இலங்கைப் பாதுகாப்புத் தரப்பினரின் பாலியல் வன்முறைகள்
இலங்கைப் பாதுகாப்புத் தரப்பினரின் பாலியல் வன்முறைகள் என்பது ஈழப் போரின் போது இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக பல தரப்பான இலங்கைப் பாதுகாப்பு தரப்பினராலும் திட்டமிட்ட முறையில் பாலியல் மற்றும் பால்நிலை சார்ந்த வன்முறைகள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டது ஆகும். பாலியல் வன்முறைகள் தொடர்பான பல அமைப்புகளினாலும் ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளன. இலங்கை மீதான ஐநா மனித உரிமை ஆணையர் அலுவலக விசாரணையும் இதனை வெளிகொணர்ந்துள்ளது. "இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் பெண்கள் மாத்திரமின்றி ஆண்களும் அடங்குவர்." அந்த அறிக்கை " பாலியல் வன்முறைகள் தனிப்பட்ட செயற்பாடுகளல்ல, அதற்குமாறாக அவை சித்திரவதை செய்வதனை நோக்காகக் கொண்ட கொள்கையின் அடிப்படையில் திட்டமிட்டுப் பாவிக்கப்பட்ட பொறிமுறைகளாகும் என்பது தெளிவாகின்றது." என்று குறிப்பாடச் சுட்டிக்காட்டுகின்றது.[1] மேலும் இந்த வன்முறைகளுக்காக ஒருவர் கூட இன்றுவரை சட்டத்தினால் தண்டிக்கப்படவில்லை..[2]
ஆதாரங்கள்
[தொகு]இலங்கை மீதான ஐநா மனித உரிமை ஆணையர் அலுவலக விசாரணை
[தொகு]“ | பாதுகாப்புப் படைத்தரப்பினரால் தடுத்துவைக்கப்பட்டோர் மீது குரூரமான பாலியல் வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டன என்பதுடன், இவ்வாறான பாலியல் வன்முறைகள் அதிகளவில் பிரயோகிகப்பட்டன எனும் அதிர்ச்சிகரமான விடயத்தை இவ்விசாரணை வெளிக்கொணர்ந்துள்ளது. இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் பெண்கள் மாத்திரமின்றி ஆண்களும் அடங்குவர். பாலியல் வன்முறையினால் பாதிக்கப்பட்ட முப்பது பேரிடம் பதிவு செய்யப்பட்ட துன்பகரமான சாட்சியங்களின் அடிப்படையில் பாலியல் வன்முறைகள் தனிப்பட்ட செயற்பாடுகளல்ல, அதற்குமாறாக அவை சித்திரவதை செய்வதனை நோக்காகக் கொண்ட கொள்கையின் அடிப்படையில் திட்டமிட்டுப் பாவிக்கப்பட்ட பொறிமுறைகளாகும் என்பது தெளிவாகின்றது. பாலியல் வன்முறைகளின; வடிவங்களை நோக்கும் போது, பாலியல் சித்திரவதைகள் விசாரணைகளின் போதும், பாலியல் வல்லுறவுகள் அனேகமாக விசாரணை இல்லாத வேறு சந்தரப்பங்களிலும் நடைபெற்றன என்பதை இவ்வறிக்கை விபரிக்கின்றது. பாலியல் சித்திரவதைகள் வெவ்வேறு விதமான தடுப்பு நிலையங்களிலும், பலவிதமான பாதுகாப்பு தரப்பினராலும், யுத்தத்தின் போதும் அதன் பின்பும் இழைக்கப்பட்டுள்ளன. பாலியல் வன்முறைகளை இழைத்தவர்களில் ஒருவர் கூட இன்று வரை சட்டத்தினால் தண்டனைக்குட்படுத்தப்பட்டதாக அறியக்கிடைக்கவில்லை." | ” |