எப்பெசுடசு கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எப்பெசுடசு கோயில்/எப்பெசுடத்தியம்
Ναός Ηφαίστου/Θησείο
எப்பெசுடசு கோயில், ஏதென்ஸ்:கிழக்கு முகப்பு
Map
பொதுவான தகவல்கள்
நகரம்ஏதென்ஸ்
நாடுகிரீஸ்
கட்டுமான ஆரம்பம்449 கி.மு.
நிறைவுற்றது415 கி.மு.

எப்பெசுடசு கோயில் ( Temple of Hephaestus ) கிரீஸ் நாட்டின் மத்திய ஏதென்ஸில் உள்ளது. உலகில், கூடிய அளவு நல்ல நிலையிலிருக்கும் பழங்காலக் கிரேக்கக் கோவில் இதுவே எனினும், இதன் அண்மையிலிருக்கும், பிரபலமான கோயிலான பார்த்தினனிலும் குறைவாக அறியப்பட்டதாகவே இது உள்ளது. எப்பெசுடத்தியம் என்றும் இது அழைக்கப்படுகின்றது. பைசண்டைன் காலத்தில், கிரேக்கக் காவிய நாயகனான தீசியஸ் என்பவனுடைய எலும்புகள் இங்கே புதைக்கப்பட்டுள்ளதாக நிலவும் ஐதீகத்தைத் தொடர்ந்து, தீசியம் ( Theseum ) என்றும் இது அழைக்கப்படுவதுண்டு.[1][2][3]

கட்டிட பாணி[தொகு]

இந்தக் கோயில், அக்கிரோப்பொலிஸிலிருந்து 500 மீட்டர் தொலைவிலும், நவீன ஆதென்ஸின் மையமான சிந்தக்மா சதுக்கத்திலிருந்து ஒரு கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. இந்தக் கோயில் கி.மு 449ல், அக்கால ஏதென்ஸின் மேற்கு எல்லையில், வார்ப்புத் தொழிலகங்களையும், உலோக வேலைத்தலங்களையும் கொண்டிருந்த பகுதியில் கட்டப்பட்டது. இதனால் இக்கோயில், கொல்லர்கள் மற்றும் உலோகவேலைக்கான கிரேக்கக் கடவுளான எப்பெசுடசுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டது. பார்த்தினனின் கட்டிட வேலையில் ஈடுபட்டிருந்த இக்தினஸ் என்னும் கட்டிடக்கலைஞரால் இது வடிவமைக்கப்பட்டது. இது சிறிது உயர்வான இடத்தில் அமைந்திருப்பதால், பழங்காலத்தில், அகோராவிலிருந்து பார்க்கக்கூடியதாக இருந்திருக்கும்.

பெந்தெலுஸ் மலையிலிருந்து கொண்டுவரப்பட்ட பளிங்குக் கற்களினால் டொறிக் ஒழுங்கைப் பின்பற்றிக் கட்டப்பட்ட இக் கட்டிடம், ஹெக்சாஸ்டைல் என அழைக்கப்படுகின்றது. இதன் முகப்பிலும், பின் பக்கத்திலும் ஒவ்வொன்றும் ஆறு தூண்களைக் கொண்டிருக்கின்றன என்பது இதன் கருத்தாகும். பக்கங்கள் ஒவ்வொன்றிலும் தலா 13 தூண்கள் உள்ளன. நடுவில் நாற்புறமும் சுவர்களால் சூழப்பட்ட அறை உண்டு. தூண் வரிசைகளுக்கு மேல் அவற்றின் மீது தாங்கப்பட்டுள்ள எண்ட்ராபிளேச்சர் என வழங்கப்படும் உத்திரப் பகுதியில் அமைந்துள்ள பிறீஸ், பொதுவாக ஒரு டொரிக் பாணிக்கட்டிடத்தில் எதிர்பார்க்கக்கூடிய படி, அலங்காரங்களற்றதாகவே உள்ளது. எனினும் இதற்கு மேல் அமைந்துள்ள, மரக்கட்டிடங்களில் துருத்திக்கொண்டிருக்கும் மர உத்திரங்களின் அந்தங்களைப் பிரதிபலிக்கும், தவாளிப்புகளினால் அலங்கரிக்கப்பட்ட ட்ரிக்ளிப்ஸ்(triglyphs) எனப்படும் உறுப்புக்களிடையேயுள்ள இடைவெளிகள் புடைப்புச் சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

பார்த்தினனைப் போலன்றி, இக் கோயிலின் தூண்கள், பீடம், கூரையின் பெரும் பாகம் என்பன குறிப்பிடத்தக்க அளவு நல்ல நிலையிலேயே உள்ளன. எனினும் சில பகுதிகளும், அலங்கார அம்சங்களும், திருடர்களாலும், அரும்பொருட் கொள்ளையர்களாலும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. கி.பி 7 ஆம் நூற்றாண்டில் இக்கட்டிடம் கிறிஸ்தவ தேவாலயமாகப் - சென் ஜோர்ஜ் தேவாலயமாக - பயன்படுத்தப்பட்டது, இக்கட்டிடம் நல்ல நிலையிலிருப்பதற்கு முக்கிய காரணமாகும். எனினும் இதே காரணம் இதன் உட்புறத்தின் பழங்கால அம்சங்கள் அகற்றப்பட்டு கிறித்தவ தேவாலயத்துக்கேற்ற புதிய உட்புறம் அமைவதற்கு ஏதுவாகியது.

வரலாறு[தொகு]

எப்பெசுடசு கோயில்,ஏதென்ஸ்:மேற்கு முகப்பு

கிறீசில் ஓட்டோமான் ஆட்சி நிலவிய நூற்றாண்டுகளில் எதென்ஸின் முதன்மையான கிரேக்க ஓதோடொக்ஸ் தேவாலயமாக இதுவே விளங்கியது. கிரீசின் முதலாவது சுதந்திர அரசனான மன்னன் ஓதோன், 1834ல் நகருக்குள் நுழைந்தபோது, அவனை வரவேற்பதற்கான முதல் பிரார்த்தனையும் இங்குதான் நடைபெற்றது.

சுற்றுலா தகவல்[தொகு]

இன்று, கிரேக்க உட்துறை அமைச்சின் கீழுள்ள அரும்பொருட் செயலகத்தின் மேற்பார்வையில், ஒரு தொல்பொருள் களமாகப் பாதுகாக்கப்படுகின்றது. இதனைச் சுற்றி ஒரு வேலி போடப்பட்டிருப்பினும், பார்த்தினன் மற்றும் பல தொல்பொருட் சின்னங்களைவிட அருகில் சென்று இக்கட்டிடத்தைப் பார்க்க முடியும். இப்பொழுது இதனைச் சுற்றி ஒரு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இது ஏதென்ஸின் மத்தியில் ஒரு ரம்மியமான பசுமைப் பகுதியாக உள்ளது. இருந்தும், அக்ரோபொலிஸ் போன்ற இடங்களைவிடக் குறைவான சுற்றுலாப்பயணிகளே இங்கு வருகிறார்கள்.

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Temple of Hephaistos
என்பதின் ஊடகங்கள் உள்ளன.

37°58′32.22″N 23°43′17.01″E / 37.9756167°N 23.7213917°E / 37.9756167; 23.7213917

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எப்பெசுடசு_கோயில்&oldid=3769245" இருந்து மீள்விக்கப்பட்டது