எட்வர்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

எட்வர்டு 1 (1239-1307)[தொகு]

                   இங்கிலாந்து அரசர். இவர் தந்தை மூன்றாம் ஹென்ரி இறந்தபின் 1272-ல் பட்டத்துக்கு வந்தார். 1276-ல் வெல்ஷ் மக்களுடன் போர்தொடங்கி 10 ஆண்டுகளுக்குப்பின் அவர்களை வெற்றிகொண்டார். அது முதல் வேல்ஸ் நாடு இங்கிலாந்தின் ஒரு பாகமாயிற்று. அது முதல் இங்கிலாந்துப்பட்டத்து இளவரசர் வேல்ஸ் இளவரசன் என்னும் பட்டம் பெற்று வந்தார், ஸ்காட்லாந்து மீது படையெடுத்துச் சென்று, அந்நாட்டு கலகத்தை அடக்கி, அதை இங்கிலாந்துடன் இணைப்பதில் தம் வாழ்க்கையில் பெரும்பகுதியைக் கழித்தார். எனினும் ஸ்காட்லாந்து மக்களின் கலகத்தை முற்றிலும் அடக்க இவரால் முடியவில்லை. ஸ்காட்லாந்து மன்னர் புரூசை அடக்குவதற்கு இங்கிலாந்திலிருந்து புறப்பட்ட எட்வர்டு வழியில் மரணமடைந்தார். பார்லிமென்டின் உத்தரவு பெற்றே வரிகள் வசூலிக்கப்பட வேண்டும் என்பதை இம்மன்னர் ஏற்றுக்கொண்டார். அரசாங்கத்தில் பல சீர்த்திருத்தங்களைச் செய்தார். நிலமானிய திட்டத்தை ஒழிப்பதற்குக் கொண்டுவரப்பட்ட சட்டங்களையும் கிறிஸ்தவத் திருச்சபையாரின் அதிகாரங்களை ஓரளவு குறைப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட சட்டங்களையும் ஆதரித்தார். இதுபற்றியே ரோமானிய சாம்ராஜ்ஜியத்தில் சட்டங்கள் வகுப்பதில் புகழ்பெற்றிருந்த ஜஸ்டினியன் மன்னர் பெயரை வைத்து இவரை 'இங்கிலாந்து ஜஸ்டினியன்' என்று அழைத்தனர்.

எட்வர்டு 2 (1284-1327)[தொகு]

                    இவர் இங்கிலாந்து நாட்டு 1-ம் எட்வர்டின் மகன். 1307-ல் தந்தை இறந்ததும் மன்னர் ஆனார். இவர் ஆட்சித்திறமை யற்றவர். இவரால் ஸ்காட்லாந்து மக்களை அடக்க முடியவில்லை. 1314-ல் அந்நாட்டினர் பானக்பர்ன் போரில் வெற்றிபெற்றுத் தம் சுதந்திரத்தைத் திரும்பிப் பெற்றனர். 1327-ல் பார்லிமென்டு இவரை அரசப் பதவியிலிருந்து நீக்கி, இவர் மகன் எட்வர்டை அரசனாக்கிற்று. பிறகு தம் அரசியின் காதலன் மார்ட்டிமரால் கொலையுண்டார். 

எட்வர்டு 3 (1312-1377)[தொகு]

                                 இவர் 2-ம் எட்வர்டின் மகன், அவருக்குப்பின் இங்கிலாந்து நாட்டை

ஆட்சிபுரிந்தவர். இவர் ஸ்காட்லாந்தின் மீது படையெடுத்துச் சென்றார், எனினும் அந்நாட்டு மக்களின் சுதந்திர வுணர்ச்சியை இவரால் முற்றிலும் ஒடுக்க முடியவில்லை. இவர் பிரெஞ்சு முடிக்குப் பாத்தியதை கொண்டாடி, ஐரோப்பிய வரலாற்றில்

"நூறாண்டுப் போர்" என வழங்கும் போரைத் தொடங்கினார். ஆங்கிலேயர் கிரெசி என்னும் இடத்தில் பிரெஞ்சுக்காரரை முறியடித்தனர், ஆயினும் நீடித்து நடந்த இப்போரில் ஆங்கிலேயர்கள் தளர்ச்சி அடைந்து போரிலிருந்து விலகிக்கொண்டனர். கைப்பற்றிய பல பகுதிகளையும் கைவிட்டனர். 3-ம் எட்வர்டு மன்னர் தம் ஆட்சியின் பிற்பகுதியில் பல முறை தம் பார்லிமென்டுடன் பிணங்கி அதன் ஆதரவை இழந்தார்.

