என்றீக் இக்லெசியாசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


என்றீக் இக்லெசியாசு
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்என்றீக் மிகெல் இக்லெசியாசு பிரெஸ்லெர்
பிறப்புமே 8, 1975 (1975-05-08) (அகவை 48)
பிறப்பிடம்மாட்ரிட், எசுப்பானியா
இசை வடிவங்கள்பாப், இலத்தீன் பாப்
தொழில்(கள்)பாடகர்-பாடலாசிரியர், நடிகர்
இசைக்கருவி(கள்)வாய்ப்பாட்டு, கிதார், பியானோ
இசைத்துறையில்1995–இப்போது வரை
இணையதளம்www.enriqueiglesias.com

என்றீக் இக்லெசியாசு (பிறப்பு மே 8, 1975) ஒரு எசுப்பானிய பாடகர் ஆவார்.[1] இவர் அமெரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்காவின் மிகப் பிரபல பாடகர்களுள் ஒருவராகத் திகழ்கிறார். ஒருகாலகட்டத்தில் எசுப்பானிய மொழி இசைத்தொகுப்புகளில் வேறு எந்த பாடகர்களை விடவும் அதிகமான அளவில் இவரது இசைத்தொகுப்புகள் விற்பனையாயின.

இக்லெசியாசின் இசைத்தொகுப்புகள் உலகெங்கிலும் 60[2] மில்லியனுக்கும் அதிகமாய் விற்றுள்ளன. அத்துடன் ஒரு கிராமி மற்றும் இலத்தீன் கிராமி விருதுகளையும் இத்தொகுப்புகள் வென்றுள்ளன. பில்போர்டு முதலிட வெற்றிப் பட்டியல்களில் இவரது பல பாடல்கள் இடம்பிடித்துள்ளன. பில்போர்டு இலத்தீன் பாடல் வரிசையில் 20 முதலிட எசுப்பானிய மொழி தனிப்பாடல்களை உருவாக்கிய சாதனையும் இவர் படைத்துள்ளார்.

ஆரம்ப வருடங்களும் வாழ்க்கையும்[தொகு]

எசுப்பானியாவின்[3] மாட்ரிட் நகரில் இக்லெசியாசு பிறந்தார். பாடகரான சூலியோ இக்லெசியாசு மற்றும் சமூக ஆர்வலரும் பத்திரிகை செய்தியாளருமான இசபெல் பிரெசுலர் தம்பதிகளுக்கு மூன்றாவது மற்றும் கடைசிக் குழந்தையாய் இவர் பிறந்தார். இவரது தாயார் பிலிபினோ வம்சாவளியைச் சேர்ந்தவர்.[4] தந்தை எசுப்பானிய மற்றும் யூத வம்சாவளியைச் சேர்ந்தவர்.[5][6][7] அவரது பெற்றோர் 1978 ஆம் ஆண்டில் விவாகரத்து செய்தனர். அதனையடுத்த வருடத்தில் அவரது தந்தை தனது இசைவாழ்க்கையைத் தொடரும் பொருட்டு புளோரிடா மாநிலத்தின் மியாமிக்கு இடம்பெயர்ந்தார்.

1985 ஆம் ஆண்டில், இக்லெசியாசின் தாத்தாவான சூலியோ இக்லெசியாசு ஒரு பயங்கரவாத குழுவால் கடத்திச் செல்லப்பட்டார். பேரன்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தில், என்றீக் மற்றும் அவரது சகோதரரான சூலியோ இக்லெசியாசு ஜூனியர் இருவரும் மியாமியில் இருக்கும் தங்களது தந்தையுடன் வசிக்க அனுப்பப்பட்டனர்.[8] செய்தியாளராகப் பணிபுரிந்த தனது தாயுடன் பெல்கிரேடிலும் அவர் ஒரு வருடம் வசித்தார்.[9] அவரது தந்தை தொழில்ரீதியாய் பல சமயம் வெளியில் தான் இருக்கும்படி ஆனதால், இளம் இக்லெசியாசு செவிலித்தாயிடம் தான் வளர்ந்தார்.[10] மியாமி பல்கலைக்கழகத்தில் வணிகம் படிக்கப் போனார்.[11]

இசைத் துறையில் நுழைய தான் திட்டமிடுவது தன் தந்தைக்கு தெரிய வேண்டாம் என்று எண்ணிய இக்லெசியாசு, அவரது தந்தையின் பெயரை தனது துறை முன்னேற்றத்திற்கு பயன்படுத்த விரும்பவில்லை. செவிலித்தாயிடம் கொஞ்சம் பணம் வாங்கி தனது காட்சி இசை நாடாவை அவர் பதிவு செய்தார். அதில் ஒரு எசுப்பானிய பாடலும் இரண்டு ஆங்கிலப் பாடல்களும் இருந்தன. தனது தந்தைக்கு முன்னாளில் விளம்பர நிர்வாகியாக இருந்த பெர்னான் மார்டினெசை இவர் அணுகினார். கவுதிமாலாவில் இருந்து வந்த ஒரு அறியப்படாத பாடகர் என்கிற பின்புலத்துடன் ‘என்றீக் மார்டினசு’ என்கிற மேடைப் பெயருடன் இந்த பாடல்கள் கொண்டு செல்லப்பட்டன. இக்லெசியாசு போனாவிசா என்னும் ஒரு இசைத்தட்டு நிறுவனத்தால் ஒப்பந்தம் செய்யப்பட்டார். பல்கலைக்கழகத்தில் இருந்து விலகிய அவர், கனடாவிலுள்ள டொராண்டோவுக்கு தனது முதல் இசைத்தொகுப்பை பதிவு செய்வதற்குச் சென்றார்.[12]

தொழில் வாழ்க்கை[தொகு]

1995– 1997 'என்றீக் இக்லெசியாசு'[தொகு]

ஜூலை 12, 1975 அன்று, என்றீக் இக்லெசியாசு என்ற தலைப்பிலான தனது முதல் இசைத்தொகுப்பை இக்லெசியாசு வெளியிட்டார். "ஸி டு டி வாஸ் (Si Tú Te Vas)", "எக்ஸ்பீரியன்ஸா ரிலிஜியஸோ (Experiencia Religiosa)" மற்றும் இன்ன பிற வெற்றிப் பாடல்கள் கொண்ட பலட் பாடல்களின் தொகுப்பாகும் இது. வெளியிட்ட முதல் வாரத்திலேயே இந்த இசைத்தட்டு அரை மில்லியன் இசைத்தொகுப்புகள் விற்றுத் தீர்ந்தது. இது ஆங்கிலம் அல்லாத ஒரு மொழியில் இசைப் பதிவு செய்யப்பட்ட இசைத்தொகுப்புகளில் ஒரு சாதனை ஆகும்.

