எளிய வாழ்முறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எளிய வாழ்முறை என்பது உணவு, உடை, உறையுள், ஈடுபாடுகள் என வாழ்வியலின் பல்வேறு தளங்களிலும் எளிமையைக் கடைப்பிடித்து வாழ்வதாகும். பலருக்கு எளிய வாழ்முறை பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட ஒரு கட்டாயம். பிறர் எளிய வாழ்முறையைத் தமது அமைதியான, மகிழ்ச்சியான பயன்மிக்க வாழ்வுக்கு ஏற்ற வாழ்முறையாகத் தேர்ந்தெடுக்கின்றனர்.

எளிய வாழ்முறைக் கோட்பாடு எங்கு தோன்றியது என்று குறிப்பிட்டு கூறுவது கடினம். இந்திய சமயங்களில் எளிய வாழ்முறை ஆசையில் இருந்தும் மாயையில் இருந்தும் விடுதலை பெறுவதற்கான ஒரு வழியாக பார்க்கப்பட்டது. சித்தர்கள், துறவிகள் போன்ற சிலர் எளிய வாழ்க்கை முறையை இளமையிலேயே ஏற்றுக்கொண்டனர். மேலும், இது ஒவ்வொரு மனிதனும் ஒரு கட்டத்தில் ஏற்கத் தகுந்த வாழ்வு முறையாகவும் பரிந்துரைக்கப்பட்டது. ஒரு மனிதனின் வாழ்க்கைக் கட்டங்கள் மாணவனாக, வீட்டுத் தலைவனாக, ஓய்வு பெற்றவனாக, முற்றும் துறந்தவனாக (Ascetic) பிரிக்கப்படுகிறது. பௌத்தம், சமணம், கிறித்தவ சமயங்களின் துறவிகள் ஆகியோரும் எளிய வாழ்முறையைப் பின்பற்றுகின்றார்கள்.

எளிய வாழ்முறை ஐக்கிய அமெரிக்கா போன்ற பொருளாதார வளம் மிக்க நாடுகளிலும் சிறுபான்மையினரால் விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக வேகமான பொருளாதார வளர்ச்சியின் சூழலியல் விளைவுகள் பாரதூரமாக வெளிப்படும் இந்தக் காலகட்டத்தில் மேலும் மேலும் பலர் எளிய வாழ்முறையைத் தேர்வு செய்கின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எளிய_வாழ்முறை&oldid=2774842" இலிருந்து மீள்விக்கப்பட்டது