உலக இளையோர் நாள் 2011
நாள் | 16–21 ஆகஸ்ட் 2011 |
---|---|
அமைவிடம் | மத்ரித், ஸ்பெயின் |
கருப்பொருள் | "அவரில் (இயேசு கிறிஸ்துவில்) வேரூன்றியவர்களாகவும் அவர் மீது கட்டியெழுப்பப்பட்டவர்களாகவும் (...) விசுவாசத்தில் உறுதியாக நில்லுங்கள் " (cf. கொலோ 2:7) |
உலக இளையோர் நாள் 2011 (World Youth Day 2011) என்பது இளைஞரை மையமாகக் கொண்டு, திருத்தந்தை பதினாறாம் பெனடிக்டின் பங்கேற்போடு எசுப்பானியா நாட்டு மத்ரித் நகரில் 2011ஆம் ஆண்டு ஆகத்து 16 முதல் 21ஆம் நாள் நடந்தேறிய கத்தோலிக்க திருச்சபையின் உலக இளையோர் நாள் நிகழ்ச்சி ஆகும்[1].
ஆஸ்திரேலியா நாட்டு சிட்னி நகரில் 2008ஆம் ஆண்டு நிகழ்ந்த உலக இளையோர் நாள் கொண்டாட்டத்தின்போது, நிறைவுத் திருப்பலி நிகழ்த்திய திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் 2011ஆம் ஆண்டு இளையோர் நாள் மத்ரித்தில் சிறப்பிக்கப்படும் என்று அறிவித்தார்.
எசுப்பானியா நாடு உலக இளையோர் நாள் கொண்டாட்டத்திற்குப் பொறுப்பேற்று நடத்தியது இது இரண்டாவது முறை ஆகும். முதல் முறை எசுப்பானியாவின் சந்தியாகோ தெ கொம்பொஸ்தேலா (Santiago de Compostela) என்னும் நகரில் 1989 ஆகஸ்டு 15 முதல் 20 வரை உலக இளையோர் நாள் நிகழ்ந்தது.
2011ஆம் ஆண்டு உலக இளையோர் நாள் கொண்டாட்டங்களுக்குப் பாதுகாவலர்களைக் குறிப்பிடுமாறு எசுப்பானியத் திருச்சபைத் தலைவர்கள் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்டைக் கேட்டுக்கொண்டார்கள். எனவே, புனித இரபேல் ஆர்னாய்ஸ் பரோன், புனித பிரான்சிஸ் சவேரியார், உழைப்பாளியான புனித இசிதோர், புனித மரியா தொர்ரீபியா, புனித அவிலா தெரசா, புனித லொயோலா இஞ்ஞாசி, புனித அவிலா யோவான், புனித லீமா ரோஸ், புனித சிலுவை யோவான், மற்றும் முத். திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் ஆகியோர் துணைப் பாதுகாவலர்களாகக் குறிக்கப்பட்டார்கள்.
2011ஆம் ஆண்டு உலக இளையோர் நாளின் மையப்பொருள்
[தொகு]இந்த உலக இளையோர் நாள் கொண்டாட்டத்தின் மையப் பொருள் அவரில் (இயேசு கிறிஸ்துவில்) வேரூன்றியவர்களாகவும் அவர் மீது கட்டியெழுப்பப்பட்டவர்களாகவும் (...) விசுவாசத்தில் உறுதியாக நில்லுங்கள் (கொலோசையர் 2:7) என்பதாகும்.
மத்ரித் நகரின் குவாத்ரோ வியேந்தோஸ் (Cuatro Vientos) வான்வெளி நிலையத்தில் சனிக்கிழமை விழிப்புத் திருப்பலியும் ஞாயிறு திருப்பலியும் நிகழ்ந்தன.
நிகழ்ச்சி நிரல்
[தொகு]2011ஆம் ஆண்டு ஆகத்து 8 முதல் 15 வரை
[தொகு]40க்கும் மேற்பட்ட எசுப்பானிய மறைமாவட்டங்களில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
2011ஆம் ஆண்டு ஆகத்து 16 முதல் 20 வரை
[தொகு]- ஆகத்து 16 (செவ்வாய்)
காலை 8.00: மத்ரித் நகரில் திருப்பயணியர் வருகை. உலக இளையோர் நாளில் பங்கேற்க முன்பதிவு செய்தவர்கள் விடியற்காலையிலிருந்தே தங்கள் அடையாள அட்டைகளையும் முதுகுப் பைகளையும் முன்குறிக்கப்பட்ட இடங்களில் பெற்றுக்கொள்ளுதல்.