இந்த இசைத்தொகுப்பின் சில பாடல்கள் இத்தாலிய மற்றும் போர்ச்சுகீசிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டிருந்தன. ”பூர் அமார்தே (Por Amarte)”, “நோ லோரெஸ் பூர் மி (No Llores Por Mí)” மற்றும் “டிராபெசிஸ்டா (Trapecista)” போன்ற இந்த இசைத்தொகுப்பில் இருந்தான ஐந்து தனிப்பாடல்கள் இலத்தீன் வரிசைகளில் முதலிடம் பிடித்தன. சிறந்த இலத்தீன் பாப் பாடலுக்கான ஒரு கிராமி விருதையும்[13] இக்லெசியாசுக்கு இந்த இசைத்தொகுப்பு பெற்றுத் தந்தது.

1997–1998 'விவிர்'[தொகு]

1997 ஆம் ஆண்டில், விவிர் (வாழ்வதற்காக ) வெளியானதைத் தொடர்ந்து இக்லெஸியாசின் புகழ் தொடர்ந்து அதிகரித்து அவருக்கு உயர்ந்த வரிசை பாடகர்களுக்கு இணையான ஒரு இடத்தை அளித்தது. அந்த ஆண்டில் பதினாறு நாடுகளில் அரங்கு நிரம்பிய நிகழ்ச்சிகளில், பிரித்தானிய மற்றும் அமெரிக்க பாடகர்களான எல்டன் ஜான், புரூஸ் ஸ்பிரிங்ஸ்டீன் மற்றும் பில்லி ஜோயல் ஆகியோரின் ஆதரவுடன் இக்லெசியாசு நிகழ்ச்சிகளில் பாடினார்.[14] விவிரில் இருந்து வெளியான மூன்று தனிப்பாடல்கள் (”எனாமோராடோ போர் பிரைமெரா வெஸ்”, “ஸோலோ என் டி” மற்றும் மியென்டெ” ஆகியவை) இலத்தீன் தனிப்பாடல்கள் வரிசையிலும் அத்துடன் பல்வேறு எசுப்பானிய மொழி பேசும் நாடுகளிலும் முதலிடம் பிடித்தது. தனது தந்தையான சூலியோ இக்லெசியாசு மற்றும் மெக்சிகன் பாடகரான லூயில் மிகேல் உடன் சேர்த்து, இக்லெஸியாசும் பிடித்தமான இலத்தீன் கலைஞருக்கான பிரிவில் அமெரிக்க இசை விருதுக்கான பரிந்துரையைப் பெற்றார். நிகழ்ச்சியில் இக்லெசியாசு “லுவியா கே (Lluvia Cae)” என்னும் பாடலைப் பாடினார். ஆனால் தந்தையிடம் தோல்வியைத் தழுவ நேரிட்டது, தந்தைக்குத் தான் விருது கிடைத்தது.

1998-1999 'கோஸாஸ் டெல் அமோர் (Cosas del Amor)'[தொகு]

1998 ஆம் ஆண்டில், இக்லெசியாசு கோஸாஸ் டெல் அமோர் (காதல் விடயங்கள் ) என்னும் தனது மூன்றாவது இசைத்தொகுப்பை வெளியிட்டார். சற்று கூடுதல் முதிர்ச்சியுற்றதொரு இசைப் பாதையை கொண்டிருந்த இந்த இசைத்தொகுப்பு, இதில் இடம்பெற்றிருந்த “எஸ்பெரான்ஸா” மற்றும் “நுங்கா டி ஒல்விடாரெ” ஆகிய பிரபலமுற்ற பாடல்களின் மூலம் இலத்தீன் இசை உலகில் இவரது புகழை நிலைநாட்டியது. இந்த இரண்டு பாடல்களும் இலத்தீன் தனிப்பாடல்கள் வரிசையில் முதலிடத்தைப் பிடித்தன. இசைத்தொகுப்பு வெளியீட்டுடன் சேர்த்து ஒரு சுற்றுப்பயணத்தையும் இக்லெசியாசு மேற்கொண்டார். பிடித்தமான இலத்தீன் கலைஞர் பிரிவில் பூர்டோ ரிகா பாடகர் ரிக்கி மார்டின் மற்றும் மெக்சிகோ பாடகர் மரியாச்சி பாண்ட், லாஸ் டைக்ரஸ் டெல் நோர்டெ ஆகியோரைத் தோற்கடித்து அமெரிக்கன் இசை விருதினை இவர் வென்றார். நுங்கா டி ஒல்விடேர் (Nunca te Olvidaré) பாடல் அதே பெயரிலான ஒரு எசுப்பானிய தொலைக்காட்சித் தொடருக்கு கருப்பொருள் இசையாகவும் பயன்படுத்தப்பட்டது. தொடரின் கடைசி அத்தியாயத்தில் இந்த பாடலை அவரே பாடினார்.

