைய உதவுகிறது. இதற்குக் காரணம் சிதறிய கதிர்கள் கட்டுப்படுத்தப்படுவது தான்.
  2. வேக வலுவூட்டும் திரைகளையும் (Fast screen ) படத்தாள்களையும் (Fast film) பயன்படுத்த வேண்டும்.
  3. குறைந்த ஆற்றலுள்ள எக்சு கதிர்களை அகற்ற போதுமான வடிகட்டிகள் (Filters) உபயோகிக்க வேண்டும். குறைந்த ஆற்றலுள்ள கதிர்கள் பெரும்பாலும் நோயாளியின் உடலில் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. கதிர்ப்படத்தினைப் பெறுவதில் அவைகளின் பங்களிப்பு இல்லை என்றே கூறலாம்.
  4. முடிந்த அளவு அதிக KvP யினைப் பயன் படுத்த வேண்டும். இதனால் நோயாளியின் தனிப்பட்ட கதிர் ஏற்பளவு குறைவாக இருக்கிறது.
  5. கதிர்வீச்சுப் புலத்தில் இல்லாத போதும் விந்துப்பை, சூல்பை மற்றும் அதிக கதிர் உணர்திறமுடைய உறுப்புகளை, காப்புத் தகடுகளினால் (Shield) பாதுகாக்க வேண்டும்.
  6. நோயாளியைச் சரியான நிலையில் இருத்திப் படம் எடுப்பதுடன் படத்தாளை மேம்படுத்துதல் (Developing) நிலைப்படுத்துதல் (fixing) போன்ற செயல்பாடுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இதுவும் மறுபடியும் படம் எடுக்க வேண்டிய நிலையினைத் தவிர்க்க உதவும்.

இவ்வாறு நோயாளியைத் தேவையற்ற கதிர்வீச்சிலிருந்து பாதுகாக்கலாம்.