ஒருசீர்த்திடநிலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒருசீர்த்திடநிலை என்பது உயிரின உடலின் அகச் சூழல் நியம நிலையில் பேணப்படுகின்றமையாகும். உடலின் வெப்பநிலை, குளுக்கோசுச் செறிவு, நீர்ச்செறிவு, அமில-கார pH அளவு ஆகியன நியமமாகப் பேணப்படுகின்றமை ஒருசீர்த்திடநிலை (Homeostasis) ஆகும். சுருக்கமாச் சொல்வதானால் உயிரினத்தின் உட்சூழல் வெளிச்சூழலைப் போலல்லாமல் மாறாது காணப்படுவதாகும்.

வெப்பக் குருதியுள்ள மனிதக் கையின் மேலுள்ள குளிர்நிலைக் குருதியுடைய தொரன்தூலா சிலந்தியின் வெப்பநிலைப் படம். தொரன்தூலச் சிலந்தியின் வெப்பநிலை இடத்துக்கிடம் மாறுபடுவதையும் மனிதக் கையின் வெப்பநிலை மாறாதிருப்பதையும் கவனிக்க

சில உயிரினங்கள் தமது உள்ளகச் சூழலை மாறாது பேணுபவை. சில வேறுபடும் வெளிச்சூழலுக்கேற்ப தம்மையும் மாற்றிக் கொள்வனவாகும். உதாரணமாக வெப்பநிலை ஒருசீர்த்திடநிலையை சில உயிரினங்களே கடைப்பிடிக்கின்றன. பாலூட்டிகளும் பறவைகளும் தம் உடல் வெப்பநிலையை மாறாது பேணும். ஆனால் கிட்டத்தட்ட ஏனைய அனைத்து உயிரினங்களும் வெளிச் சூழலுக்கேற்ப தம்மை மாற்றிக்கொள்ளும். இரண்டு முறைகளிலும் நன்மைகள் மற்றும் தீமைகளும் காணப்படுகின்றன. பாலூட்டிகளும் பறவைகளும் ஹோர்மோன்கள் மூலமும் நரம்பு மண்டலம் மூலமும் தன்னியக்கமாக தம்முள் நொதியங்கள் சிறப்பாகச் செயற்படும் சூழலை உருவாக்கும். இச்செயற்பாடு எப்போதும் சக்தி இழக்கப்படும் செயற்பாடாகும். மற்றையவை தம் செயற்பாட்டு மாற்றங்கள் மூலம் வெப்பத்தை சீராக்கும். உதாரணமாக உடும்பு போன்ற ஊர்வன சூரிய வெப்பத்தில் தம்மை வெப்பமாக்கின்றன.

பாலூட்டி இன விலங்குகள் குருதி குளுக்கோசுச் செறிவை இன்சுலின் மற்றும் குளூக்கொகான் மூலம் சீராக்குகின்றன. 24 மணிநேர விரதத்தின் போதும் ஒரு சுகாதாரமான மனிதனின் குருதி குளுக்கோசுச் செறிவு மாறாமல் காணப்படுவதற்கு குளுக்கோசு ஒருசீர்த்திடநிலையே காரணமாகும். இன்சுலின் ஹோர்மோனின் குறைபாடே நீரிழிவு நோயை ஏற்படுத்துகின்றது. மனித குருதியின் pH அளவும் மாறாமல் 7.365 அளவில் பேணப்படுகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒருசீர்த்திடநிலை&oldid=2745984" இலிருந்து மீள்விக்கப்பட்டது