1999-2000 ‘என்றீக்’[தொகு]

1999 ஆம் ஆண்டுவாக்கில், இக்லெசியாசு ஆங்கில மொழியின் இசைச் சந்தைக்குள் வெற்றிகரமாய் தனது தொழில்வாழ்க்கையை இடமாற்றியிருந்தார். ஒயில்டு ஒயில்டு வெஸ்ட் திரைப்படத்தின் இசைத்தடத்திற்கு இக்லெசியாசு பாடல்கள் பங்களிப்பு செய்தார். “பைலமோஸ்” அமெரிக்காவின் முதலிட வெற்றிப் பாடலானது.

“பைலமோஸ்” வெற்றிக்குப் பின், பல உயர் வரிசை இசைத்தட்டு நிறுவனங்களும் இக்லெசியாசை ஒப்பந்தம் செய்ய மிகுந்த ஆர்வம் காட்டின. இன்டர்ஸ்கோப் நிறுவனத்துடன் பல வார பேச்சுவார்த்தைகளுக்குப் பின், ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்ட இக்லெசியாசு, ஆங்கிலத்தில் என்றீக் என்கிற பெயரிலான தனது முதல் இசைத்தொகுப்பை பதிவு செய்து வெளியிட்டார். அந்த சமயத்தில் இன்டர்ஸ்கோப் நிறுவனத்தில் நிர்வாகியாக இருந்த ராப் கலைஞர் கெரார்டோ மெஜியா தான் இந்த இசைத்தொகுப்பை அமெரிக்காவுக்கு கொண்டுவந்து இக்லெசியாசின் அமெரிக்க வாழ்க்கையை வெற்றிகரமாகத் துவங்கி வைக்க குறிப்பாக பங்களித்தவராய் இருந்தார்.[15] இலத்தீன் பாதிப்புகளுடனான இந்த பாப் இசைத்தொகுப்பு நிறைவடைய இரண்டு மாதங்கள் ஆனது. ஒயிட்னி ஹவுஸ்டன் உடன் இணைந்து பாடிய “குட் ஐ ஹேவ் திஸ் கிஸ் ஃபார்எவர்” என்கிற பாடலும், புரூஸ் ஸ்ப்ரிங்ஸ்டீன் பாடலான “ஸேடு ஐஸ்”க்கான ஒரு மாற்றுக் குரல் பாடலும் இதில் இடம்பெற்றிருந்தன. இசைத்தொகுப்பின் மூன்றாவது தனிப்பாடலான “பீ வித் யூ” அவரது இரண்டாவது முதலிடப் பாடலாய் ஆனது.

இசைத்தொகுப்பின் இறுதிப் பாடலான “யூ’ர் மை #1” தேர்ந்தெடுத்த பிராந்தியங்களில் அந்தந்த பகுதி பிரபலங்களுடன் இணைந்து பாடிய சோடிப் பாடல்களாய் மறுபதிவு செய்யப்பட்டு வெளியானது.

2001-2002 ‘எஸ்கேப்’[தொகு]

2001 ஆம் ஆண்டில் தனது எஸ்கேப் இசைத்தொகுப்புடன் இக்லெசியாசு தனது இசைப்பயணத்தைத் தொடர்ந்தார். அந்த காலகட்டத்தில், இலத்தீன் அமெரிக்காவில் இருந்து வந்து ஆங்கில பொழுதுபோக்குத் துறையில் இசைத்தட்டுக்கள் விற்பனையாகச் செய்வதில் அப்பாடகர்கள் சிரமத்தை சந்தித்து வந்தனர். ஆயினும் இக்லெஸியாசுக்கு இந்த பிரச்சினை எழவில்லை. அவரது இசைத்தொகுப்புகள் சக போட்டியாளர்களை விஞ்சி ஏராளமாய் விற்பனையாயின. இந்த இசைத்தொகுப்பின் முதல் தனிப்பாடலான “ஹீரோ”, இங்கிலாந்து மற்றும் பல பிற நாடுகளிலும் முதலிட வெற்றியைப் பெற்றது. ஒட்டுமொத்த இசைத்தொகுப்பும் இக்லெசியாசு இணைந்து எழுதியதாகும்.

இன்றுவரை அவரது மிகப் பெரும் வெற்றிப் படைப்பாக எஸ்கேப் திகழ்கிறது. “எஸ்கேப்” மற்றும் “டோண்ட் டர்ன் ஆஃப் தி லைட்ஸ்” ஆகிய தனிப்பாடல்கள் வானொலிகளில் மிகப் பிரபலமுற்றதோடு, வட அமெரிக்கா மற்றும் உலகெங்கிலுமான பகுதிகளில் பல்வேறு வரிசைப் பட்டியல்களிலும் உயர்ந்த இடத்தைப் பிடித்தது அல்லது முதலிடத்தைப் பிடித்தது. இந்த இசைத்தொகுப்பின் இரண்டாம் பதிப்பு ஒன்று உலகெங்கிலும் வெளியிடப்பட்டது. இது இக்லெசியாசுக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்றான “மேபீ”யின் ஒரு புதிய பதிப்பைக் கொண்டிருந்ததோடு லயனல் ரிச்சி உடனான “டூ லவ் எ வூமன்” எனப்படும் ஒரு சோடிப் பாடலையும் கொண்டிருந்தது.

இந்த இசைத்தொகுப்பின் வெற்றியைப் பயன்படுத்தி இக்லெசியாசு “ஒன்-நைட் ஸ்டாண்ட் வேர்ல்டு டூர்” என்னும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பதினாறு நாடுகளில் 50 அரங்கு நிரம்பிய நிகழ்ச்சிகள் நடந்தன. சுற்றுப்பயணத்தின் இரண்டாம் பகுதியான “டோண்ட் டர்ன் ஆஃப் தி லைட்ஸ்” 2002 கோடையில் நிறைவு செய்யப்பட்டது. பூர்டோ ரிகாவில் நடந்த ஒரு நிகழ்ச்சி உடன் இந்த சுற்றுப்பயணம் நிறைவுற்றது.

