ஈரோடு புத்தகத் திருவிழா
| ஈரோடு புத்தகத் திருவிழா | |
|---|---|
| நிகழ்நிலை | செயற்பாட்டிலுள்ளது |
| நிகழிடம் | நகராட்சித் திடல், வ. உ. சி. பூங்கா, ஈரோடு |
| அமைவிடம் | ஈரோடு |
| நாடு | இந்தியா |
| முதல் நிகழ்வு | ஆகஸ்டு 2005 |
| இணையத்தளம் | |
ஈரோடு புத்தகக் கண்காட்சி அல்லது ஈரோடு புத்தகத் திருவிழா என்பது தமிழ்நாட்டின் ஈரோடு மாநகரில் “மக்கள் சிந்தனைப் பேரவை” என்கிற அமைப்பின் மூலம் ஆண்டுதோறும் வ. உ. சி. பூங்காவில் நடத்தப்படும் ஒரு புத்தகக் கண்காட்சியாகும். இப்புத்தகக் கண்காட்சியில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் மற்றும் இந்தியாவின் முக்கிய பதிப்பகங்கள் சிலவும் கலந்து கொள்கின்றன. 2005-ஆம் ஆண்டு முதல் இந்தக் கண்காட்சி ஆண்டுதோறும் நடத்தப் பெற்று வருகின்றது.
தமிழ் நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய புத்தகத் திருவிழாவாக சென்னை புத்தகத் திருவிழாவிற்கு அடுத்து இடத்தைப் பெற்றுள்ளது.[1][2]
கண்காட்சியின் உருமாற்றமே கலாச்சார விழா
[தொகு]ஈரோடு புத்தகத் திருவிழா 12 நாள் நிகழ்ச்சியாக நடைபெறுகிறது. பல்வேறு புத்தக வெளியீட்டாளர்கள், வெளியிட்ட புத்தகங்களை விற்பனைக்குக் காட்சிப்படுத்தப்படுவது மட்டுமல்லாது, சிறந்த பேச்சாளர்களின் மேடைச் சொற்பொழிவுகள், ஆராய்ச்சியாளர்களையும் புத்தக வெளியீட்டாளர்களையும் சிறப்பித்தல், பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் எனப் பல்வேறு நிகழ்ச்சிகள் விழாவில் இடம்பெறுகின்றன.
கண்காட்சி நடைபெறும் இடம் மற்றும் காலம்
[தொகு]பொதுவாக ஒவ்வோர் ஆண்டும் சூலை மாதத்தின் கடைசி வாரம் முதல் ஆகத்து மாதத்தின் மூன்றாவது வாரம் ஆகியவற்றிற்கு இடையேயுள்ள எதாவது 12 நாட்களுக்கு இத்திருவிழா நடைபெறும். ஈரோடு வ. உ. சி. (V.O.C.) பூங்கா அருகில் உள்ள நகராட்சி மைதானத்தில் வழக்கமாக நடைபெறுகிறது. 230 புத்தக வெளியீட்டாளர்கள் பங்கு கொண்டு கடைகளை அமைக்கின்றனர். புத்தகத் திருவிழா மூலம் சராசரியாக ஆறு கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்படுகிறது. கண்காட்சி காலை 11 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும். புத்தகத் திருவிழாவிற்கு அனுமதி இலவசம்.[3][4][5]
பிரபலங்கள் பங்கேற்பு
