எலும்பு வங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எலும்பு வங்கி என்பது நேர்ச்சி, கிருமித்தொற்று, புற்றுநோய் போன்றவற்றின் காரணமாக எலும்புகள் கடுமையாகப் பாதிக்கப்படும்போது, பாதிக்கப்பட்ட எலும்பை எடுத்துவிட்டு, அங்கு மாற்றாக உண்மையான எலும்பைப் பொருத்துவது, எலும்பு மாற்றுச் சிகிச்சை ஆகும். இதற்காக இறந்தவர்கள், மூளைச்சாவு ஏற்பட்டவர்கள் சிலசமயம் உயிரோடு இருப்பவர்களிடமிருந்தும் எலும்பைப் பெற்று, முறைப்படிப் பாதுகாத்து, எலும்பு மாற்றுச் சிகிச்சை தேவைப்படுபவர்களுக்குக் கொடுப்பதற்காக உருவாக்கப்பட்டதே எலும்பு வங்கி.

இந்தியாவில் எலும்பு வங்கி[தொகு]

1988 ஆண்டு இந்தியாவின் முதல் எலும்பு வங்கி மும்பை டாடா நினைவு மருத்துவமனையில் துவக்கப்பட்டது, அதைத் தொடர்ந்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் துவக்கப்பட்டது. தமிழகத்தில் முதன்முதலில் கோவை கங்கா மருத்துவமனையில் எலும்பு வங்கி தொடங்கப்பட்டது. சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் எலும்பு வங்கியை துவக்குவதற்கான ஏற்பாடுகள் நடந்துவருகின்றன.[1]

சேமிக்கும் முறை[தொகு]

எலும்புகளை. மிகவும் எளிதான வழியில், குறைந்த செலவில் சேமிக்க முடியும். மூளைச்சாவு ஏற்பட்டவரிடமிருந்து பெறப்பட்ட எலும்பை ஆல்ககாலில் கழுவிச் சுத்தப்படுத்தி, அதில் எய்ட்ஸ், மஞ்சள் காமாலை போன்ற கிருமிகள் இல்லை என்பது உறுதிப்படுத்தி, மைனஸ் 80 டிகிரி செல்சியஸில், குளிர்சாதனப் பெட்டியில் பல ஆண்டுகள் பாதுகாக்கப்படுகிறது. எலும்புகளை காமா கதிர்கள் கொண்டு தொற்றுநீக்கம் செய்து பாதுகாப்பதும் முறையும் உண்டு.

பொதுவாக இறந்தவரின் உடலிலிருந்து 12 மணி நேரத்துக்குள் எலும்பைப் பெற்றுக்கொள்வர். உயிரோடு இருப்பவரிடமிருந்தும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும்போது சேதமடைந்த எலும்பை நீக்கும்போது அந்த எலும்புகளை சேமிப்பது உண்டு. அதாவது இடுப்பு மாற்றுச் சிகிச்சை மேற்கொள்ளப்படும்போது, அங்குள்ள பந்துக்கிண்ண மூட்டு எலும்பைச் சேமித்து, அடுத்தவர்களுக்குப் பயன்படுத்துவதுண்டு. மார்புக்கு அருகிலுள்ள முதுகெலும்பு அறுவைச் சிகிச்சையின்போது விலா எலும்புகளைவெட்டி எடுப்பது நடைமுறை. இந்த எலும்புகளையும் பாதுகாத்துப் பின்னாளில் மற்றவர்களுக்குப் பயன்படுத்த முடியும். நேர்ச்சியின் போது கை, கால்கள் துண்டாகி தசைகள் நசுங்கிவிட்டால், அவற்றின் எலும்புகளை இம்மாதிரி சேமித்துப் பயன்படுத்த முடியும்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தோல், எலும்பு வங்கி: தென் மாநிலங்களுக்கான பிரத்யேக மையம்". தினமலர். 14 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 7 சூலை 2016.
  2. கு.கணேசன் (7 சூலை 2016). "எலும்பு வங்கிகளை வளர்த்தெடுப்போம்!". தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 7 சூலை 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எலும்பு_வங்கி&oldid=3576757" இலிருந்து மீள்விக்கப்பட்டது