எரடோசுதெனீசு
எரடோசுதெனீசு (Ἐρατοσθένης) | |
---|---|
எரடோசுதெனீசு | |
பிறப்பு | கிமு 276 சைரீன், லிபியா |
இறப்பு | கிமு 194 அலெக்சாந்திரியா |
இனம் | கிரேக்கர் |
பணி | கணிதவியலாளர், நூலகர், கவிஞர் மற்றும் கண்டுபிடிப்பாளர் |
எரடோசுதெனீசு (Eratosthenes of Cyrene, கி.மு.276–கி.மு.194) கிறித்துவிற்கு முந்தைய மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க கணிதவியலாளரும், புவியியலாளரும் வானியலாளரும் ஆவார். கி.மு. 240ஆம் ஆண்டிலிருந்து அவரது மரணம் வரை, தொன்மைக்கால உலகின் மிக முதன்மையான நூலகமாக விளங்கிய அலெக்சாண்டிரியா நூலகத்தின் தலைவராக இருந்தார்.
10ஆவது நூற்றாண்டில் நடுநிலக் கடல் பகுதியில் விளங்கிய பைசாந்தியப் பேரரசின் கலைக்களஞ்சியமான சூடாவின்படி, உலகின் எந்தத் துறையிலும் இவர் இரண்டாவது சிறப்பு மிக்கவராக விளங்கியமையால் இவரை உடன்சகாக்கள் பீட்டா (கிரேக்க அரிச்சுவடியில் இரண்டாம் எழுத்து) என செல்லப் பெயரிட்டிருந்ததாகத் தெரிகிறது.[1] அலெக்சாண்டிரியாவில் அதே காலத்தில் வாழ்ந்திருந்த ஆர்க்கிமிடீசின் நண்பராகவும் விளங்கினார்.
எரடோசுதெனீசுவின் எழுத்துக்கள் நேரடியாகக் கிடைக்கவில்லை: அலெக்சாண்டிரியாவின் ஒப்பற்ற அந்த நூலகம் அழிந்து ஒரு படி கூட கிடைக்கவில்லை. பின்னாளில் இசுடிராபோ (~63கிமு–24கிபி) புவியியலைப் பற்றி எழுதியபோது புவியை அளப்பது குறித்து (On the measurement of the Earth) என்ற நூலையும் ஜியாக்ரபிக்கா என்ற புவியியல் குறித்த நூலையும் எரடோசுதெனீசு எழுதியதாகக் குறிப்பிட்டுள்ளார். எரடோசுதெனீசு புவியியல் குறித்த தனித்துறைக்குத் தந்தை என அறியப்படுகிறார்.
புவியின் சுற்றளவை துல்லியமாக முதன்முதலில் கணக்கிட்டவர் இவரே. மேலும் நிலநேர்க்கோடு மற்றும் நிலநிரைக்கோடு கோட்பாடுகளை அறிமுகப்படுத்தினார். புவியின் அச்சு சாய்வைத் துல்லியமாகக் கணக்கிட்டவரும் இவராவார். புவியிலிருந்து சூரியனுக்கான தொலைவைக் கணக்கிட்டிருப்பார் என நம்பப்படுகிறது. பெப்ரவரி 29ஐ கண்டறிந்தவரும் எரடோசுதெனீசாவார்.[2] உலகின் நிலப்படம் ஒன்றை அப்போதிருந்த தகவல்களைக் கொண்டு உருவாக்கினார். அறிவியல்பூர்வ நாட்குறிப்புகளை அறிமுகப்படுத்தினார்; டிராய் கைப்பற்றலில் இருந்து முதன்மையான அரசியல் மற்றும் இலக்கிய நிகழ்வுகளுக்கான நாள்களை குறிக்க எண்ணினார்.
