எட்டி விருது
எட்டி என்பது சங்ககால விருதுகளில் ஒன்று. சிறந்த உள்நாட்டு வணிகனுக்கு அரசனால் இது வழங்கப்பட்டது. எட்டிய நிலங்களில் உள்ள பொருள்களைப் பிறருக்குக் கிட்டும்படி செய்பவன் எட்டி. இந்த எட்டி என்னும் சொல் இக்காலத்தில் செட்டி என மருவி வழங்குகிறது.
தொல்காப்பியம் இதனைச் சுட்டுகிறது. உயர்திணைச் சொல் எல்லா வழியும் இயல்பாகப் புணரும். அவற்றுள் ‘இ’ எழுத்தில் முடியும் சொல் வருமொழி ஒற்று மிக்கும் வரும். [1][2]
இதற்கு உரையாசிரியர் இளம்பூரணர் எட்டிப்பூ, எட்டிப்புரவு என எடுத்துக்காட்டுத் தருகிறார். யாழிசையில் சிறந்து விளங்கும் பாணனுக்குப் பொன்னால் செய்யப்பட்ட தாமரைப்பூ வழங்கப்பட்டது போல சுறந்த வணிகனுக்குப் பொன்னால் செய்த எட்டிப்பூ வழங்கி அரசன் சிறப்பித்தான் எனத் தெரிகிறது.
- எட்டிப்பூ – எட்டி விருது பெற்றவனுக்கு வழங்கப்பட்ட பூ
- எட்டிப்புறவு – எட்டி விருது பெற்றவனுக்கு இறையிலியாக வழங்கப்பட்ட நிலம்
காவிதிப்பூ, காவிதிப்புறவு என்பன காவிதி விருது பெற்ற உழவனுக்கு வழங்கப்பட்டவை. இவற்றை இங்கு ஒப்புநோக்கிக் கொள்வது நன்று.
தருமதத்தன் என்னும் வணிகன் எட்டி விருது பெற்றதை மணிமேகலை காப்பியம் குறிப்பிடுகிறது.[3]
- காண்க - பண்டைய தமிழர் விருதுகள்
அடிக்குறிப்பு
[தொகு]- ↑
உயிர் ஈறு ஆகிய உயர்திணைப் பெயரும்
புள்ளி இறுதி உயர்திணைப் பெயரும்
எல்லா வழியும் இயல்பு என மொழிப. (தொல்காப்பியம் தொகைமரபு 11) - ↑
அவற்றுள்,
இகர ஈற்றுப் பெயர் திரிபு இடன் உடைத்தே. (தொல்காப்பியம் தொகைமரபு 12) - ↑
வாணிக மரபின் வருபொருள் ஈட்டி
நீள்நிதிச் செல்வனாய் நீள்நில வேந்தனின்
எட்டிப் பூப்பெற்று இருமுப் பதிற்றியாண்டு
ஒட்டிய செல்வத்து உயர்ந்தோன் ஆயினன். 115