எட்வர்டு 4 (1442-1483)[தொகு]

                            இங்கிலாந்து மன்னர் 3-ம் எட்வர்டு இறந்ததும், அரசுரிமை பற்றி யார்க் வமிசத்தினர்க்கும் லங்காஸ்ட்டர் வமிசத்தினர்க்கும் இடையே யுத்தம் நடந்தது. இதற்கு ரோஜா யுத்தம் என்று பெயர். யார்க் கோமகன் ரிச்சர்ட்டின் மகன் எட்வர்டு என்பவர் யார்க் கட்சியினருக்குத் தலைமை பூண்டு போர் புரிந்து லங்காஸ்டர் வமிசத்தைச் சேர்ந்த 6-ம் ஹென்ரியிடமிருந்து இங்கிலாந்தின் அரசுரிமையைப் பெற்று 1461-ல் 4-ம் எட்வர்டு ஆனார். எனினும் இவரை ஆதரித்த வார்விக் பிரபு 1469-ல் லங்காஸ்ட்டர் பக்கத்தில் சேர்ந்திடவே, இவர் நாட்டைவிட்டு ஹாலந்திற்கு ஓடினார். இரண்டாண்டுகள் சென்றபின் இவர் பெரும்படையுடன் திரும்பி வந்து பார்னெட், டியூக்ஸ்பரி என்னுமிடங்களில் 1471-ல் பகைவரை முறியடித்து, இழந்த அரசுரிமையைப் பெற்றார். இவர் மன்னர்களின் அதிகாரத்தைப் பலப்படுத்தி, டூடர் மன்னர்களின் ஏகாதிபத்தியத்துக்கு அடிக்கோலினார், 

எட்வர்டு 5 (1470-1483)[தொகு]

                           இங்கிலாந்து மன்னர். 4-ம் எட்வர்டின் மகன். தந்தைக்குபின் பட்டத்துக்கு வந்தார். வந்தபோது வயது பதின்மூன்று. ஆனால், பட்டத்துக்கு வந்த ஆண்டிலேயே முடிசூட்டு விழா நடைபெறுமுன் எட்வர்டையும் 

இவருடைய தம்பி யார்க் பிரபுவையும் இவருடைய சிறிய தந்தை கிளஸ்ட்டர் பிரபு லண்டன் டவரில் சிறையிலிட்டு கொலையுண்ணுமாறு செய்தார். அதன்பின் கிளஸ்ட்டர் பிரபுவே இங்கிலாந்தின் ஆட்சியை மேற்கொண்டார்.

எட்வர்டு 6 (1537-1553)[தொகு]

                           டூடர் வமிசத்தைச் சேர்ந்த ஆங்கில அரசர். 8-ம் ஹென்ரியின் மூன்றாவது மனைவியாகிய ஜேன் சீமருக்குப் பிறந்தவர். பிராட்டெஸ்டென்டு மதத்தினர். இவர் உறவினரான எட்வர்டு சீமரே அரசியல் அலுவல்களைக் கவனித்து வந்தார். தாமஸ் கிரான்மர் எழுதிய முதல் பிரார்த்தனே என்னும் நூலும், மத சம்பந்தமான சட்டங்கள் என்னும் நூலும் இவர் காலத்திலே வெளிவந்தன. 

எட்வர்டு 7 (1841.1910)[தொகு]

சாக்சி-கோபர்க் வமிசத்தைச் சேர்ந்தவர். இவர் விக்டோரியா மகாராணியின் மூத்த மகன். 1901 விக்டோரியா இறந்த பின் முடி சூடினார். ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ், எடின்பரோ கல்லூரிகளில் படித்தவர். பிறகு, பல முக்கிய நாடுகளைச் சுற்றிப் பார்த்துவந்தார். முதன் முதல் குடியேற்ற நாடுகளுக்குச் சென்ற இங்கிலாந்து இளவரசர் இவர்தாம். 1863-ல் பிரபுக்கள் சபையில் உறுப்பினரானார், இவர் கலை வளர்ச்சியில் ஆர்வம் கொண்டவர். இசைக் கல்லூரி ஒன்றை நிறுவினார். விளையாட்டுக்களில் பிரியம் உடையவர். குதிரைப் பந்தயங்களுக்கு ஆதரவு அளித்தவர். இவருக்கு மக்கள் ஐவர். இவருடைய இரண்டாம் புதல்வரான ஜார்ஜ் பிரெடெரிக் என்பவர் 5-ம் ஜார்ஜாக 1910-ல் பட்டத்துக்கு வந்தார்.

[1]

 1. http://www.tamilvu.org/library/libindex.htm
"https://ta.wikipedia.org/w/index.php?title=எட்வர்டு&oldid=2380264" இருந்து மீள்விக்கப்பட்டது