தருமதத்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தருமதத்தன் புகார் நகரத்தில் வாழ்ந்த வணிகன் ஒருவனின் மகன். இவனது மாமன் மகள் விசாகை. விசாகையின் கற்பினையும், இந்தக் கற்பரசியைக் கெடுக்க முயன்ற மகன் கையை நாடாளும் தந்தை வெட்டி வீழ்த்தி அறநெறி காத்தது பற்றியும் மணிமேகலை நூல் குறிப்பிடுகிறது.[1]

தருமதத்ததன் தன் மாமன் மகள் விசாகையுடன் தகாத உறவு கொண்டிருந்ததாக ஊர்மக்கள் தவறாறாகப் பேசிக்கொண்டனர். தருமதத்தனின் பெற்றோரும் அவ்வாறே எண்ணி மகனைக் கண்டித்தனர். அதனால் மனம் உடைந்த தருமதத்தன், விசாகையை மனமாற விரும்பினாலும், புகார் நகரத்தையே விட்டுவிட்டு மதுரைக்குப் போய்விட்டான்.[2] தருமதத்தன் மதுரையில் பெரும்பொருள் ஈட்டினான். வணிகருள் சிறந்தவருக்கு வழங்கப்படும் எட்டி என்னும் விருதினையும் பெற்றான்.[3] தன் 64 ஆம் அகவையில் தன் சொந்த ஊர் புகார் திரும்பிய அவன் தன் மாமன் மகள் மூப்பினைக் கண்டு பேசுகிறான்.[4] பின்னர் தானும் தன் மாமன் மகள் விசாகையும் சேர்ந்து தான் ஈட்டிக் கொண்டுவந்த பொருளைக் கொண்டு அறம் செய்கிறான்.[5]

மேற்கோள்[தொகு]

 1. சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை - 22 சிறைசெய் காதை
 2.  தரும தத்தனும் தன்மா மன்மகள்
  விரிதரு பூங்குழல் விசாகையை அல்லது
  பெண்டிரைப் பேணேன் இப்பிறப்பு ஒழிகெனக் 110
  கொண்ட விரதம் தன்னுள் கூறி

 3.  வாணிக மரபின் வருபொருள் ஈட்டி
  நீள்நிதிச் செல்வனாய் நீள்நில வேந்தனின்
  எட்டிப் பூப்பெற்று இருமுப் பதிற்றியாண்டு
  ஒட்டிய செல்வத்து உயர்ந்தோன் ஆயினன். 115

 4. நம்முள்நாம் அறிந்திலம் நம்மை முன்நாள்
  மம்மர் செய்த வனப்புயாங்கு ஒளித்தன?
  ஆறுஐந்து இரட்டி யாண்டுஉனக்கு ஆயதுஎன் 130
  நாறுஐங் கூந்தலும் நரைவிரா வுற்றன
  இளமையும் காமமும் யாங்குஒளித் தனவோ
  உளன்இல் லாள! எனக்குஈங்கு உரையாய்
  இப்பிறப்பு ஆயின்யான் நின்அடி அடையேன்
  அப்பிறப்பு யான்நின் அடித்தொழில் கேட்குவன் 135

 5. மிக்க அறமே விழுத்துணை ஆவது
  தானம் செய்எனத் தரும தத்தனும் 140
  மாமன் மகள்பால் வான்பொருள் காட்டி
  ஆங்குஅவன் அவளுடன் செய்த நல்அறம்
  ஓங்குஇரு வானத்து மீனினும் பலவால்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தருமதத்தன்&oldid=2433990" இருந்து மீள்விக்கப்பட்டது