[தொகு]கலாச்சார விழாவின் ஒரு பகுதியாக, பல்வேறு பிரபலங்கள், வெவ்வேறான தலைப்புகளில் பேச இங்கு அழைக்கப்படுகின்றனர். இந்தியாவின் முன்னாள் சனாதிபதியான டாக்டர். ஏ. பி. ஜே. அப்துல் கலாம் இந்த விழாவில் பங்கேற்று இரண்டு முறை உரையாற்றியுள்ளார். நடிகர் சிவகுமார், இசையமைப்பாளர் இளையராஜா, புஷ்பவனம் குப்புசாமி, சுகி சிவம், சாலமன் பாப்பையா போன்ற பிற பிரபலங்களும் இவ்விழாவில் அடிக்கடி பங்கேற்பவர்களாவர். [6][7]
ஜி. டி. நாயுடு விருது
[தொகு]2016-ஆம் ஆண்டில், புத்தக விழாவின் ஒரு பகுதியாக, அறிவியல் துறையில் இளம் ஆராய்ச்சியாளர்களை கௌரவிப்பதற்காக ஜி. டி. நாயுடு விருது உருவாக்கப்பட்டது. மேலும் இந்த விருதுக்கு இந்திய கண்டுபிடிப்பாளரும் பொறியியலாளருமான கோபால்சாமி துரைசாமி நாயுடுவின் பெயரிடப்பட்டுள்ளது. ஆராய்ச்சி செய்யும் இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக இவ்விருது வழங்கப்படுகிறது. விருதுடன் ஒரு லட்சம் ரொக்கப்பணமும் வழங்கப்படுகிறது. [8]
ஈரோடு புத்தகத் திருவிழா - 2017
[தொகு]ஈரோடு புத்தகக் கண்காட்சியின் 13-ஆவது பதிப்பு 2017 ஆகத்து மாதம் நான்காம் தேதி முதல் 2017 ஆகத்து 15-ஆம் தேதி வரை 12 நாட்களுக்கு வ. உ. சி. (V.O.C.) பூங்கா அருகே உள்ள நகராட்சி மைதானத்தில் நடைபெறத் திட்டமிடப்பட்டது. .[9]
கண்காட்சி அரங்குகள்
[தொகு]12 நாட்கள் நடத்தப் பெறும் இக்கண்காட்சியில் பதிப்பகங்கள் அல்லது விற்பனையாளர்களுக்குத் தனித்தனியாக கடைகள் அமைக்கப்படும். இந்தக் கடைகளில் புத்தகங்கள் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்படும். இக்கண்காட்சி காலை 11 மணிக்குத் தொடங்கி இரவு 10 மணி வரை செயல்படும்.
2014-ஆம் ஆண்டிற்கான ஈரோடு புத்தகத் திருவிழா
[தொகு]ஆகஸ்ட் 1-இல் ஈரோடு, வ. உ. சி. பூங்கா மைதானத்தில் துவங்கியது. ஆகஸ்டு 12 வரை நடைபெற்றது. ஆகஸ்டு 1 மாலை ஆறு மணிக்கு இசையமைப்பாளர் இளையராஜா துவக்கி வைத்தார்.
"தமிழ்வேள் கோ.சாரங்கபாணி நினைவு உலகத் தமிழர் படைப்பரங்கம்' என்ற உலகத் தமிழர் படைப்புகளுக்கான அரங்கில் பிற நாடுகளில் வசிக்கும் படைப்பாளர்களின் படைப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன.[10]
கருத்தரங்கம்
[தொகு]இக்கண்காட்சியில் மாலை 5. 30 மணிக்கு முக்கிய எழுத்தாளர்கள், தமிழறிஞர்கள் பங்கேற்கும் சொற்பொழிவுகள், கருத்தரங்குகள் போன்றவை இடம் பெற்றன.
