உள்ளடக்கத்துக்குச் செல்

ஓ. ஜே. சிம்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓ.ஜே. சிம்சன்

ஒரெந்தால் ஜேம்ஸ் "ஓ.ஜே." சிம்சன் (Orenthal James "O.J." Simpson, பிறப்பு: ஜூலை 9, 1947) முன்னாள் அமெரிக்கக் காற்பந்தாட்ட வீரர் ஆவார். காற்பந்தாட்டத்தில் ஓடும் பின் நிலையில் (running back) விளையாடி என்.சி.ஏ.ஏ.யிலும் என்.எஃப்.எல்.இலும் பல சாதனைகளை படைத்தார். தென் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் இரண்டு ஆண்டுகளாக விளையாடி ஹைஸ்மன் கிண்ணத்தை பெற்றார். பின்பு என்.எஃப்.எல். தேர்வில் முதல் இடமாக பஃபலோ பில்ஸ் அணியால் 1969இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். 10 ஆண்டுகளாக என்.எஃப்.எல்.-இல் விளையாடி 1985இல் அமெரிக்கக் காற்பந்தாட்டப் புகழவை இவரை உறுப்பினராக சேர்த்துக் கொண்டுள்ளது.

காற்பந்தாட்டம் விளையாடி முடிந்துவிட்டு ஓ.ஜே. சிம்சன் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். என்.எஃப்.எல். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நிபுணராக பணி புரிந்தார்.

1994இல் இவர் தனது முன்னாள் மனைவி நிகோல் ப்ரௌன் மற்றும் அவரது நண்பர் ரான் கோல்ட்மன் ஆகியோரைக் கொலை செய்தார் என்று லாஸ் ஏஞ்சலஸ் காவல்துறை சிம்சனை குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பான வழக்கு அமெரிக்க வரலாற்றிலேயே மிக கவனம் பெற்ற வழக்குகளில் ஒன்றாக இருந்தது. இந்த வழக்கு முழுவதும் தொலைக்காட்சி மூலமாக அமெரிக்கர்களால் பார்க்க முடிந்தது. அக்டோபர் 3, 1995 இந்த வழக்கின் நடுவர் குழு சிம்சன் குற்றமற்றவர் என்று தீர்ப்பளித்ததை அமெரிக்கர்களில் அரைப்பங்கினர் பார்த்தமை இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சி வரலாற்றிலேயே மிக அதிகமான மக்களால் பார்க்கப்பட்ட நிகழ்ச்சியானது. அமெரிக்காவின் வெள்ளை இன மக்கள் பெரும்பான்மையாக சிம்சன் குற்றவாளி என்று நம்பியிருந்தனர், ஆனால் கருப்பின மக்கள் பெரும்பான்மையாக ஓ.ஜே. குற்றவாளி இல்லை என்று நம்பியிருந்தனர். இந்த வழக்கின் செல்வாக்கு காரணமாக "நூற்றாண்டின் வழக்கு" (Trial of the Century) என அழைக்கப்பட்டது.

குற்றவியல் நீதிமன்றம் இவரை குற்றவாளி இல்லை என்று தீர்ப்பளித்ததற்கு பிறகு ரான் கோல்ட்மனின் குடும்பம் ஓ.ஜே. சிம்சனுக்கு எதிராக உரிமையியல் நீதி மன்றத்தில் வழக்கு நடத்தி வெற்றி பெற்றனர். இதனால் ஓ.ஜே. சிம்சன் $33.5 மில்லியன் டாலர் அளவில் தண்டம் கோல்ட்மன் குடும்பத்துக்கு கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

2007இல் சிம்சனும் சில கூட்டாளிகளும் லாஸ் வேகஸ் நகரில் ஒரு விளையாட்டுக் கடையில் நுழைந்து துப்பாக்கிகளை காட்டி பல விளையாட்டு நினைவுச் சின்னங்களை திருடியுள்ளனர். சிம்சனுடன் கொள்ளையில் ஈடுபட்ட அவரது அனைத்து கூட்டாளிகளும் சிறிய குற்றங்களை ஒத்துக் கொண்டு சிம்சனுக்கு எதிராக சான்று கூறியுள்ளனர். அக்டோபர் 2008 இல் சிம்சன் குற்றம் சாட்டப்பட்ட அனைத்து 12 குற்றங்களையும் செய்தார் என்று நடுவர் குழு தீர்ப்பு செய்துள்ளது. இதனால் ஆயுள் தண்டனையை பெறுவதை தவிர்க்கமுடியாததாக உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓ._ஜே._சிம்சன்&oldid=2905522" இலிருந்து மீள்விக்கப்பட்டது