உள்ளடக்கத்துக்குச் செல்

ஈரானின் வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாரசீகம் என்றும் அழைக்கப்படும் ஈரானின் வரலாறு பெரிய ஈரான் எனச் சில சமயங்களில் அறியப்படும் பெரிய பகுதி ஒன்றுடன் பிணைக்கப்பட்டுள்ளது. பெரிய ஈரான் என்பது, மேற்கில் அனத்தோலியா, பொசுபோரசு, எகிப்து ஆகியவற்றில் இருந்து பண்டைக்கால இந்திய எல்லை வரையும்; கிழக்கில் சிர் டார்யாவும்; வடக்கில் காக்கேசியா, யூரேசியப் புல்வெளி என்பவற்றில் இருந்து தெற்கில் உள்ள பாரசீகக் குடா, ஓமான் குடா வரையும் உள்ள பகுதிகள் உள்ளடங்குகின்றன.

கிமு 7000 ஆண்டுக் காலப்பகுதிவரை பின்னோக்கிச் செல்லும் வரலாற்றுக் களங்களையும், நகரக் குடியேற்றங்களையும் தன்னகத்தே கொண்டு, உலகின் மிகப்பழைய தொடர்ச்சியான நாகரிகத்தின் இருப்பிடங்களுள் ஒன்றாக ஈரான் விளங்குகின்றது.[1] ஈரானின் தென்மேற்கு, மேற்கு ஆகிய பகுதிகள், தொடக்க வெங்கலக் காலத்தில் இருந்து எலத்தோடும், பின்னர் காசைட்டுகள், மன்னாயீன்கள், குட்டியன்கள் ஆகியோருடனும் பண்டைய அண்மைக் கிழக்கின் பங்காளிகளாக இருந்தன. கியோர்க் வில்கெம் ஃபிரீட்ரிச் ஏகெல் என்பார், பாரசீக மக்கள் உலகின் "முதல் வரலாற்று மக்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.[2] மீட்கள், ஈரானை ஒரு நாடாக ஒன்றிணைத்துப் பின்னர் கிமு 625 இல் பேரரசாக ஆக்கினர்.[3] சைரசுவால் நிறுவப்பட்ட அக்கிமெனிட் பேரரசே (கிமு 550 - 300) முதல் பாரசீகப் பேரரசு ஆகும். இது பால்கன் முதல் வட ஆப்பிரிக்கா வரையும் உள்ள பகுதிகளையும், நடு ஆசியாவையும் அதன் அதிகார மையமான பேர்சிசுவில் (பேர்செபோலிசு) இருந்து ஆட்சி செய்தது. இதன் ஆட்சிப் பகுதி மூன்று கண்டங்களில் பரவியிருந்தது. இதுவரை இருந்தவற்றுள் மிகப்பெரிய பேரரசும் உலகின் முதற் பேரரசும் இதுவே.[4] முதல் பாரசீகப் பேரரசே உலகின் 40% மக்களை ஒன்றிணைத்த ஒரே நாகரிகம் ஆகும். கீமு 480 இல் 112.4 மில்லியனாக இருந்த உலக மக்கள் தொகையில் 49.4 மில்லியன் மக்கள் பாரசீகப் பேரரசுக்குள் அடங்கியிருந்தனர்.[5] இப்பேரரசைத் தொடர்ந்து செலூசிட், பார்த்திய, சசானியப் பேரரசுகள் ஒன்றன் பின் ஒன்றாக 1000 ஆண்டுகள் ஈரானை ஆட்சி செய்ததுடன், ஈரானை மீண்டும் ஒரு முன்னணி வல்லரசாக ஆக்கின. ஈரானின் முக்கிய போட்டியாளர்களாக உரோமப் பேரரசும், பின்னர் பைசண்டியப் பேரரசும் இருந்தன. பெருமளவிலான ஈரானிய மக்களின் உள்நோக்கிய வருகையைத் தொடர்ந்து இரும்புக் காலத்தில் பாரசீகப் பேரரசு உருவானது. இம்மக்கள் மீட்சு, ஆக்கிமெனிட், பார்த்திய, சசானியப் பேரரசுகளை உருவாக்கினர்.

பாரசீகத்தை முசுலிம்கள் கைப்பற்றியதுடன், சசானியப் பேரரசு முடிவுக்கு வந்தது. இது ஈரானின் வரலாற்றில் ஒரு திருப்புமுனை ஆகும். ஈரானின் இசுலாம்மயப்படுத்தல் 8 ஆம் நூற்றாண்டு தொடக்கம் 10 ஆம் நூற்றாண்டு வரை இடம்பெற்றது. இது ஈரானிலும் அதைச் சார்ந்திருந்த பிற இடங்களிலும் சோரோவாசுட்டிரியனியம் வீழ்ச்சியடைந்தது. எனினும் முன்னைய பாரசீக நாகரிகத்தின் சாதனைகள் எதையும் ஈரான் இழக்கவில்லை. இவை பெருமளவுக்கு இசுலாமிய சமூகத்தாலும், நாகரிகத்தாலும் உள்வாங்கப்பட்டுவிட்டன.

தொடக்கப் பண்பாடுகளினதும், பேரரசுகளினதும் நீண்ட வரலாற்றைக் கொண்ட ஈரான், நடுக் காலத்தின் பிற்பகுதியிலும், நவீன காலத்தின் முற்பகுதியிலும் பெரும் பாதிப்புக்களுக்கு உள்ளானது. நாடோடிப் பழங்குடிகள் பல தடவைகள் நாட்டைக் கைப்பற்றி அதன் தலைவர்கள் நாட்டின் ஆட்சியாளர்கள் ஆனார்கள். இது நாட்டை எதிர்மறையாகப் பாதித்தது.[6] 1501 இல், சபாவிட் வம்சத்தின் கீழ், ஈரான் மீண்டும் ஒன்றாக்கப்பட்டது. இது சியா இசுலாமை ஈரானின் அரச மதமாக ஆக்கியது.[7] இது இசுலாமிய வரலாற்றில் ஒரு முக்கிய திருப்பமாக அமைந்தது.[8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Xinhua, "New evidence: modern civilization began in Iran", 10 Aug 2007, retrieved 1 October 2007
  2. Azadpour, M "HEGEL, GEORG WILHELM FRIEDRICH". Encyclopædia Iranica. அணுகப்பட்டது 2015-04-11. 
  3. http://www.britannica.com/ebc/article-9371723 Encyclopædia Britannica Concise Encyclopedia Article: Media
  4. David Sacks, Oswyn Murray, Lisa R. Brody; Oswyn Murray; Lisa R. Brody (2005). Encyclopedia of the Ancient Greek World. Infobase Publishing. pp. 256 (at the right portion of the page). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8160-5722-1.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
  5. "Largest empire by percentage of world population". Guinness World Records. பார்க்கப்பட்ட நாள் 2016-06-10.
  6. Baten, Jörg (2016). A History of the Global Economy. From 1500 to the Present. Cambridge University Press. p. 214. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781107507180.
  7. R.M. Savory, Safavids, Encyclopedia of Islam, 2nd edition
  8. "The Islamic World to 1600", The Applied History Research Group, The University of Calgary, 1998 பரணிடப்பட்டது 2008-06-12 at the வந்தவழி இயந்திரம், retrieved 1 October 2007
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈரானின்_வரலாறு&oldid=2604664" இலிருந்து மீள்விக்கப்பட்டது