உள்ளடக்கத்துக்குச் செல்

ஏர்மன் மெல்வில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏர்மன் மெல்வில்
ஏர்மன் மெல்வில், 1870
ஏர்மன் மெல்வில், 1870
பிறப்பு(1819-08-01)ஆகத்து 1, 1819
நியூயார்க் நகரம், நியூயார்க், ஐக்கிய அமெரிக்கா.
இறப்புசெப்டம்பர் 28, 1891(1891-09-28) (அகவை 72)
நியூயார்க் நகரம், நியூயார்க், ஐக்கிய அமெரிக்கா.
தொழில்புதின எழுத்தாளர், சிறுகதை எழுத்தாளர், ஆசிரியர், மாலுமி, விரிவுரையாளர், கவிஞர், சுங்கக் கண்காணிப்பாளர்
தேசியம்அமெரிக்கர்
வகைபயண இலக்கியம், கைதி கதைகூறல், கடல் கதைகள், கோதியப் புனைவியம், உருவகம், புழுகுக் கதை
இலக்கிய இயக்கம்புனைவியம், ஐயவாதம்; புதுமவிய முன்னோடி, அபத்தவாத முன்னோடி, இருப்பியல்வாதம்
கையொப்பம்

ஏர்மன் மெல்வில் (ஹெர்மன் மெல்வில், Herman Melville, ஆகத்து 1, 1819 – செப்டெம்பர் 28, 1891, ) ஒரு அமெரிக்க புதின எழுத்தாளரும், கட்டுரையாளரும், கவிஞரும் ஆவார். மொபி-டிக் என்னும் புதினம் எழுதியதன் மூலம் அவர் பெரும் புகழ் பெற்றார். இவரது முதல் மூன்று நூல்கள் சமகாலத்தில் புகழ் பெற்றன. 1840களில் விரைவாக ஏற்பட்ட இவரது இலக்கிய வெற்றிகளைத் தொடர்ந்து 1850 களின் நடுப் பகுதியில் இவரது புகழ் குறையத் தொடங்கியது. இந்த வீழ்ச்சியில் இருந்து அவரது வாழ்க்கைக் காலத்தில் அவர் மீளவே இல்லை. 1891 ஆம் ஆண்டில் மெல்வில் இறந்தபோது அவரைப் பலரும் முற்றாகவே மறந்துவிட்டிருந்தனர். 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் "மெல்வில் மறுமலர்ச்சி" ஏற்பட்டபோது மீண்டும் அவரது படைப்புக்களுக்கு மதிப்புக் கிடைத்தது. சிறப்பாக மொபி-டிக் அமெரிக்க இலக்கியத்தினதும், உலக இலக்கியத்தினதும் தலைசிறந்த படைப்புக்களுள் ஒன்றாகப் புகழப் பெற்றது. அமெரிக்க நூலகம் முதன் முதலாகத் தொகுத்து வெளியிட்டது இவரது ஆக்கங்களையே ஆகும்.[1][2][3]

வாழ்க்கை வரலாறு[தொகு]

இளமைக் காலம்[தொகு]

ஏர்மன் மெல்வில் நியூ யார்க் நகரத்தில் 1819 ஆம் ஆண்டு ஆகத்து 1 ஆம் தேதி பிறந்தார். இவர் அலன், மரியா தம்பதியினரின் எட்டுப் பிள்ளைகளுள் மூன்றாமவர். இவரது தந்தை பொசுட்டனைச் சேர்ந்த, மிகவும் நல்ல நிலையில் இருந்த குடும்பம் ஒன்றைச் சேர்ந்தவர். பிரான்சு நாட்டிலிருந்து உலர் பொருட்களை இறக்குமதி செய்யும் வணிகத்தில் ஈடுபட்டிருந்தார். ஏர்மன் மெல்வில்லின் பாட்டனார் மேஜர் தாமசு மெல்வில், பெயர் பெற்ற "பொசுட்டன் தேனீர் விருந்தில்" கலந்து கொள்ளும் வாய்ப்புப் பெற்றவர். ஏர்மனின் தாய் வழியினர் அட்சன் வலி ஒல்லாந்து நாட்டவர். தாய்வழிப் பாட்டன் பீட்டர் கான்செவூர்ட் சரத்தோகா சண்டையில் பங்குபற்றியவர். தனது இரட்டைப் புரட்சியாளர் வம்சாவளி குறித்து ஏர்மன் திருப்தி கொண்டிருந்தார்.