திட்டமிடப்பட்ட சிறப்புரை நிகழ்ச்சிகள்: ஆகஸ்ட் 2014
[தொகு]| தேதி | நேரம் | தலைப்பு/நிகழ்ச்சி | தலைவர்கள் |
|---|---|---|---|
| ஆகஸ்ட் 1 | மாலை 6 மணி | தொடக்க விழா | இசையமைப்பாளர் இளையராஜா |
| ஆகஸ்ட் 2 | மாலை 6 மணி | தன்னம்பிக்கைத் தமிழ் | சுகி.சிவம் |
| ஆகஸ்ட் 3 | மாலை 6 மணி | கவியரங்கம் | கவிஞர் அப்துல் ரகுமான் |
| ஆகஸ்ட் 4 | மாலை 6 மணி | இன்னிசை நிகழ்ச்சி | புஷ்பவனம் குப்புசாமி, அனிதா குப்புசாமி குழுவினர் |
| ஆகஸ்ட் 5 | மாலை 6 மணி | இலக்கியத்தில் பெண்கள் | சொற்பொழிவாளர் நெல்லை கண்ணன் |
| ஆகஸ்ட் 6 | மாலை 6 மணி | பட்டிமன்றம் | பேராசிரியர் சாலமன் பாப்பையா |
| ஆகஸ்ட் 7 | மாலை 6 மணி | கசடறக் கற்க | பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் |
| ஆகஸ்ட் 8 | மாலை 6 மணி | அறிவே கடவுள் | கவிஞர் வைரமுத்து |
| ஆகஸ்ட் 9 | மாலை 6 மணி | மண் பயனுற வேண்டும் | பேராசிரியர் இளம்பிறை மணிமாறன் |
| ஆகஸ்ட் 10 | மாலை 6 மணி | வாழ்க்கை ஒரு வானவில் | நடிகர் சிவகுமார் |
| ஆகஸ்ட் 11 | மாலை 6 மணி | கம்பன் என்றொரு மானுடம் | ஆன்மிகச் சொற்பொழிவாளர் இலங்கை ஜெயராஜ் |
| ஆகஸ்ட் 12 | மாலை 6 மணி | நிறைவு விழா | முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் |
இதையும் பார்க்க
[தொகு]குறிப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Erode book festival from July 31". தி இந்து. http://www.thehindu.com/news/national/tamil-nadu/erode-book-festival-from-july-31/article7454250.ece. பார்த்த நாள்: 24 December 2016.
- ↑ "Erode book festival from July 31". தி இந்து. http://www.thehindu.com/news/national/tamil-nadu/Book-festival-from-August-5/article14546383.ece. பார்த்த நாள்: 24 December 2016.
- ↑ "வ.உ.சி. பூங்கா மைதானத்தில் 12 நாட்கள் நடைபெறும் ஈரோடு புத்தகத் திருவிழா 31–ந் தேதி தொடக்கம்". Daily Thanthi. http://www.dailythanthi.com/News/Districts/Erode/2015/07/22023228/Vauci-Park-grounds--Erode-Book-Festival-will-be-held.vpf. பார்த்த நாள்: 24 December 2016.
- ↑ "Good response to book festival". தி இந்து. http://www.thehindu.com/news/national/tamil-nadu/Good-response-to-book-festival/article14556762.ece. பார்த்த நாள்: 24 December 2016.
- ↑ "Erode book festival from August 5". Live Chennai. http://www.livechennai.com/detailnews.asp?catid=9&newsid=28254. பார்த்த நாள்: 24 December 2016.
- ↑ "70s actor has reinvented himself as an interpreter of epics". Times of India. http://timesofindia.indiatimes.com/india/70s-actor-has-reinvented-himself-as-an-interpreter-of-epics/articleshow/50578476.cms. பார்த்த நாள்: 24 December 2016.
- ↑ "Ilaiyaraja inaugurating the Erode Book fair". Kollytalk. Archived from the original on 25 திசம்பர் 2016. Retrieved 24 December 2016.
- ↑ "IISER professor wins G.D. Naidu Young Scientist Award". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/IISER-professor-wins-G.D.-Naidu-Young-Scientist-Award/article14574904.ece. பார்த்த நாள்: 24 December 2016.
- ↑ "Schedule of 13th Erode Book Festival". Erode Book Festival. Archived from the original on 9 அக்டோபர் 2016. Retrieved 24 December 2016.
- ↑ ஈரோடு புத்தகத் திருவிழா - தினமணி
- ↑ ஈரோடு புத்தகத் திருவிழா ஆகஸ்டு 2014