2002-2003 'குவிசாஸ்’[தொகு]

2002 ஆம் ஆண்டில், இக்லெசியாசு குவிசாஸ் (பெர்ஹாப்ஸ் ) என்கிற பெயரில் தனது நான்காவது எசுப்பானிய இசைத்தொகுப்பை வெளியிட்டார். இதில் இவரது கூடுதல் சுயபரிசோதனையுடனான பாடல்கள் இடம்பெற்றிருந்தன. இசைத்தொகுப்பின் தலைப்புப் பாடல் இக்லெசியாசு தனது தந்தையுடன் கொண்டிருந்த விரிசலுற்ற உறவு குறித்ததாக இருந்தது. பில்போர்டு 200 இசைத்தொகுப்பு வரிசையில் இந்த இசைத்தொகுப்பு 12வது இடத்தில் அறிமுகமானது. அந்த சமயத்தில் அந்த இசைத்தொகுப்பு வரிசையில் ஒரு எசுப்பானிய இசைத்தொகுப்பு பிடித்த மிக உயர்ந்த இடமாகும் அது. குவிசாஸ் ஒரு வாரத்தில் மில்லியன் இசைத்தொகுப்புகள் விற்றது. இது 5 ஆண்டு காலத்தில் மிக துரிதமாய் விற்ற எசுப்பானிய இசைத்தொகுப்பு என்னும் பெருமையை இதற்கு அளித்தது. இந்த இசைத்தொகுப்பில் இருந்து வெளியான மூன்று தனிப்பாடல்களுமே இலத்தீன் வரிசையில் முதலிடத்தைப் பெற்றன. பில்போர்டு இலத்தீன் வரிசையில் அதிக முதலிட தனிப்பாடல்கள் கொடுத்த சாதனையை இப்போது இக்லெசியாசு தான் கொண்டிருக்கிறார். இசைத்தொகுப்பில் இருந்தான அவரது கடைசி தனிப்பாடல், “பரா க்யூ லா விடா” அமெரிக்க வானொலியில் முதலிடத்தை எட்டியது. இப்பெருமையை எட்டிய ஒரே எசுப்பானிய பாடல் இதுவே.[16]

குவிசாஸ் ” இசைத்தொகுப்பில் இருந்தான பாடல்களை தனது “டோண்ட் டர்ன் ஆஃப் தி லைட்ஸ்” சுற்றுப்பயணத்திலும் இக்லெசியாசு சேர்த்துக் கொண்டார். இந்த இசைத்தொகுப்பு சிறந்த பாப் குரல் ஆல்பத்திற்கான இலத்தீன் கிராமி விருதை வென்றது.

2003–2004 '7'[தொகு]

2003 ஆம் ஆண்டில் இக்லெசியாசு தனது ஏழாவது இசைத்தொகுப்பை வெளியிட்டார். இதனை அவர் 7 என்று அழைத்தார். இது இக்லெசியாசு இணைந்து எழுதிய இரண்டாவது இசைத்தொகுப்பாகும். 1980களின் பாதிப்புடனான “ரோமர்” போன்ற பாடல்கள் இதில் இடம்பெற்றிருந்தன. இதனை அவர் தனது கிதார் கலைஞரான டோனி புரூனோ உடன் சேர்ந்து எழுதினார். “பீ யுவர்செல்ஃப்” என்கிற பாடலும், சுதந்திரம் குறித்ததொரு பாடலும் (இக்லெசியாசு இசைத் துறையில் வெற்றி பெறுவார் என்பதை அவரது சொந்த பெற்றோரே எப்படி நம்பவில்லை என்பதை இப்பாடலின் குழுப்பின்னணி வார்த்தைகள் கூறின) இந்த இசைத்தொகுப்பில் இருந்தன. “அடிக்டட்” பாடல் தான் முதலாவது தனிப்பாடல் ஆகும். இதனைத் தொடர்ந்து கெலிஸ் இடம்பெற்ற “நாட் இன் லவ்” பாடலின் ஒரு மறுகலவைப் பதிப்பு இடம்பெற்றது.

இந்த இசைத்தொகுப்பைத் தொடர்ந்து, இக்லெசியாசு தனது உலக சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். அமெரிக்காவில் பன்னிரண்டு நிகழ்ச்சிகளுடன் இந்த பயணம் துவங்கியது. அமெரிக்க நிகழ்ச்சிகள் முடிந்த பின் ஆஸ்திரேலியா, இந்தியா, எகிப்து மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தொடர்ந்த இப்பயணம் தென் ஆப்பிரிக்காவில் முடிந்தது.

2004-2006 ’7’க்கு பிந்தைய நடவடிக்கைகள்[தொகு]

புதிய பாடல்களை எழுதும்போதும் பதிவு செய்யும் போதும், இக்லெசியாசு பொதுவாக வெளித் தோற்றங்களைத் தவிர்த்து விடுவார். தனிமையை ஏற்படுத்திக் கொள்வார். ஆனால் இந்த காலகட்டத்தில் ஊடகங்களில் இவர் அதிகமாய் விருந்தினராய் பங்கேற்றார். ஓப்ரா வின்ஃப்ரேயின் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் விருந்தினராய் பங்கேற்று தனது ரசிகர்களில் ஒருவருக்கு ஆச்சரியப்படுத்தும் வண்ணமாக அவருடன் ஒரு நாளை செலவிட்டார். பிரெமியோஸ் சூவென்டட் நிகழ்ச்சியிலும் இவர் தோற்றமளித்தார். அத்துடன் அர்ஜென்டினாவில் டிகோ மரடோனாவின் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் இறுதி ஒளிபரப்பில் அவர் இசை விருந்தினராய் பங்கேற்றார். சில நாட்கள் கழித்து சிறப்பு ஒலிம்பிக்ஸ்க்கு ஆதரவாய் நடைபெற்ற ஒரு கிருத்துமஸ் கச்சேரியிலும் அவர் இசை நிகழ்த்தினார்.