ஏர்மன் முதலில் நியூயார்க் ஆண்கள் பள்ளியில் கல்வி பயின்றார். வணிகத்தில் பணப் பிரச்சினைகள் ஏற்பட்டு மனதளவில் பாதிக்கப்பட்ட அவரது தந்தையார் வணிகத்தில் ஏற்பட்ட பின்னடைவுகளில் இருந்து மீள்வதற்காக 1830 ஆம் ஆண்டில் குடும்பத்துடன் அல்பனிக்கு இடம் பெயர்ந்தார். அங்கே மென்மயிர் வணிகத்தில் ஈடுபட்ட அவருக்குப் புதிய முயற்சியும் வெற்றியாக அமையவில்லை. 1812 ஆம் ஆண்டுப் போர் வெளிநாட்டு வணிகத்தை சீரழித்ததால் அவர் நொடிப்பு நிலை (bankruptcy) எய்தினார். ஏர்மனுக்கு 12 வயதான போது அவரது தந்தையார் காலமானார். குடும்பம் பண வசதியின்றித் தத்தளித்தது. ஏர்மனின் தாய் வழியினர் நல்ல நிலையில் இருந்தும் அவர்களிடம் இருந்து எவ்வித உதவியும் கிடைக்கவில்லை.

ஏர்மன் அக்டோபர் 1830 முதல் அக்டோபர் 1831 வரையும் பின்னர் அக்டோபர் 1836 முதல் மார்ச் 1837 வரையும் அல்பனி அக்கடமியில் செந்நெறி இலக்கியம் பயின்றார்.

தொழில்[தொகு]

ஏர்மன் மெல்வில், c. 1846-47.

இடத்துக்கிடம் செல்வதில் இருந்த விருப்பினாலும், குடும்பத்தினரின் உதவியின்றிச் சொந்தக்காலில் நிற்க விரும்பியதாலும் ஏர்மன் நில அளவைப் பணியில் சேர்ந்தார். ஆனால், இப்பணியில் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. பின்னர் இவரது உடன்பிறந்தார் இவரை லிவர்பூலுக்குச் செல்லும் நியூயார்க்கைச் சேர்ந்த கப்பல் ஒன்றில் பணிக்குச் சேர்த்துவிட்டார். இக்கப்பலில் லிவர்பூலுக்குச் சென்று அதே கப்பலிலேயே திரும்பிவந்தார். 1839ல் லிவர்பூல் சென்று வந்தது தவிர 1837 தொடக்கம் 1840 வரையான 3 ஆண்டுக் காலத்தில் பெரும் பகுதி ஆசிரியப் பள்ளியில் செலவழிந்தது. 1840 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் மீண்டும் கப்பலில் பயிற்சி மாணவனாகச் சேர்வதற்கு முடிவு செய்த ஏர்மன், 1841 சனவரி 3 ஆம் தேதி மசசூச்செட்சின் பெட்போர்டில் இருந்து பசிபிக் பெருங்கடலுக்குச் சென்ற திமிங்கில வேட்டைக் கப்பலான அக்கூசுநெட்டில் பயணமானார். தனது வாழ்க்கை அந்த நாளிலேயே தொடங்கியதாகப் பின்னாளில் ஏர்மர் கூறினார். அவரது இந்த 18 மாத வாழ்க்கை குறித்த நேரடி விவரங்கள் எதையும் ஏர்மன் விட்டுச் செல்லவில்லை எனினும், இவரது ஆக்கங்களான மொபி-டிக், த உவேல் (திமிங்கிலம்) என்னும் இரண்டிலும் இக்கப்பல் பயண வாழ்வின் பல அம்சங்கள் இருக்கக்கூடும்.

