ஐரீன் சேவியர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐரீன் சேவியர்
Irene Xavier
பிறப்புபாட்ரிசியா லூர்து ஐரீன்
Patricia Lourdes Irene

திசம்பர் 17, 1951 (1951-12-17) (அகவை 72)
தேசியம் மலேசியா
பணிசமூக இயக்க செயல்பாட்டாளர்
அறியப்படுவதுதொழிலாளர் இயக்கம்; பெண்ணியம்

ஐரீன் சேவியர் (ஆங்கிலம்: Patricia Lourdes Irene; மலாய்: Irene Xavier; சீனம்: 艾琳·萨维尔) (பிறப்பு: 17 டிசம்பர் 1951) என்பவர் மலேசியாவில் சுவாராம் (Suaram) எனும் முன்னணி மனித உரிமை அமைப்பின் செயற்பாட்டாளர்; பெண்கள் உரிமை ஆர்வலர்; மலேசியாவில் நன்கு அறியப்பட்ட பெண்ணியவாதியாகும்.

மலேசியாவின் பெண்களின் உரிமைகள் அமைப்பான (ஆங்கிலம்: Friends of Women, Selangor; மலாய்: Persatuan Sahabat Wanita Selangor) (PSWS) சிலாங்கூர் பெண்களின் நண்பர்கள் அமைப்பின் தலைவரும் ஆவார்.

1987-ஆம் ஆண்டு லாலாங் நடவடிக்கையில் (Operation Lalang) மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் 1960 (Internal Security Act 1960) தேச நிந்தனையின் கீழ் (Sedition Act) கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டவர்; கமுந்திங் தடுப்பு மையத்தில் (Kamunting Detention Centre) 355 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டவர்.[1]

சொந்த வாழ்க்கை[தொகு]

டிசம்பர் 17, 1951-இல் மலேசியாவின் பேராக் மாநிலத்தில் பிறந்தார். இவரின் அசல் பெயர் பாட்ரிசியா லூர்து ஐரீன் (Patricia Lourdes Irene). பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது 1971-ஆம் ஆண்டு பல்கலைக்கழகச் சட்டத்திற்கு (1971 Universities Act) எதிரான போராட்டங்களில் பங்கேற்றார்.

பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பிறகு, தொழிலாளர் இயக்கங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களுக்காகவும்; பெண் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும் போராடினார்.

குறைந்தபட்ச ஊதியத்தை சட்டமாக்குதல்[தொகு]

பெண்கள் உரிமை அமைப்புகள் மூலம், பெண் தொழிலாளர்களுக்கு அவர்களின் சொந்த சூழ்நிலையைப் புரிந்து கொள்ளக் கற்றுக் கொடுப்பது; தொழிலாளர் சங்கங்களை உருவாக்க ஊக்குவிப்பது; நிர்வாகத்தினரிடம் இருந்து சிறந்த பலன்களைப் பெறுக் கொடுப்பது; வீட்டுப் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை சட்டமாக்குமாவது போன்றவற்றை அரசாங்கத்திடம் முன்வைத்தார்.[2]

பொது[தொகு]

மலேசிய சமூக ஆர்வலரான ஐரீன் சேவியர், பெண்களின் உரிமைகள் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகளில் அக்கறை கொண்டவர். மேலும் உரிமைகளுக்காகப் போராடும் பிற இயக்கங்களின் செயல்பாடுகளிலும் ஈடுபட்டுள்ளார். பெண்கள் உதவிக் கழகம் (Women’s Aid Organisation - WAO) எனும் அமைப்பிலும் பங்கு வகிக்கின்றார்.

மலேசியத் தொழிலாளர்களுக்கு நியாயமான முறையில் ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று மலேசியாவில் ஒழுக்கமான ஊதியம் (Malaysia for Decent Living Wage)எனும் அமைப்பையும் தோற்றுவித்தார்.

சிறை வாழ்க்கை[தொகு]

கமுந்திங் தடுப்பு மையத்தில் (Kamunting Detention Centre) 355 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு இருந்த போது, ஐரீன் ஒரு பெண் உரிமை ஆர்வலராகப் பணிபுரிந்ததால் குறிவைக்கப் பட்டதாகவும்; தடுத்து வைக்கப்பட்ட முதல் 60 நாட்களில், தான் தாக்கப் பட்டதாகவும்; அவமானப்படுத்தப் பட்டதாகவும்; மனரீதியாகக் கொடுமை செய்யப் பட்டதாகவும் அறியப் படுத்தினார்.[3]

கமுந்திங் தடுப்பு மையம், பேராக் தைப்பிங் நகருக்கு அருகில் கமுந்திங் எனும் புறநகர்ப் பகுதியில் அமைந்து உள்ளது. இந்தத் தடுப்பு மையத்தை மலேசியாவின் குவாந்தானாமோ எனும் அடைமொழியுடன் அழைப்பதும் உண்டு.[4]

2001-ஆம் ஆண்டில், மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மனித உரிமை ஆர்வலர்களை அரசாங்கம் கைது செய்ததை எதிர்த்து அவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

மேற்கோள்[தொகு]

  1. "Irene Xavier: In 1987 she was detained under the Internal Security Act (ISA) for 355 days. Alison Thorne spoke to Irene about the campaign against the ISA at the Freedom Socialist Party's May Day Celebrations". Freedom Socialist Party. பார்க்கப்பட்ட நாள் 24 April 2023.
  2. Mavic Cabrera Balleza. "Fighting an Uphill Battle: One on One with Irene Xavier, president of Sahabat Wanita". Women in Action. Archived from the original on 2018-04-16. பார்க்கப்பட்ட நாள் 2011-08-07.
  3. "In the first 60 days of incomunicado detention, she claimed that she was beaten, humiliated and mentally abused". prabook.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 24 April 2023.
  4. "Police arrest Malaysian activist". Al Jazeera. 29 November 2007. https://www.aljazeera.com/news/2007/11/29/police-arrest-malaysian-activist. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐரீன்_சேவியர்&oldid=3700619" இலிருந்து மீள்விக்கப்பட்டது