தான் ஒப்பந்தத்தில் இருந்த வாசனைத்திரவியத்திற்கான பல்வேறு விளம்பர நிகழ்ச்சிகளிலும் இக்லெசியாசு பங்கேற்றுள்ளார். அந்த வாசனைத் திரவியத்திற்கான விளம்பரத்திலும் இக்லெசியாசு தனது “ரிங் மை பெல்ஸ்” கருப்பாடலுடன் தான் இடம்பெறுகிறார். இது அவரது நான்காவது இசைத்தொகுப்பில் இடம்பெற்றதொரு பாடலாகும்.

இசுரேலில் மேடையில் இக்லெசியாசு.

இன்னும் சமீபத்தில், இத்தாலி, உருகுவே மற்றும் இசுரேலில் தனியாய் ஒரு நிகழ்ச்சி மட்டும் கொண்ட கச்சேரிகளில் இக்லெசியாசு நிகழ்ச்சி நடத்தியிருக்கிறார் என்பதோடு, எசுப்பானியாவின் மலாகா பவுலினா ருபியோ உடன் இணைந்து விழா ஒன்றிலும் நிகழ்ச்சி செய்தார். அத்துடன் அமெரிக்காவிலும் தொடர்ச்சியாய் பல கச்சேரிகளை நிறைவு செய்திருக்கிறார். “ஃபார் தி ஃபேன்ஸ்” சுற்றுப்பயணத்தில் அவரது பழைய விருப்பப்பாடல்கள் நிறைய இடம்பெற்றிருந்ததோடு ஆங்கிலம் மற்றும் எசுப்பானியத்திலான புதிய பாடல்களும் இடம்பெற்றிருந்தன.

2006-2008 ‘இன்சோம்னியாக்'[தொகு]

இக்லெசியாசு இன்சோம்னியாக் என்னும் தனது புதிய இசைத்தொகுப்பை ஜூன் 12, 2007 அன்று வெளியிட்டார். இந்த இசைத்தொகுப்பு மிகுதியாய் இரவில் தான் இசைப்பதிவு கண்டது என்பதால் இதற்கு ‘இன்சோம்னியாக்’ எனப் பெயரிடப்பட்டது. முந்தைய இசைத்தொகுப்புகளைக் காட்டிலும் இந்த இசைத்தொகுப்பு அதிகமாய் சமகால பாப் பாணியுடன் இருந்தது.

முதல் தனிப்பாடலான “டூ யூ னோ? (தி பிங் பாங் சாங்)” உலகெங்கும் பிரபல வெற்றிப் பாடலாகி பல நாடுகளிலும் முதல் 10 இடங்களுக்குள் பிடித்தது. “டிமெலோ” என்னும் தலைப்பிலான பாடலின் எசுப்பானிய பதிப்பு பில்போர்டு ஹாட் இலத்தீன் இசைத்தடங்கள் வரிசையில் பதினோரு தொடர்ச்சியற்ற வாரங்களில் முதலிடம் பெற்றது.

“சம்படி’ஸ் மீ” எசுப்பானிய பதிப்பும் வரிசைகளில் சிறப்பாய் இடம்பிடித்தது. தி யங் அண்ட் ரெஸ்ட்லெஸ் என்னும் நாடகத்திலும் இப்பாடல் இடம்பெற்றது, அத்துடன் இக்லெசியாசு நிகழ்ச்சியிலும் இப்பாடலைப் பாடினார். ஐரோப்பாவில் “டயர்டு ஆஃப் பீயிங் ஸாரி” இரண்டாவது தனிப்பாடலாய் அமைந்தது. இது பல நாடுகளிலும் வெற்றி பெற்றது. டிஜே சாமி உடன் கைகோர்த்து “டயர்டு ஆஃப் பீயிங் ஸாரி” பாடலின் மறுகலவையைக் கொண்டு வந்தார். சமீபத்தில் இந்த பாடலின் ஒரு பதிப்பை பிரெஞ்சு பாடகரான நாடியாவைக் கொண்டு இக்லெசியாசு பதிவு செய்தார். இது பிரான்சில் முதலிடத்தை எட்டியிருக்கிறது.

ஜூலை 4 அன்று, மூன்று தசாப்த காலத்தில் சிரியாவில் ஒரு கச்சேரி இசைத்த முதல் மேற்கத்திய பாடகர் என்னும் பெருமை இக்லெசியாசுக்கு கிட்டியது. தலைநகர் டமாஸ்கசில் அரங்கு நிறைந்த ஒரு கச்சேரியில் அவர் இசை விருந்து அளித்தார். அதே வாரத்தில் லைவ் எர்த் நிகழ்ச்சியிலும் பங்குபெற்றார்.

இன்சோம்னியாக் உலகச் சுற்றுப்பயணம் தென்னாப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்கில் உள்ள டோமில் இருந்து துவங்கியது. அந்த இடத்தில் அவர் தனது முந்தைய உலகச் சுற்றுப்பயணத்தை முடித்திருந்தார். இந்நிகழ்ச்சி ஐரோப்பாவெங்கிலும் அரங்கு நிறைந்த கச்சேரிகளுக்கு ஏற்பாடு செய்ய இட்டுச் சென்றது. சுற்றுப்பயணத்தின் இரண்டாவது பகுதியாக இலத்தீன் அமெரிக்கா முழுவதும் அவர் சுற்றினார்.

ஸ்டெப் அப் 2 தி ஸ்ட்ரீட்ஸ் திரைப்படத்தின் இசைத்தடத்தில் “புஷ்” பாடல் சேர்க்கப்பட்டது. இசைத்தொகுப்பில் இருந்தான மூன்றாவது தனிப்பாடலாக இப்பாடல் குறிப்பிடப்பட்டது. படத்தின் பிரதான நடிகர்களுடனான ஒரு இசைக் காணொளியும் படம்பிடிக்கப்பட்டது. இப்பாடல் பல நாடுகளிலும் வரிசையிடப்பெற்றதோடு இவரது ரசிகர்களிடையே மிக உயர்ந்த இடத்தைப் பெற்ற பாடல்களில் ஒன்றாய் ஆனது.