1842 சூலையில் மார்க்கெசாசுத் தீவில் கப்பலில் இருந்து சொல்லிக் கொள்ளாமல் வெளியேறிய மெல்வில், மூன்று கிழமைகள் "டைப்பீ" (Typee) என்னும் தாயக இனத்தவர் மத்தியில் வாழ்ந்தார். அத்தீவில் வாழும் ஏனைய இரண்டு இனக்குழுக்களினால் மனித இறைச்சி உண்பவர்களாக "டைப்பீக்கள்" கருதப்பட்டாலும், ஏர்மனை அவர்கள் நன்றாகவே நடத்தினர். ஏர்மன் மெல்விலின் முதல் புதினமான "டைப்பீ" அவ்வினத்தைச் சேர்ந்த அழகிய இளம் பெண்ணொருத்தி உடனான குறுகியகாலக் காதல் பற்றிக் கூறுகிறது.

"அக்கூசுநெட்" கப்பலில் இருந்து வெளியேறியது தொடர்பில் ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றிச் சிந்திக்காத ஏர்மன் மெல்வில், அவாய்க்குச் செல்லும் இன்னொரு திமிங்கில வேட்டைக் கப்பலில் ஏறி ஒனலூலுவில் அக்கப்பலை விட்டு வெளியேறினார். ஒனலூலுவில் இருக்கும்போது தாயக மக்களை மதம் மாற்ற முயன்ற கிறித்தவ சபையினரின் நடவடிக்கைகளைத் தீவிரமாக எதிர்த்ததனால் இவர் ஒரு சர்ச்சைக்கு உரியவராக விளங்கினார். நான்கு மாதங்கள் அங்கே எழுத்தராகப் பணிபுரிந்த ஏர்மன் "யூ.எசு.எசு. யுனைட்டட் இசுடேட்ட்" என்னும் கப்பலில் பணியாளராக இணைந்து 1844 ஆம் ஆண்டு பொசுட்டனை அடைந்தார். இந்த அநுபவங்களை ஏர்மன், "டைப்பீ", "ஓமோ", "வைட் ஜாக்கெட்" என்னும் பெயர்களில் புதினங்களாக எழுதி வெளியிட்டார்.

1845 ஆம் ஆண்டு கோடை காலத்தில் ஏர்மன் மெல்வில் "டைப்பீ"யை எழுதி முடித்தார். எனினும், அதனை வெளியிடுவதில் பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டி இருந்தது. இறுதியாக இது 1846ல் இலண்டனில் வெளியானபோது ஒரே நாளில் விற்பனையில் சாதனை படைத்தது. இதைத் தொடர்ந்து பொசுட்டனைச் சேர்ந்த வெளியீட்டாளர் "ஓமோ" என்னும் புதினத்தை வெளியிடச் சம்மதித்தார். இவ்விரு புதினங்களும் ஏர்மனை ஒரு எழுத்தாளராகவும் சாகசச் செயல்களில் ஈடுபடுபவராகவும் இனங்காட்டிப் புழைத் தேடிக் கொடுத்தன. எனினும் இவை ஏர்மனுக்குப் போதிய வருமானத்தைக் கொடுக்கவில்லை. "ரெட்பர்ன்", "வைட் ஜாக்கட்" ஆகிய புதினங்களை வெளியிடுவதில் இவருக்குப் பிரச்சினைகள் எதுவும் இருக்கவில்லை. எனினும் "மார்டி" என்னும் புதினம் வாசகர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தது.

திருமணமும் பிற்காலத் தொழிலும்[தொகு]

மசச்சூசெட்சு, பிட்சுபீல்டில் ஏர்மன் மெல்வில் வாழ்ந்த "அரோஹெட்" என்னும் பண்ணை வீடு