புவியின் சுற்றளவைக் கண்டறிதல்
[தொகு]எரடோசுதெனீசு எகிப்தை விட்டு விலகாமலே புவியின் சுற்றளவை அளந்தார். வேனில்கால கதிர்த்திருப்பத்தின்போது தற்போது அசுவான் என அறியப்படுகின்ற கடக ரேகையில் அமைந்துள்ள நகரில் நடுப்பகலின்போது சூரியன் தலைக்கு நேராக உச்சத்தில் இருக்கும் என்பதை அறிந்திருந்தார். மேலும் தனது அளவைகளால் அதே நேரத்தில் அலெக்சாந்திரியாவில், சூரியனின் உயரக்கோணம் உச்சத்தின் தெற்கே முழு வட்டத்தின் 1/50 ஆக (7°12') இருக்கும் என்பதையும் கணக்கிட்டிருந்தார். சைனிலிருந்து அலெக்சாண்டிரியா நேர்வடக்கில் இருப்பதாக யூகித்து அலெக்சாண்டிரியாவிற்கும் செய்னிற்கும் இடையேயான தொலைவு புவியின் புறச்சுற்றளவில் 1/50 ஆக இருக்கும் எனத் தீர்மானித்தார். இரு நகரங்களுக்கும் இடையேயான தொலைவை 5000 இசுடாடியாக்களாக (ஏறத்தாழ 500 புவிசார் மைல்கள் அல்லது 800 கிமீ) மதிப்பிட்டு ஒரு பாகைக்கு 700 இசுடாடியா தொலைவு எனக் கணக்கிட்டார். இதன்படி உலகின் சுற்றளவை 252,000 இசுடாடியாவாக தீர்மானித்தார். இவர் ஒரு இசுடாடியாவிற்கு வழங்கிய மதிப்பு அடிக்கடி விவாதித்திற்கு உள்ளானாலும் பொதுவாக தற்போதைய இசுடாடியா 185மீ உள்ளதாகக் கொண்டால் புவியின் சுற்றளவு 46,620 கிமீ ஆகிறது; இது உண்மையில் உள்ளதைவிட 16.3% கூடுதலாகும். இருப்பினும், எரடோசுதெனீசு காலத்து "எகிப்திய விளையாட்டரங்கம்" 157.5 மீ எனக்கொண்டால் அவரது அளவை 39,375 கிமீயாக 1%க்கும் குறைந்த பிழையுடன் உள்ளது.[3] முக்கோணவியலை புவிப்பரப்பு அளவைகளுக்கு பயன்படுத்திய முதல் நிகழ்வாக இது அமைந்துள்ளது.
மற்ற கண்டுபிடிப்புகள்
[தொகு]எரடோசுதீனீசின் சல்லடை
[தொகு]கணிதத்தில் எரடோசுதெனீசின் சல்லடை (Sieve of Eratosthenes, கிரேக்கம்: κόσκινον Ἐρατοσθένους) என்பது ஒரு குறிப்பிட்ட முழுஎண் வரை பகா எண்களைக் கண்டறிய எளிய தொன்மைகால படிமுறைத் தீர்வு ஆகும்.[4] இத்தீர்வு ஒரு கோடிக்கும் குறைவான முழு எண்களுக்கு வேலை செய்கிறது.[5] நிக்கோமச்சூசு எழுதிய எண்களுக்கான அறிமுகம் (Introduction to Arithmetic) என்ற நூலில் இந்தச் சல்லடையை விவரித்துள்ளதுடன் இதனை வடிவமைத்தது எரடோதெனீசு எனவும் குறிப்பிட்டுள்ளார்.[6]
பிற
[தொகு]எரடோசுதெனீசு புவியின் அச்சுச்சாய்வை ஒரு பாகைப் பிழைக்குள்ளாக கண்டறிந்துள்ளார். இந்த அச்சுச் சாய்வினாலேயே உலகின் பல்வேறு பருவங்களான வேனிற்காலம், கூதிர்காலம் போன்றவை ஏற்படுகின்றன. ஆண்டின் நீளத்தை 365¼ நாட்கள் எனவும் கணக்கிட்டார். எனவே நாட்காட்டிகளில் ஒவ்வொரு நான்காண்டுகளுக்கு ஒருமுறை ஒரு கூடுதல்நாளை சேர்க்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தார். இக்கருத்து இரு நூற்றாண்டுகளுக்குப் பிறகே யூலியசு சீசர் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது.[2]
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ Asimov, Isaac. 1975. Asimov's Biographical Encyclopedia of science and technology, Entry #42, "Eratosthenes", p. 29. Pan Books, London. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-330-24323-3.
- ↑ 2.0 2.1 'Wired' 2008
- ↑ Isaac Moreno Gallo (2004), Roman Surveying (PDF), translated by Brian R. Bishop, archived (PDF) from the original on 2007-02-05, பார்க்கப்பட்ட நாள் 2013-04-01
- ↑ Horsley, Rev. Samuel, F. R. S., "Κόσκινον Ερατοσθένους or, The Sieve of Eratosthenes. Being an Account of His Method of Finding All the Prime Numbers," Philosophical Transactions (1683-1775), Vol. 62. (1772), pp. 327-347.
- ↑ The Prime Glossary: "The Sieve of Eratosthenes", http://primes.utm.edu/glossary/page.php?sort=SieveOfEratosthenes, references 16. November 2008.
- ↑ Nicomachus Introduction to arithmetic, I, 13