இக்லெசியாசின் “கேன் யூ ஹியர் மீ” பாடல் யூரோ 2008 கால்பந்து போட்டிக்கான அதிகாரப்பூர்வ பாடலாக தேர்வு செய்யப்பட்டிருந்தது.[17] ஆஸ்திரியாவின், வியன்னாவில் ஜூன் 29, 2008 அன்று நடந்த இறுதிப்போட்டி சமயத்தில் அவர் இந்த பாடலை நேரலையாய் இசைத்துக் காட்டினார்.[18] சில நாடுகளில் மறுவிநியோகம் செய்யப்பட்ட இன்சோம்னியாக் இசைத்தொகுப்பில் இந்த பாடல் இடம்பெற்றிருந்தது.

2008 ‘என்றீக் இக்லெசியாசு: 95/08 எக்ஸிடோஸ்’[தொகு]

மார்ச் 25, 2008 அன்று இக்லெசியாசு “கிரேட்டஸ்ட் ஹிட்ஸ்” இசைத்தொகுப்பை வெளியிட்டார். இதில் அவரது பதினேழு முதலிடப் பாடல்கள் இடம்பெற்றிருந்தன. அத்துடன் இரண்டு புதிய பாடல்களும் இடம்பெற்றன. பில்போர்டு இலத்தீன் இசைத்தொகுப்பு வரிசையில் முதலிடத்திலும் பில்போர்டு டாப் 200 இசைத்தொகுப்பு வரிசையில் 18வது இடத்திலும் இந்த இசைத்தொகுப்பு அறிமுகமானது. இந்த இசைத்தொகுப்பு சமீபத்தில் அமெரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்காவில் இரட்டை பிளாட்டின சான்றிதழ் பெற்றது.

பாடலாசிரியர் கை சாம்பர்ஸ் உடன் இணைந்து இக்லெசியாசு, ஆண்ட்ரியா என்னும் 2004 பாப் இசைத்தொகுப்பின் “உன் நுயோவோ கியோர்னோ” தனிப்பாடலை எழுதினார். இந்த பாடல் அதன்பின் “ஃபர்ஸ்ட் டே ஆஃப் மை லைஃப்” என ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பாகி பதிவு செய்யப்பட்டது. அதுமுதலாய் இந்த பாடல் ஐரோப்பா முழுவதிலும் பெரும் வெற்றி பெற்ற பாடலாக ஆகியிருப்பதோடு பல நாடுகளில் முதலிடத்திற்கு உயர்ந்திருக்கிறது. ”தி வே” என்னும் தனிப்பாடலையும் இக்லெசியாசு எழுதினார்.

2000 ஆவது ஆண்டில், ஃபோர் கைஸ் நேம்டு ஜோஸ் அண்ட் உனா முஜெர் நேம்டு மரியா (Four Guys Named José and Una Mujer Named María) என்னும் இசைக் காணொளியை இக்லெசியாசு இணைந்து தயாரித்தார். இந்த இசைக் காணொளியில், இசுபானிக் வம்சாவளியைச் சேர்ந்த நான்கு அமெரிக்கர்கள் இசையில் பொதுவான ஒரு ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நால்வரும் சந்தித்து ஒரு நிகழ்ச்சி செய்ய தீர்மானிக்கிறார்கள். பல செவ்வியல் பாடல்கள் மற்றும் கார்மென் மிராண்டா, செலினா, ரிட்சி வாலென்ஸ், சந்தனா, ரிக்கி மார்ட்டின் மற்றும் இக்லெசியாசின் சமகால இலத்தீன் மற்றும் பாப் பாடல்களைப் பற்றிய பல குறிப்புகளும் சுட்டுகளும் இந்த நிகழ்ச்சியில் அடங்கியிருந்தன.

இக்லெசியாசு நடிப்பிலும் ஆர்வம் வளர்த்துக் கொண்டார். ராபர்ட் ரோட்ரிக்சின் திரைப்படமான ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெக்சிகோ திரைப்படத்தில் ஆலிவுட் நடிகர் மற்றும் நடிகையர் அண்டோனியா பாண்டெராஸ், சல்மா ஹெய்க் மற்றும் ஜானி டெப் ஆகியோருடன் சேர்ந்து நடித்தார். இதில் துப்பாக்கியேந்தி கெட்ட வார்த்தைகள் பேசிக் கொண்டிருக்கும் லோரென்சோ பாத்திரத்தில் நடித்தார். 2007 ஆம் ஆண்டில், சார்லி சீன் நடித்த டூ அண்ட் எ ஹாஃப் மென் என்னும் அமெரிக்க தொலைக்காட்சி நகைச்சுவைத் தொடரில் ஒரு கவுரவப் பாத்திரத்திலும் நடித்தார். இசை வாழ்க்கைக்கு இடையே எனக்குப் பொருத்தமாக அமையக் கூடிய பாத்திரங்கள் அமையும்பட்சத்தில் நான் மீண்டும் நடிப்பேன் என்று அவர் கூறியுள்ளார்.

ஹவ் ஐ மெட் யுவர் மதர் என்னும் சிபிஎஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கேல் என்னும் ஒரு கவுரவப் பாத்திரத்தையும் அவர் ஏற்றிருந்தார். பெப்சி குளிர்பானத்தின் தொலைக்காட்சி விளம்பரத்தில் ஒரு ரோமானிய சக்கரவர்த்தியின் பாத்திரத்தையும் அவர் ஏற்றிருந்தார். இதில் அமெரிக்க பாடகர்கள் பிரிட்னி ஸ்பியர்ஸ், பியான்ஸ் அண்ட் பிங்க் ஆகியோருடன் இணைந்து இவர் நடித்திருந்தார்.