மாலை 8.00: தொடக்கத் திருப்பலி. மத்ரித் நகரின் சிபேலெஸ் வளாகத்தில் நடக்கும் திருப்பலியில் மத்ரித் நகர் பேராயரும் பிற ஆயர்களும் குருக்களும் கலந்துகொள்ளுதல்.
மாலை 9.30க்கும் மேல்: பண்பாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகள்.
- ஆகத்து 17 (புதன்)
காலை 10.00: மறைக்கல்வி அமர்வுகள் மாலை 9.00 மணிக்கு மேலாக: கலை நிகழ்ச்சிகள், குறிப்பாக மகிழ்ச்சியின் இரவு என்னும் பெயரில் "எம்மானுவேல் சமூகம்" என்னும் அமைப்பு வழங்கிய நிகழ்ச்சி.
- ஆகத்து 18 (வியாழன்)
காலை 10.00: மறைக்கல்வி அமர்வுகள். நண்பகல் 12.00: திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் பரஹாஸ் வான்வெளி நிலையத்தில் வந்திறங்குதல். பிற்பகல் 2.40: நகரின் தெருக்கள் வழியாகத் திருத்தந்தை "திருத்தந்தை ஊர்தியில்" (Popemobile) பயணமாகத் திருத்தந்தைத் தூதரகம் (Nunciature) செல்லுதல். மாலை 7.300: சிபேலெஸ் வெளியில் இளையோர் நடுவே திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் வரவேற்புப் பெறுதல். மாலை 9:00 மணிக்கு மேலாக: கலை நிகழ்ச்சிகள்.
- ஆகத்து 19 (வெள்ளி)
காலை 10.00: மறைக்கல்வி அமர்வுகள்.
காலை 11.30: எல் எஸ்கோரியால் (El Escorial) என்னும் இடத்தில் திருத்தந்தை இளம் பெண் துறவியரையும் பல்கலைப் பேராசிரியர்களையும் சந்தித்தல்.
மாலை 7.30: ரெக்கொலேத்தோஸ் பாதை வழியே சிலுவைப் பாதை பக்திமுயற்சி நிகழ்தல்.
மாலை 9.00 மணிக்கு மேலாக: கலை நிகழ்ச்சிகள்.
- ஆகத்து 20 (சனி)
காலை 10.00: அல்முதேனா மறைமாவட்டக் கோவிலில் குருமாணவர்களுக்கான திருப்பலி நிறைவேற்றப்படல்.
மாலை 4.00: குவாத்ரோ வியெந்தோஸ் வான்வெளி நிலையத்தில் தயாரிப்பு நிகழ்ச்சிகள்: இளையோர் அங்குக் கூடி தத்தம் இடங்களில் அமர்வர். அப்போது மேடையில் இளையோர் வழங்கும் சான்று, இசை நிகழ்ச்சிகள், மரியாவுக்குச் செலுத்தும் வேண்டல்கள் போன்றவை திருவிழிப்புக்குத் தயாரிப்பாக நிகழும்.
மாலை 7.40: புனித இறை யோவான் நிறுவிய மருத்துவ சபையினரால் நடத்தப்படுகின்ற "புனித யோசேப்பு நிலையம்" (Fundación Instituto San José) என்னும் மருத்துவ மனைக்கு திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் வருகை தருகிறார்.
மாலை 8.30: திருத்தந்தையோடு திருவிழிப்பு: குவாத்ரோ வியெந்தோஸ்-க்குத் திருத்தந்தை வருகிறார். நற்கருணை ஆராதனை தொடங்குகிறது.
மாலை 11.00: குவாத்ரோ வியெந்தோசில் இரவு: அதிகாலையிலிருந்தே திருப்பயணியர் நற்கருணை ஆராதனை செலுத்த வரத்தொடங்கினர். ஆராதனை மேடையை வடிவமைத்தவர் இக்னாசியோ விசென்ஸ் (Ignacio Vicens) என்பவர். இக்கலைஞர் இதற்குமுன் எசுப்பானியாவில் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலின் ஆட்சியின்போது (1989) நிகழ்ந்த உலக இளையோர் நாளின்போது மேடை அமைப்புக்கு உதவி செய்தவர்.