மெல்வில், மசசூச்செட்சு உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த லெமுவேல் சோ என்பவரின் மகளான "எலிசபெத் சோ"வை (Elizabeth Shaw) 1847 ஆகத்து 4 ஆம் தேதி மணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு ஆண்களும், இரண்டு பெண்களுமாக நான்கு பிள்ளைகள் பிறந்தனர். 1850 ஆம் ஆண்டில் மசச்சூச்செட்சின் பிட்சுபீல்டில் உள்ள "அரோஹெட்" என்னும் பண்ணை வீட்டை வாங்கினர். இது இப்போது அருங்காட்சியகமாக உள்ளது. ஏர்மன் மெல்வில் தனது எழுத்து வேலைகளையும், பண்ணையையும் கவனித்துக்கொண்டு இங்கே 13 ஆண்டுகள் வாழ்ந்தார். இங்கே வாழ்ந்த காலத்தில், அருகில் இருந்த லெனொக்சு என்னும் இடத்தில் வாழ்ந்த எழுத்தாளரான நத்தானியேல் ஹோதோர்ன் என்பவரின் நட்பையும் பெற்றார். இக்காலத்தில் ஏர்மன் எழுதிய "மொபி-டிக்" என்னும் புதினத்தை ஏர்மன் சொல்ல நத்தானியேலே எழுதினார். எனினும் சில நாட்களில் ஏர்மன் "பியரே" என்னும் புதினத்தை எழுதிக்கொண்டிருந்தபோது, அவர்களது நட்பு இறங்குமுகமாக இருந்தது. ஏர்மன் எழுதிய "மொபி-டிக்", "பியரே" ஆகிய இரு புதினங்களும் மக்களிடமோ திறனாய்வாளரிடமோ போதிய வரவேற்பைப் பெறவில்லை.

பிற்காலம்[தொகு]

மெல்வில் பல ஆண்டுகளைச் செலவிட்டு "கிளாரெல்" என்னும் 16,000 அடிகளைக் கொண்ட காவியம் ஒன்றை எழுதினார். இவரது தாயின் உடன்பிறந்தாரான பீட்டர் கான்சேவூர்ட் அளித்த கொடை மூலம் இந்தக் காவியம் 1867 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. ஆனாலும் இது படு மோசமாகத் தோல்வியைத் தழுவியது. விற்பனையாகாத இந்நூலின் படிகள் தீயிட்டுக் கொழுத்தப்பட்டன.

ஏர்மனது எழுத்துத் தொழில் இறங்குமுகமாகச் சென்று கொண்டிருந்தபோது, இவரது திருமண உறவும் சிக்கலான நிலையில் இருந்தது. இவரது மனைவி எலிசபெத்தின் உறவினர்கள் ஏர்மனை விட்டு விலகி விடுமாறு வற்புறுத்தி வந்தனர். ஆனாலும் எலிசபெத் இதற்கு இணங்கவில்லை. 1867ல், ஏர்மனின் மூத்த மகன் தவறுதலாகவோ என்னவோ தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்தார். ஏர்மனைக் குடிப்பழக்கத்தில் இருந்து விடுவிக்கும் எலிசபெத்தின் முயற்சி ஓரளவு வெற்றி பெற்றது. அவரது வெறித்தனம் குறைந்ததுடன், மனநிலையும் சீராகி வந்தது. ஆனால், அவர்களது இரண்டாவது மகன் இசுட்டான்விக்சு, 1886 ஆம் ஆண்டு சான் பிரான்சிசுக்கோவில் இறந்தபோது ஏர்மனுக்கு மன அழுத்தங்கள் கூடின. அவரது மனைவியின் உறவினர்கள் பலர் இறந்தபோது ஏர்மனின் மனைவிக்குச் சொத்துக்கள் சில கிடைத்தன. அவற்றைத் திறமையாக நிர்வாகம் செய்து நல்ல வருமானம் பெற்றபோது ஏர்மன் மெல்வில் எழுதுவதில் இருந்து ஓய்வு பெற்றுக்கொண்டார்.

ஏர்மன் மெல்வில், 1891 ஆம் ஆண்டு செப்டெம்பர் 28 ஆம் தேதி, தனது 72 ஆவது வயதில், நியூயார்க்கில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. During the week of his death, the New York Times wrote: "There has died and been buried in this city...a man who is so little known, even by name, to the generation now in the vigor of life that only one newspaper contained an obituary account of him, and this was but of three or four lines.", Poets.org, About Herman Melville, https://poets.org/poet/herman-melville, retrieved 14 July 2023
  2. Genealogical chart in (Parker 2002, ப. 926–929)
  3. Reprinted in (Branch 1974, ப. 67–68)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏர்மன்_மெல்வில்&oldid=3889536" இலிருந்து மீள்விக்கப்பட்டது