சிலியில் அவரது சுற்றுப்பயணம் பெரும் பிரபலம் பெற்றது. ஆயிரக்கணக்கான இளம் பெண்கள் வீதிகளிலும் இக்லெசியாசு தங்கியிருந்த விடுதிக்கு வெளியிலும் திரண்டிருந்தனர். நிகழ்ச்சியில் சாதனைக் கூட்டத்தைக் கொணர்ந்ததோடு தனது இசை நிகழ்ச்சிக்கென பெரும் பாராட்டையும் பெற்றார். ஆயினும் அதற்கடுத்த வருடத்தில் அவரது பயணம் பல வேறுபட்ட காரணங்களுக்காக நினைவுகூரத்தக்கதாய் இருந்தது. தனக்கு வழங்கப்பட்ட லா கவியோடா என்கிற விருதினை இக்லெசியாசு ரசிகர்களுக்கு இடையே வீசினார். முதலில் ரசிகர்களிடம் இருந்து பெரிய எதிர்வினை எதுவும் தோன்றவில்லை. ஆனால் விருது வழங்கியவர் தான் இதனை அவமதிப்பாக எண்ணுவதாக கருத்து வெளியிட்டதோடு விருது திரும்பவும் தன்னிடம் வரவேண்டும் என்று கோரியபோது, ரசிகர் கூட்டம் எதிர்மறையாய் வினையாற்றியது. இக்லெசியாசு அவமதிப்பு செய்ததாக மறுநாள் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. செய்தியாளர் சந்திப்பில் அந்த ஊடகங்களுக்கு பதிலடி அளித்த இக்லெசியாசு, விருது தனது ரசிகர்களுக்கு உரியது என்கிற பொருளிலேயே தான் அவ்வாறு செய்ததாக தெரிவித்தார். இலத்தீன் அமெரிக்காவில் இவரது இசைத்தொகுப்பு விற்பனை தொடர்ந்து உச்சத்தில் இருக்கிறது என்றாலும், அதற்குப் பின் விழாவுக்கு இக்லெசியாசு அழைக்கப்படவே இல்லை. அத்துடன் அவர் சிலி வரும்போதெல்லாம் இந்த சம்பவம் நினைவுக்குக் கொண்டுவரப்படுகிறது.

2010[தொகு]

இட் மஸ்ட் பீ லவ் என்னும் பாடலை இக்லெசியாசு பதிவு செய்தார். அவரால் பாடப்பட்ட இப்பாடல் அவர், ஆண்ட்ரே பேக், மற்றும் பியர் ஆஸ்ட்ரோம் இணைந்து ஹைதி பூகம்பத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நிதி திரட்டுவதற்காக எழுதிய பாடலாகும். லிங்கின் பார்க் நிறுவியிருக்கும் தொண்டு அமைப்பான மியூசிக் ஃபார் ரிலீஃப் க்கென இந்த பாடல் வெளியிடப்பட்டுள்ளது.[19][20] உருவாகிக் கொண்டிருக்கும் தனது புதிய இசைத்தொகுப்பு 2010 ஆம் ஆண்டின் இரண்டாவது அல்லது மூன்றாவது காலாண்டு சமயத்தில் வெளியாகலாம் என்று ஜனவரி 15, 2010 அன்று என்றீக் தெரிவித்தார்.[21]

சொந்த வாழ்க்கை[தொகு]

இக்லெசியாசு தனது தொழில்வாழ்க்கையைத் துவங்கியது முதலே பல பெண்களுடன் அவரை இணைத்து இத்துறையில் செய்திகள் கசிந்திருக்கின்றன. ஆயினும் அவர் தனது வாழ்க்கை அந்தரங்கத்தை பாதுகாத்து வரக் கூடியவர் என்பதால், இந்த கூற்றுகளில் எவை உண்மை எவை கட்டுக்கதைகள் என்பதை அறிந்து கொள்வதே கடினமாய் இருக்கிறது. மிகக் குறிப்பிடத்தகுந்த நபர்கள் சிலரைக் குறிப்பிட வேண்டுமென்றால், சோபியா வெர்கெரா, கிறிஸ்டினா அக்விலெரா, ஜெனிபர் லவ் ஹெவிட், ஷனோன் எலிசபெத், சமந்தா டோரஸ் மற்றும் முன்னாள் பிரபஞ்ச அழகியான அலிசியா மசாதோ ஆகியோருடன் இவர் இணைத்து பேசப்பட்டது உண்டு.

பல வருடங்களாக ரஷ்யாவின் முன்னாள் டென்னிஸ் நட்சத்திரமான அனா கோர்னிகோவா உடன் இவர் நேரம் செலவிட்டு வருகிறார். இவரை அவர் தனது எஸ்கேப் இசைக் காணொளிக்கான தளத்தில் டிசம்பர் 21, 2001 அன்று சந்தித்திருந்தார். இவர்கள் பிரிந்து விட்டதாக பல செய்திகள் 2007 ஆம் ஆண்டில் வெளிவந்தன. 2008 ஆம் ஆண்டில் இந்த சோடி முறையாக திருமணம் செய்து கொண்டு பின் பிரிந்து விட்டதாய் செய்திகள் வந்தன. அதற்குப் பின் வந்த நேர்காணல்களில் பேசும்போது இது வெறுமனே ஒரு விளையாட்டுக்காகக் கூறப்பட்டது தான் என்றும் அவர்கள் இன்னும் நெருக்கமாகவே இருக்கின்றனர் என்றும் இக்லெசியாசு கூறி வந்திருக்கிறார்.

