கட்டுப்பாட்டுப் பொறியியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
விண்ணூர்தியில் கட்டுப்பாட்டுப் பொறியியல் பெரும் பங்கு வகிக்கிறது.

கட்டுப்பாட்டுப் பொறியியல், (Control Engineering) என்பது ஒரு பொருளின் இயக்கத்தை கட்டுப்பாட்டுக் கோட்பாட்டின் (Control Systems Theory) அடிப்படையில் வடிவமைப்பது. அடிப்படையில் பொருட்களின் மீது செயற்படும் ஒரு வினை அல்லது உள்ளீடு விளைவை உண்டாக்குகிறது, இவ்விளைவு அப்பொருளின் நிலைத்தன்மையை ஒருத்து அமைகிறது. அவ்வாறான விளைவு உணர்கருவியின் (Sensor) வாயிலாக பின்னூட்டமாக (Feedback) கட்டுப்பாட்டுப் பொறிக்கு (Control System) அனுப்பப்படுகிறது. கட்டுப்பாட்டுப் பொறி அவ்விளைவை தூண்டியின் (Actuator) மூலம் கட்டுப்படுத்துகிறது. இவ்வகை அமைப்பு மூடிய சுற்று கட்டுப்பாட்டு அமைப்பு என்றழைக்கப்படுகிறது. கட்டுப்பாட்டுப் பொறியியலின் முதற்நோக்கம் பொருளின் இயக்கத்தை நிலைத்தன்மை உடையதாக மாற்றுவது. இரு வேறு முரண்பட்ட குறிக்கோள்கள் கட்டுப்பாட்டில் உள்ளன.

  • செயலாக்கம் (Performance) - இது பொருளின் இயக்கம் அதன் நோக்கத்தை திறம்பட நிறைவு செய்வது.
  • உரன் உடைமை (Robustness) - இது ஒரு பொருளின் இயக்கத்தினூடே நேரும் இடையீடுகளை திறம்பட எதிர்கொள்வது.

இயக்கத்தை செயலாக்கத்தை சீரிய முறையில் கட்டுப்படுத்த கட்டுப்பாட்டுப் பொறியின் மிகைப்பு (Gain) அதிகம் தேவைப்படும். ஆனால் இயக்கத்தினூடே நேரும் இடையீடுகள் அதன் விளைவிலும் எதிரொலிப்பதால் அதிக செயலாக்கம் குறைந்த உரன் உடைமைக்கு இட்டுச் செல்கிறது.

வரலாறு[தொகு]

தானியங்கு கட்டுப்பாட்டு அமைப்புகள் முதன்முதலில் 2000 ஆண்டுகளுக்கு முன்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. 300 கி.மு, எகிப்திய அலக்சான்ட்டிரியாவில் உள்ள கெட்சிபையோசு நீர் ஆரம் தான் முதல் பதிவுசெய்யப்பட்ட வழிகாட்டல் கட்டுப்பாட்டு அமைப்பாக கருதப்படுகிறது. ஒரு கலனில் உள்ள நீரின் அளவை கட்டுப்படுத்தி நேரத்தை கணக்கிடுவதனால் கலனில் இருந்து நீர் செல்கிறது. இக்கருவி மிகவும் வெற்றிகரமானதாக இருந்தது. வேறு சில தானியங்கு அமைப்புகள் புழக்கத்தில் இருந்தாலும் 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டில்தான் மூடிய சுற்று மற்றும் திறந்த சுற்று கட்டுப்பாட்டு பிரபலம் அடையத் துவங்கின. முக்கியமாக 1691 ஆம் ஆண்டு டிரெப்பல் சிர்கா என்பவர் எரிகலன்களுக்காக உருவாக்கிய வெப்பநிலை சீராக்கியும், 1788ஆம் ஆண்டு ஜேம்ஸ் வாட் நீராவி இயந்திரத்திற்காக உருவாக்கிய பறக்கும் பந்து சீராக்கியும் தானியங்கு கட்டுப்பாட்டு அமைப்புகளின் வளர்ச்சிக்கு மைல்கற்களாக விளங்கின.