உள்ளடக்கத்துக்குச் செல்

எதுவார்தோ காலியானோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எதுவார்தோ காலியானோ
Eduardo Galeano
எதுவர்தோ காலியானோ-2012 இல்
எதுவர்தோ காலியானோ-2012 இல்
பிறப்புஎதுவார்தோ கெர்மான் மரியா இயூசு காலியானோ
(1940-09-03)3 செப்டம்பர் 1940
மொண்டேவீடியோ, உருகுவை
இறப்பு13 ஏப்ரல் 2015(2015-04-13) (அகவை 74)
மொண்டேவீடியோ, உருகுவை
தொழில்எழுத்தாளர், இதழாளர்
தேசியம்உருகுவே நாட்டவர்
காலம்20 ஆம் நூற்றாண்டு
துணைவர்எலனா வில்லாகரா

எதுவார்தோ காலியானோ (Eduardo Hughes Galeano, செப்டம்பர் 3, 1940 - ஏப்பிரல் 13, 2015) இலத்தின் அமெரிக்க நாடுகளின் முன்னணி எழுத்தாளர், புதின ஆசிரியர், இதழாளர் எனக் கொண்டாடப்படும் அறிஞர் ஆவார். உருகுவை நாட்டினரான இவர் சோசலிசம், தேசிய இன மக்கள் விடுதலை ஆகியவற்றைப் பரப்பியவர். ஒட்டுமொத்த இலத்தீன் அமெரிக்காவின் வலுவான போர் எதிர்ப்புக் குரல்களில் ஒன்றாகத் திகழ்ந்தவர்.[1]

பத்திரிக்கை, எழுத்துப்பணி[தொகு]

எதுவார்தோ காலியானோ உருகுவை நாட்டின் மொண்டேவீடியோ நகரில் ஒரு கத்தோலிக்க நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தார்.[2] உருகுவே சோசலிஸ்டு கட்சியின் பத்திரிக்கையில் கருத்துப் படங்கள் வரைந்தார். அறுபதுகளில் பத்திரிக்கையாளராகத் தொடங்கிய காலியானோ 'மார்ச்சா' என்னும் அரசியல் பண்பாட்டு இதழை வெளியிட்டார். சீன நாட்டுக்குப் பயணம் செய்து அங்கு தாம் பெற்ற அனுபவங்களை ஒரு நூலில் எழுதியுள்ளார். குவாத்தமாலா சென்று அந்நாட்டில் நிகழ்ந்த கொரில்லா போராட்டம் பற்றியும் எழுதினார். 1973 இல் இராணுவப் புரட்சி ஏற்பட்டதைத் தொடர்ந்து ஆர்ஜென்டீனாவில் தஞ்சம் புகுந்தார்.[3] ஆர்ஜண்டீனாவிலும் அடக்குமுறை நிகழ்த்தப்பட்டது.[4] எனவே அங்கிருந்து எசுப்பானியா சென்று அடைக்கலம் புகுந்தார். எசுப்பானியாவில் வாழ்ந்தபோது தம் சுய வரலாற்றை எழுதினார். 1985 இல் சர்வாதிகார ஆட்சி ஒழிந்ததும் உருகுவே திரும்பினார்.

கருத்துகள்[தொகு]

சர்வ தேச நிதியம், உலக வங்கி, நவ தாராளமயவாதப் பொருளாதாரம், நுகர்வுப் பொருள்களுக்கான விளம்பரங்கள், சூப்பர் மார்க்கட்டுகள், கால் பந்து உலகக் கோப்பைப் போட்டிகள், கார்ப்பொரட் ஊடகங்கள், மத நிறுவனங்கள் ஆகிய எல்லாமே ஏழை நடுத்தர மக்கள் மீது உலக முதலாளித்துவம் நடத்தும் போர்கள் என்பதை வலுவாகச் சொன்னவர். கலியோனாவின் படைப்புகள் 'உலக முதலாளித்துவமும் சுற்றுச் சூழல் மாசும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் ஆகும்' என்னும் கருத்தை வலியுறுத்தின.

ஐரோப்பாவும் அமெரிக்காவும் உண்டு கொழுக்க இலத்தீன் அமெரிக்க நாடுகளின் மக்கள் துன்பத்திற்கு ஆளாகி சுரண்டப்படுகிறார்கள் என்று எழுதி வந்தார். இலத்தீன் அமெரிக்க மக்கள் வறுமையினால் செத்துக்கொண்டுள்ளனர் என்னும் உண்மை மறைக்கப்படுகிறது என்பதையும் பரப்பினார்.

எழுதிய முக்கிய நூல்கள்[தொகு]

  • இலத்தின் அமெரிக்காவின் திறந்த நாளங்கள் (Las venas abiertas de América Latina)
  • போரின் காதலின் பகல்களும் இரவுகளும் (Días y noches de amor y de guerra)
  • தீயின் நினைவுகள் (Memoria del fuego)
  • காலத்தின் குழந்தைகள்: மனித வரலாற்றில் ஒரு நாள்காட்டி

காலியானோ கால் பந்து விளையாட்டத்தில் ஆர்வம் கொண்டவர்.அதனைப் பற்றியும் ஒரு நூல் எழுதினார். அவருடைய பல நூல்கள் 20 மொழிகளுக்கும் மேல் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. பீடல் காஸ்ட்ரோ, சாவேஸ், பெரான் போன்ற தலைவர்களைச் சந்தித்து நேர்காணல் பதிவு செய்தார்.

புகழ்[தொகு]

2009 ஆம் ஆண்டில் திரினிதால் என்னும் நகரில் நிகழ்ந்த உச்சி மாநாட்டில் வெனிசுவேலா நாட்டின் குடியரசுத் தலைவர் சாவேஸ் அமெரிக்க நாட்டின் தலைவர் பராக் ஒபாமாவைச் சந்தித்துப் பேசியபோது காலியானோ எழுதிய இலத்தின் அமெரிக்காவின் திறந்த நாளங்கள் (Open Veins of Latin America) (1971) என்னும் புகழ் பெற்ற நூலை பராக் ஒபாமாவிடம் வழங்கினார். இதன் விளைவாக இந்த நூலின் பெயரும் புகழும் உலகம் முழுக்கப் பரவியது.

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எதுவார்தோ_காலியானோ&oldid=3271216" இலிருந்து மீள்விக்கப்பட்டது