உலக இளையோர் நாள் 2011இல் மக்கள் பங்கேற்பு
[தொகு]இந்த உலக இளையோர் நாளில் மக்களின் பங்கேற்பு எதிர்பார்ப்புக்கு மேலாகவே அமைந்தது. எனவே அவர்களுக்கு வசதிகள் செய்துகொடுக்கும் வேலையும் அதிகமாயிற்று. ஆகத்து 20 சனிக்கிழமை மாலை 7 மணிக்கு குவாத்ரோ வியந்தோஸ் வான்வெளி நிலையத்தில் சுமார் 1,000,000 மக்கள் கூடியிருந்தனர் என்று மதிப்பிடப்பட்டது. எசுப்பானியாவில் இதுவரை நிகழ்ந்துள்ள சமயம் சார்பான பெரும் நிகழ்ச்சி இதுவே. பொதுப் போக்குவரத்து வசதி இருந்தபோதிலும் பல திருப்பயணியர் மத்ரித் நகர மையத்திலிருந்து சுமார் 12.6 கிலோமீட்டர் தூரம் கால்நடையாகவே சென்று பொதுக்கூட்ட இடத்தை அடைந்தனர்.
திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் வந்து சேர்ந்ததும் ஒரு பெரிய சிலுவை பீடத்திற்கு ஊர்வலமாகக் கொண்டுசெல்லப்பட்டது. பல இளைஞர்கள் திருத்தந்தையிடம் கேள்விகள் கேட்பதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், பெருங்காற்றும், இடிமின்னலும் ஏற்பட்டதால் திருத்தந்தையின் உரை எழுத்துவடிவில் மக்களுக்குக் கொடுக்கப்பட்டது.
மழை நின்றபின் திருத்தந்தை நற்கருணை ஆராதனையைத் தொடர்ந்தார். நிகழ்ச்சியும் சிறிதே குறுக்கப்பட்டது. திருத்தந்தை நிறைவேற்றிய திருப்பலியின்போது மக்களுக்கு நற்கருணை வழங்கப்பட்டது. கூட்டத்திலிருந்த பலர் இரவு முழுவதும் பொதுக்கூட்ட இடத்திலேயே இருந்தனர். ஞாயிறு காலைத் திருப்பலி அதற்கு முந்திய இரவுத் திருப்பலி சுருக்கப்பட்டதற்கு நேர்மாறாக விரிவான விதத்தில் நிகழ்ந்தது.
- ஆகத்து 21 (ஞாயிறு)
காலை 9.30: திருத்தந்தை ஆயிரக்கணக்கான ஆயர்கள், குருக்களோடு இறுதியாகத் திருப்பலி நிறைவேற்றுகிறார். திருப்பலியின் இறுதியில் அவர் அடுத்து வரவிருக்கின்ற உலக இளையோர் நாள் எங்கு நடைபெறும் என்பதை அறிவிக்கிறார்.
மாலை 5:30: தன்னார்வாளர்களோடு சந்திப்பு: திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் உலக இளையோர் நாள் கொண்டாட்டத்திற்குப் பல்வகைகளில் துணைபுரிந்த தன்னார்வாளர்களைச் சந்தித்துப் பேசுகிறார். மாலை 6.30: பரஹாஸ் வான்வெளி நிலையத்தில் திருத்தந்தைக்கு வழியனுப்பு விழா நடைபெறுகிறது.
எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
[தொகு]திருத்தந்தை எசுப்பானியாவுக்கு வருகை தரும்போது பொதுப்பணம் செலவழிப்பதை எதிர்த்து சிலர் ஆகத்து 17ஆம் நாள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் 8 பேர் கைதுசெய்யப்பட்டனர்; 11 பேர் காயமடைந்தனர்.
அடுத்த உலக இளையோர் நாள் அறிவிப்பு
[தொகு]ஆகத்து 21ஆம் நாள் நடந்த இறுதித் திருப்பலியின்போது திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அடுத்த உலக இளையோர் நாள் எங்கே நிகழும் என்பதை அறிவித்தார். மூன்று ஆண்டுகளுக்குப் பின் 2014க்குப் பதிலாக 2013இல் உலக இளையோர் நாள் நிகழும் என்று அறிவிக்கப்பட்டது. அந்நிகழ்ச்சி பிரேசில் நாட்டில் ரியோ டி ஜனேரோ (Rio de Janeiro) நகரில் நடைபெறும் என்று திருத்தந்தை அறிவித்தார். இச்செய்தி ஒருசில மாதங்களுக்கு முன்னரே வெளியாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 2014ஆம் ஆண்டில் உலகக் கால்பந்து கோப்பை விளையாட்டுகள் பிரேசில் நாட்டில் நடக்கவிருப்பதால், அந்நாட்டிலேயே நிகழவிருக்கின்ற உலக இளையோர் நாள் ஓராண்டு முன்தள்ளிப் போடப்பட்டுள்ளது.