தனக்கு தூக்கமின்மை[22] வியாதி இருப்பதாகவும் கனமான தூக்க மருந்துகள் கூட பலனளிப்பதில்லை என்றும் இக்லெசியாசு வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.[23] 2003 ஆம் ஆண்டில், இக்லெசியாசு தனது அடையாளம் போல் இருந்த முகப் பருவை நீக்கி விட்டார்.[24]

இசைசரிதம்[தொகு]

எசுப்பானிய இசைப்பதிவக இசைத்தொகுப்புகள்
 • 1995: என்றீக் இக்லெசியாசு
 • 1997: விவிர்
 • 1998: கோஸாஸ் டெல் அமோர்
 • 2002: குவிசாஸ்
ஆங்கில இசைப்பதிவக இசைத்தொகுப்புகள்
 • 1999: என்றீக்
 • 2001: எஸ்கேப்
 • 2003: 7
 • 2007: இன்சோம்னியாக்

தொகுக்கப்பட்ட இசைத்தொகுப்புகள்
 • 1998: மறுகலவைகள்
 • 1999: பைலமோஸ் மாபெரும் வெற்றிகள்
 • 1999: சிறந்த வெற்றிகள்
 • 2007: என்றீக் இக்லெசியாசு: 95/08 எக்சிடோஸ்
 • 2008: மாபெரும் வெற்றிகள்
 • 2010: ஹைதிக்கு நிதி வழங்க பதிவிறக்கம் செய்க

மேலும் காண்க[தொகு]

 • என்றீக் இக்லெசியாசு விருதுகளின் பட்டியல்

குறிப்புதவிகள்[தொகு]

 1. "Enrique Iglesias: QV Magazine's June 2000 Artist of the Month". www.qvmagazine.com. Archived from the original on 2007-09-19. பார்க்கப்பட்ட நாள் 2010-02-23.
 2. Judd, Deany. "Enrique Iglesias's heaven and hell - Telegraph". பார்க்கப்பட்ட நாள் 2008-12-14.
 3. "Enrique Iglesias". www.IMDb.com.
 4. R. Arce. "Filipino People's Real Ancestry". Filipino Cultured.
 5. Blondy, Brian (2009-09-09). "Julio Iglesias charms in Tel Aviv". Jerusalem Post. http://fr.jpost.com/servlet/Satellite?pagename=JPost/JPArticle/ShowFull&cid=1251804531156. பார்த்த நாள்: 2009-12-02. [தொடர்பிழந்த இணைப்பு]
 6. "Enrique Iglesias, Isabel Preysler and the Filipino Identity". Pinoy Blog Machine (Beta). 2007-09-13 இம் மூலத்தில் இருந்து 2009-05-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090501135301/http://pinoyblogmachine.com/2007/09/13/enrique-iglesias-isabel-preysler-and-the-filipino-identity. 
 7. "Preysler Family" (PDF). www.geocities.com.[தொடர்பிழந்த இணைப்பு]
 8. Levin, Jordan (1997-11-23). "He Never Sang for His Father". Los Angeles Times. http://articles.latimes.com/1997/nov/23/entertainment/ca-56670. பார்த்த நாள்: 2009-12-02. 
 9. "Enrique kao dijete živio u Beogradu, a sada bi upoznavao Beograđanke - Showbiz - XMag - Index.hr". www.index.hr. பார்க்கப்பட்ட நாள் 2009-07-21.
 10. Merrill, Elizabeth (2007-12-02). "In life, and in death, Taylor was a natural mystery". ESPN.com. http://sports.espn.go.com/nfl/news/story?id=3135111. பார்த்த நாள்: 2009-12-02. 
 11. "Enrique Iglesias". MTV Networks. பார்க்கப்பட்ட நாள் 1 October 2009.
 12. Khatib, Salma (2004-04-23). "Seven Up!". Screen Weekly. http://www.screenindia.com/old/fullstory.php?content_id=7944. பார்த்த நாள்: 2009-12-03. 
 13. "The Iglesias dynasty: two generations of hot Latin talent". Hello! hellomagazine.com. Archived from the original on 2007-11-16. பார்க்கப்பட்ட நாள் 2010-02-23.
 14. "Enrique Iglesias begins his worldwide tour Vivir". Ondanet. 2008-05-31. http://www.ondanet.com/latinos/Enrique.Iglesias/vivir-eng.html. 
 15. Bonacich, Drago;Leahey, Andrew. "Gerardo Mejia: Biography". Allmusic. பார்க்கப்பட்ட நாள் 2009-10-14.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
 16. "Enrique Sets Billboard Record". Geffen. 2008-05-31. http://www.geffen.com/artist/news/default.aspx/aid/429/pg/32. 
 17. "Iglesias to Star at UEFA Euro 2008". UEFA Euro 2008. 2008-05-22 இம் மூலத்தில் இருந்து 2009-04-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090405204048/http://en.euro2008.uefa.com/countries/organisation/marketing/kind%3D16384/newsid%3D698320.html#iglesias+star+uefa+euro+2008. 
 18. "Enrique Iglesias to Sing to Soccer Fans". A Socialite's Life. 2008-05-20. http://socialitelife.celebuzz.com/20En08/05/20/enrique_iglesias_to_sing_to_soccer_fans.php. [தொடர்பிழந்த இணைப்பு]
 19. [1]
 20. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-08-09. பார்க்கப்பட்ட நாள் 2010-02-23.
 21. http://www.billboard.com/features/enrique-iglesias-album-preview-1004058406.story#/features/enrique-iglesias-album-preview-1004058406.story
 22. Moran, Jonathon (June 11, 2007). "Enrique Iglesias talks insomnia". https://archive.today/20121203005305/http://www.dailytelegraph.com.au/entertainment/music/enrique-iglesias-talks-insomnia/story-e6frexl9-1111113723704 from the original on December 3, 2012. பார்க்கப்பட்ட நாள் November 29, 2008. {{cite web}}: |archiveurl= missing title (help)
 23. JP. "Enrique Iglesias chats to Graham Norton". பார்க்கப்பட்ட நாள் November 29, 2008.
 24. Jon Wiederhorn. "What's Up With Your Face, Enrique? Hmm, Something's Missing... - Singer removed mole after a doctor told him it could be cancerous". www.MTV.com. பார்க்கப்பட்ட நாள் August 21, 2003.

புற இணைப்புகள்[தொகு]

வார்ப்புரு:Enrique Iglesias

"https://ta.wikipedia.org/w/index.php?title=என்றீக்_இக்லெசியாசு&oldid=3574994" இலிருந்து மீள்விக்கப்பட்டது